Tuesday 1 March 2016

சிற்றுலாவில் வந்த சிக்கல்

   

    சுற்றுலா(tour) செல்வதைவிட சிற்றுலா(picnic) செல்வது எளிது என்பதால் ஊட்டி சிற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தேன். 47 மாணவியர், 7 ஆசிரியர்களுடன் ஊட்டிக்குச் சிற்றுலா சென்றோம். சாய்வு வசதியுள்ள இருக்கைகளுடன் கூடிய புதிய பேருந்தில் பயணித்தோம். திறமையும் அனுபவமும் உடைய ஓட்டுநரின் கைவண்ணத்திலும் கால் வண்ணத்திலும் பேருந்துப் பயணம் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.


  சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தாளாளராக இருக்கும் மேட்டுப்பாளையம் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளிக்குச் சென்று, பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்தோம். நண்பர் ஞான பண்டிதன் அவர்கள் எங்களை வரவேற்று உற்சாகமாகப் பேசினார். அவருடன் வந்த ஆசிரியப் பெருமக்கள் மலர்ந்த முகத்துடன் அளவளாவினர். அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு ஊட்டி சென்று,  பார்க்க வேண்டிய இடங்களைக் குறித்த நேரத்தில் பார்த்தோம். ஊட்டி ஏரியின் படகு சவாரி அவ்வளவு அருமையாக அமைந்தது.

   தாவரவியல் பூங்காவில் பரந்து விரிந்து கிடந்த புல் வெளியில்  மாணவியர் ஓடியாடி மகிழ்ந்தனர். மாலை நான்கு மணி அளவில் குன்னூர் சென்று சிம்ஸ் பூங்காவில் வலம் வந்தோம். நானூறு ஆண்டுகள் வயதுடைய மரங்கள் அங்கு இன்றும்  வானுயர வளர்ந்து நிற்கின்றன.  யானைக்கால் மரம் என்று ஒன்று இருக்கிறது. அம்மரத்தின்  பருத்த அடிப்பகுதி அசப்பில்  தோல் மடிப்புடன் கூடிய யானையின் கால் போலவே உள்ளது. பிறகு உருத்திராட்ச மரத்தைப் பார்த்தோம்.
.
    அங்கே ஒரு முட்செடி; அதனிடையே சில அழகான பூக்கள். மாணவியரை அழைத்துப் பார்க்கச் செய்து, மனத்தில் தோன்றும் கவிதை வரிகளைக் கூறுமாறு கேட்டேன்.

நீண்ட யோசனைக்குப் பின் ஒரு மாணவி சொன்னாள்
கெட்ட செயல்கள் பல நடந்தாலும்
சில நல்ல செயல்களும் நடக்கும்
நம்பிக்கையுடன் காத்திருப்போம்

இன்னொரு மாணவி சொன்னாள்
கெட்டவர்களிடத்திலும்
நல்ல குணம் சில இருக்கும்

மற்றொரு மாணவி சொன்னாள்
முள்ளைப் பார்க்காதே
மலர்களைப் பார்

வேறு ஒரு மாணவி சொன்னதைக் கேட்டு வியந்து போனேன். அவள் சொன்னாள்:
முள்ளும் மலரும்
துன்பமும் இன்பமும்
கலந்ததே நம் வாழ்வு

   அதற்கு மேலும் பேசிக் கொண்டிருந்தால் பொழுது போய்விடும் என்று எண்ணி பேருந்தை நோக்கி விரைந்தோம். முன்னிரவு எட்டு மணி அளவில் மேட்டுப்பாளையம் ஆரிய பவன் உணவகத்தின் முன் எங்கள் பேருந்து நின்றது. மலைப் பயணத்தின் காரணமாக சிலருக்கு வயிற்றைப் புரட்டியதால் சாப்பிட வரவில்லை. வந்தவர்களும் குறைவாகவே சாப்பிட்டனர். நான் இரண்டு ஊத்தாப்பம் மட்டும் சாப்பிட்டேன். முன்னதாகவே பேருந்தில் ஏறி ஓய்வாக அமர்ந்து கொண்டேன். சற்று நேரம் கழித்துப் பேருந்து புறப்பட்டது.

    செலவுகளைக் கவனித்துக் கொண்ட ஆசிரியரிடம், “உணவகச் செலவு எவ்வளவு ஆயிற்று?” என்று கேட்டேன். ரூபாய் ஆறாயிரத்து ஐந்நூறு என்று சொன்னார் அதற்குள் மாணவியர் டி வி யில் படம் போடுமாறு உரத்தக் குரலில் கேட்டனர். தனுஷ் நடித்த வேங்கை படத்தில் அனைவரும் மூழ்கினர்.  பேருந்து அன்னூரைத் தாண்டிவிட்டது.

   “சார் ஆறாயிரத்து ஐந்நூறு ரூபாய் அதிகமாகத் தெரிகிறது. குழந்தைகள் குறைவாகவே சாப்பிட்டனர்” என்று தயங்கியபடி சொன்னார்  பேருந்தில் பயணித்த விஜயலட்சுமி ஆயா.. உடனே படத்தை நிறுத்தச் சொல்லி ஹோட்டல் பில்லை வாங்கிப் பார்த்தேன். ஒவ்வொருவரும் என்ன சாப்பிட்டார்கள் என்று கேட்டு எழுதச் சொன்னேன். கணக்குப் போட்டுப் பார்த்தால் மூவாயிரத்து  எழுநூரு மட்டுமே வந்தது.

    உடனே விடுதி மேலாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சத்தம் போட்டேன். முக நூலில் ரெவ்யூ போட்டால் கடை படுத்துவிடும் என்று கூறினேன். பத்து நிமிடம் கழித்துப் பேசுமாறு சொன்னேன். இருபது நிமிடம் ஆனது. நானே மீண்டும் அழைத்தேன். “சர்வர் தவறாகக் கணக்குப் போட்டுவிட்டார். கூடுதலாகப் பெற்ற பணத்தைத் தந்து விடுகிறோம். தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் ஆசிரியராவது பில்லை சரிபார்த்து இருக்கலாம்” என்றார். அவர் சொன்னது உண்மைதான்.

   நாற்பது பேர்களுக்கு அவ்வளவு பணம் செலவாகுமா என்று எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். விழிப்புணர்வோடு செயல்பட்டிருந்தால் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம்.

  மறுநாள்  காலை மேட்டுப்பாளையம் சச்சிதானந்தா  ஜோதி நிக்கேதன் பள்ளியில் பணியாற்றும் நண்பர் கண்ணன் அவர்கள் நாங்கள் சாப்பிட்ட ஆரிய பவன் ஹோட்டலுக்குச் சென்று அதிரடியாகச் சத்தம் போட்டுள்ளார். அவருடைய கோபம் சரியானதே. அந்த உணவகத்தைப் பற்றிச் சொன்னவரே அவர்தான்.

    கூடுதலாக வசூலித்தப் பணம் இன்று என் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்தது.

   வேண்டும் என்றே செய்தார்களா? விழித்துக் கொண்டு கேட்டதால் பணத்தைத் திரும்பக் கொடுத்தார்களா?

 ஒன்றும் புரியவில்லை.
    
   

   

12 comments:

  1. தவறு இரு பக்கமும் என்றே கொள்வோம். இது போன்ற அனுபவத்தை பாடமாக எடுத்துக்கொள்வோம்.

    ReplyDelete
  2. Experience makes a man perfect. Yes it has been proved in your trip.

    ReplyDelete
  3. Thanks for sharing this experience. I enjoyed your writing style as I used to.

    ReplyDelete
  4. எதற்கும் கவனம் தேவை.- நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  5. எதற்கும் கவனம் தேவை.- நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  6. திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. இது போன்ற சுற்றுலாத் தலங்களில் யார் என்ன உணவை உண்டார்கள் என நம்மில் ஒருவர் (பார்வையாளராக) பட்டியலிட வேண்டும். அப்போது தான் கடைக்காரர் சரியான தொகையைக் கேட்பார் இல்லையென்றால் இது போன்ற நிலை ஏற்படும். நானும் இது போன்ற சம்பவத்தை அனுபவித்திருக்கிறேன். அனுபவம் தானே வாழ்க்கை. அனைவருக்கும் இச்சம்பவம் நல்ல பாடமாக இருக்கட்டும். உங்களால் ஒரு ஞானம் ஏற்பட்டது.

    ReplyDelete
  7. திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. இது போன்ற சுற்றுலாத் தலங்களில் யார் என்ன உணவை உண்டார்கள் என நம்மில் ஒருவர் (பார்வையாளராக) பட்டியலிட வேண்டும். அப்போது தான் கடைக்காரர் சரியான தொகையைக் கேட்பார் இல்லையென்றால் இது போன்ற நிலை ஏற்படும். நானும் இது போன்ற சம்பவத்தை அனுபவித்திருக்கிறேன். அனுபவம் தானே வாழ்க்கை. அனைவருக்கும் இச்சம்பவம் நல்ல பாடமாக இருக்கட்டும். உங்களால் ஒரு ஞானம் ஏற்பட்டது.

    ReplyDelete
  8. சுற்றுலா என்பதை எல்லோரும் அறிந்திருப்பர். ஆனால் சிற்றுலா என்ற சொல்லை நான் அறியவில்லை. புதிய சொல்லை தங்களால் அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  9. The account should have been checked in the hotel itself. A good lesson to all.

    ReplyDelete
  10. உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை - கவியரசு கண்ணதாசன். நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  11. உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை - கவியரசு கண்ணதாசன். நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete