Thursday 17 September 2015

வேலியே பயிரை மேய்ந்தது

  பண்டைக் காலத்தில் வாழ்ந்த சிபி சக்கரவர்த்தியை உங்களுக்குத் தெரியும். வேடன் ஒருவனிடமிருந்து தப்பித்துத் தன்னிடம் அடைக்கலம் என ஒரு புறா வந்தபோது அவர் அதைக் காப்பாற்றிய விதமும் உங்களுக்குத் தெரியும்.


    அப் புறாவை வேட்டையாட முயற்சி செய்த வேடனும் சக்கரவர்த்தியிடம் வந்து, “அந்தப் புறா அரியது, பெரியது எனக்கு உரியது” என வாதம் செய்கிறான். “நிறைவாக என்னதான் சொல்ல வருகிறாய்?” என்று சிபி கேட்கிறார். “அந்தப் புறாவின் எடைக்கு எடை உங்கள் தொடையிலிருந்து சதையை அரிந்து கொடுத்தால் புறாவை விட்டுவிடுகிறேன்” என்று அவன் கூற, அவ்வாறே தன் தொடைச் சதையைக் கொடுத்து தன்னிடம் அடைக்கலமாக வந்த அந்த அழகு புறாவைக் காப்பாற்றியதாக கதை செல்கிறது.

   இக் காலத்திலும் ஒரு சிபி இருந்தார். ஓர் அழகுப் புறா “என்னைக் காப்பாற்றுங்கள்” எனச் சொல்லி அவரிடம் அடைக்கலம் புகுந்தது. ஒரு வாரம் அதற்குத் தீனியும் நீரும் தந்து ஞாயிற்றுக் கிழமை அன்று அப் புறாவை வறுவல் செய்து சாப்பிட்டு ஏப்பம் விட்டார்.

    இந்தத் தாங்க முடியாத கொடுமை நடத்தது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில். இந்தக் கொடும்பாதகத்தைச் செய்தது கரூரைச் சேர்ந்த ஒரு பசுத் தோல் போர்த்திய கொடும் புலி. அதற்கு மாதவன் என்று பெயர்.

 பெயர் மாற்றப்படவில்லை.

    அது ஓர் அரசுப் பள்ளி ஆசிரியன். தன்னிடம்  பத்தாம் வகுப்புப் படிக்கும் பதினாறு வயது நிரம்பிய மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அவள் அசந்திருந்த நேரத்தில் தன் “கைவண்ணத்தை”க் காட்டி அவளது கற்பைக் களவாடிக் கொண்டது. காவல் துறையினர் ஏற்பாடு செய்த மருத்துவ ஆய்வில் நடந்தது உண்மை என தெரியவந்தது. இப்போது அது விசாரணைக் கைதியாக சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறது.

   கற்பைப் பறிகொடுத்தச் சிறுமி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கிறாள். காதலித்துக் கரம்பிடித்த அந்தக் காமுக விலங்கின் மனைவி அவமானத்தால் கூனிக் குறுகி ஊரார் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிக் கிடக்கிறாள். என்ன நடக்கிறது என்பது எதுவும் புரியாமல் இரண்டு குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் தம் அம்மாவின் அருகில் பழியாய்க் கிடக்கிறார்கள்; ஆம் பழி வந்ததால் பரிதவித்துக் கிடக்கிறார்கள்.

    ஆசிரியர் ஆகாதவர் இலக்கணத்தையும் மாணவர் ஆகாதவர் இலக்கணத்தையும் நன்னூல் இயற்றிய பவணந்தியார் எழுதியுள்ளார். நல்லாசிரியர் இலக்கணத்தையும் நல் மாணாக்கரது இலக்கணத்தையும் எழுதியுள்ளார். இதைத் தவிர எல்லாவற்றையும் ஆசிரியப் பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுப்பார்கள்!

   காமம் களவு உள்ளிட்ட  இழிகுண இயல்புடையவர், வஞ்ச மனமும் பொறாமைக் குணமும் உடையவர், தன் பேச்சால் செயலால் பிறருக்கு அச்சம் ஊட்டுபவர், முரண்பட சிந்திப்பவர் ஒருபோதும் ஆசிரியனாக வந்து தொலைத்துவிடக்கூடாது என்று குறிப்பிடுகிறார் பவணந்தியார்.

     வயதுக்கு வந்த   மாணவி என்பவள் இளம் வயது ஆசிரியனுக்குத் தங்கை ஆவாள்; நடுவயது ஆசிரியனுக்கு மகள் ஆவாள்; மூத்த ஆசிரியனுக்கு பேத்தி ஆவாள். அவ்வாறே இளம் வயது ஆசிரியை தன் தோள் அளவு வளர்ந்த மாணவனைத் தம்பியாக எண்ண வேண்டும்.

   இவன் ஆசிரியன் என சமுதாயம்  மதிக்குபடியாய் நடந்துகொள்ள வேண்டும். “இவன் ஆ! சிறியன்!” என கீழே போட்டு மிதிக்கும்படியாய் நடந்து கொள்ளக் கூடாது.

    ஒரு மாதவனின் இழிசெயலால் ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்குப் பழிவந்து சேர்ந்து விடுகிறது. வேலியாக இருக்க வேண்டிய ஆசிரியன் தன் வேலையைக் காட்டுகிறானே என்று பெண்ணப் பெற்றவர்கள் நொந்து போகிறார்கள்.

  இழிசெயல் புரிந்த இவன் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கும் நாணயமாக இல்லை; தாலி கட்டிய மனைவிக்கும் நாணயமாக இல்லை. இவன் செய்தது பஞ்ச மாபாதகங்களில் முதன்மையானதாகும்.

பாதகம் செய்பவரைக் கண்டால்- நாம்
பயம் கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா      - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

என்று பாரதியார் கூறுகிறார்.

  மேற்சொன்னவற்றை எல்லாம் இவ்வார நன்னெறி வகுப்பில் நான் பகிர்ந்துகொண்டபோது,   "மா பாதகம் செய்த மாதவனை மோதி மிதிக்கவும் அவன் முகத்தில் உமிழவும் நாங்கள் தயார்” என்கிறது என் பள்ளியைச் சேர்ந்த மாணவியர் படை.

  காமுக ஆசிரியர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தொடர்ந்து பணிசெய்ய விடாமல் தடுக்க வேண்டும்; ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.

  ஆசிரியர் இறைவனாக வணங்கத் தக்கவர் (ஆச்சார்ய தேவோ பவ) என்று நம் வேதங்கள் சொல்கின்றன.

   எழுத்து அறிவித்தவன் இறைவன் என வழிமொழிகிறார் ஒளவையார்.
தினை அளவு பழி வந்தாலும் பனை அளவாகக் கொண்டு பழிக்கு அஞ்சும் பண்புடையவர்களாகத் திகழ வேண்டும் என்பார் திருவள்ளுவர்.

  இவற்றை எல்லாம் ஆசிரியப் பெருமக்கள் எண்ணிப் பார்த்து ஒழுங்காகவும் ஒழுக்கமாகவும் பணியாற்ற வேண்டும்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
என்பதை ஆசிரியர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.




5 comments: