Tuesday, 22 March 2016

பள்ளிக்கு ஒரு மனநல ஆலோசகர்

   தேர்தல் சூடு பிடித்துள்ள இந்தக் காலக்கட்டத்திலும், ஊடகங்களில் வரும்  தேர்வு தொடர்பான சில செய்திகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. நடுவண் இடைநிலை வாரிய கணிதத் தேர்வு பற்றிய கூக்குரல் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.


   தமிழ் நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல் தேர்வு முடிந்து மாணவ மாணவியர் கண்ணீருடன் தேர்வறையைவிட்டு வெளியே வந்ததாக ஒரு செய்தி கண்ணில் பட்டது. 

    அடுத்தநாள் சேலத்து மாணவி ஒருத்தி அந்த வேதியியல் பாடத்தில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என பயந்து தன்னை மாய்த்துக் கொண்டதாக வந்த ஒரு செய்தி மற்றப் பெற்றோர்களின் வயிற்றிலும் புளியைக் கரைத்தது. அடுத்து வந்த கணிதத்தேர்வும்  சற்றுக் கடினமாகப் போக மீண்டும் இது போன்ற செய்திகள் வந்தன. குறிப்பாக சிதம்பரம் நந்தனார் அரசுப்பள்ளி மாணவி தான் படித்த வகுப்பறையைத் தன் கல்லறையாக மாற்றிய செய்தி அனைவரின் நெஞ்சையும் பிசைந்தது. முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் அத்தி பூத்தாற்போல் இப்படி ஓரிரு செய்திகள் வரும். இப்போதெல்லாம் பொதுத் தேர்வுகள் நடைபெறும்போதே இத்தகைய செய்திகள் பரவலாக வருகின்றன.

     பள்ளியில் படிப்பது சுகம் என்பது மாறிப்போய் சுமை என்று ஆகி விட்டதா? தேர்வுகளை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டிய மாணவர்கள் அதிர்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது?

   தேர்வுகளைக் கொண்டாடுங்கள் என வெ.இறையன்பு தனது படிப்பது சுகமே என்னும் நூலில் குறிப்பிடுவார். ஆனால் இன்றைய நிலைமை என்ன? சில மாணவர்கள் மட்டும் கொண்டாட, மிகப்பலர் திண்டாடும் நிலையல்லவா காணப்படுகிறது?

  எல்லோரும் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெறும் வகையில் வினாத்தாள் அமையுமா? என்னையும் ஒருகாலத்தில் பன்னிரண்டாம் வகுப்புக்கு வினாத்தாள் அமைக்குமாறு பணித்தார்கள். கூடவே ஒரு குறிப்புரையும் தந்தார்கள். அதில் அறுபது விழுக்காடு வினாக்கள் மெல்லக்கற்போரும் எளிதாக விடை அளிக்கும்படியாய் இருக்க வேண்டும், முப்பது விழுக்காடு வினாக்கள் இடை மாணாக்கருக்கு ஏற்ற கடினத்தன்மையுடன் இருக்க வேண்டும், பத்து விழுக்காடு வினாக்கள் சிந்தித்து விடை எழுதும் வகையில் கூடுதல் கடினத் தன்மையுடன் அமைய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆக தேர்வு என்பது எல்லோருக்குமே எளிதாய் அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும்போது மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

    மதிப்பெண்ணை அளக்கும் அளவுகோல்கள் இப்போது மாறிவிட்டன. எண்பதுகளில் இருந்த நிலைமை வேறு; இப்போதுள்ள நிலைமை வேறு. அப்போதெல்லாம் ஆயிரம் மதிப்பெண் எடுத்த மாணவர்களையே அதிசயமாகப் பார்ப்பார்கள். பாடங்களில் இருநூறுக்கு இருநூறு என்பது அதியன் ஒளவைக்குக் கொடுத்த நெல்லிக்கனி போல அரிதாகவே இருக்கும். பள்ளித் தேர்ச்சி விழுக்காடு எண்பதுக்கு மேல் இருந்தாலே கொண்டாடப்படும்.

  இப்போது அப்படியா? ஒரு பள்ளி நூற்றுக்கு நூறு தேர்ச்சி விழுக்காடு காட்டாவிட்டால் அது சரியில்லாத பள்ளி என முத்திரை குத்தப்படுகிறது. பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறவக்க முடியாத ஆசிரியர்கள் திறமையில்லத ஆசிரியர்கள் என விமர்சிக்கப்படுகிறார்கள். தனியார் பள்ளியாக இருந்தால் அடுத்த நிமிடத்தில் அத்தகைய ஆசிரியர்களின் சீட்டு உடனே கிழிக்கப்படுகிறது. நூற்றுக்கு நூறு பெறும் மாணவர்களுக்கு ஊடகங்கள் தந்த தேவையில்லாத விளம்பரம் இனி நூற்றுக்கு நூறு பெற்றால்தான் மதிக்கப்படுவோம் என்னும் நிலைக்கு மாணவர்களைத் தள்ளிவிட்டன. இது ஒரு நோயாக மாறிவிட்டது. இந்த நோய் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர், தலைமையாசிரியர், பள்ளி நிர்வாகத்தினர் என அனைத்துத் தரப்பினரையும் பற்றிக்கொண்டு விட்டன. இந் நோய்க்கு நான் பத்தாண்டுகளுக்கு முன்னர் சூட்டிய பெயர் Centum Syndrome என்பதாகும்!

   நூற்றுக்கு நூறு தேர்ச்சிக்கு அல்லது மதிப்பெண்ணுக்கு நான் எதிரானவன் அல்லன். அது இயல்பாக வர வேண்டும் அல்லது பெறப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. மாங்காய் இயல்பாக பழுக்க வேண்டும். தடியால் அடித்துப் பழுக்க வைப்பது சரியாகுமா?

      ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அமெரிக்க நாட்டு மாணவர்களுக்குக் கூட அவர்கள் நூற்றுக்கு நூறு மொழிப்பாடத்தில் வழங்குவது இல்லை. ஆனால் நாம் கை கூசாமல்  ஆங்கிலப்பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்குகிறோம். மற்றக் குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக இருப்பதால் ஏங்கி நிற்கின்றன. அப்படி நூறு மதிப்பெண் பெற்ற மாணவனால் சொந்தமாக நான்கு வரிகள் ஆங்கிலத்தில் பிழையின்றி எழுத முடியாது என்பது கசப்பான உண்மையாகும்.

    ஒன்பதாம் வகுப்பில் காலடி வைத்ததும் பத்தாம் வகுப்புப் பாடம் தொடங்கிவிடுகிறது. பதினோராம் வகுப்பிலேயே பன்னிரண்டாம் வகுப்புக்கானப் பாடம் திணிக்கப்படுகிறது. இந்த வன்முறைகள் அண்மைக்காலத்தில் அரசுப் பள்ளிகளிலும் பரவிவிட்டன என்பதுதான் சோகத்தின் உச்சக்கட்டமாகும். மாணவப் பருவத்தில் நான்கு ஆண்டுகள் ஒரு நகைச் சுவை இல்லாமல், ஒரு பொழுதுபோக்கு இல்லாமல், விளையாட்டு இல்லாமல் இயந்திர கதியில் செல்வதால், அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

   செடிகள் இயல்பாய் வளர்ந்து, பருவ மாற்றங்களை எதிர்கொண்டு மரங்களாக உயர்வது நல்லது. இதற்கு நேர் மாறாக எல்லாச் செடிகளையும் போன்சாய் மரங்களாக தொட்டியில் வளர்க்க ஆசைப்படலாமா? போன்சாய் மரங்கள் பார்க்க அழகாக இருக்கும்; ஆனால் பயன்படா நம் குழந்தைகளை பொன்சாய் மரங்களாக வளர்ப்பதை விடுத்து, இயல்பாக வளரவிடுவோம். இவற்றை எல்லாம் எடுத்துச் சொல்ல ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகர் பணியிடங்களை ஏற்படுத்தி, உளவியலில் பட்டமும் பயிற்சியும் பெற்றவர்களை நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

     பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மாதம் ஒருமுறை மனநல ஆலோசகரால் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு தேர்வுக்குச் செல்லும் முன்னரும், தேர்வு முடிந்த பின்னரும் அவர் மாணவர்களிடம் பேச வேண்டும். அதைவிட முக்கியம் மாணவர்கள் சொல்வதை அவர் காது கொடுத்துக் கேட்க வேண்டும். நட்பு வட்டத்தைப் பெருக்கி, மனம் விட்டுப் பகிர்ந்து கொள்வதற்குப் பயிற்சி தருதல் வேண்டும்.

   ஆட்சியாளரும், கல்வியாளரும், சமூக ஆர்வலரும் குழுவாக அமர்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலம் இது.

செய்வார்கள் என நம்புவோம்.

    

4 comments:

 1. கல்வித்துறையில் மாற்றம் இன்றைய கட்டாயம் ஐயா

  ReplyDelete
 2. ஏட்டுப்படிப்பினைவிட படிப்பிற்கான சூழலையும் மன நிலையையும் மாணவர்கள் நன்கு பெறுமளவு பக்குவப்படுத்துவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. மாணவர்களும் எச்சூழலையும் எதிர்கொள்ளும் அளவு தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்வது நலம்.

  ReplyDelete
 3. Mihavum arumai Anna. This article should come in main stream media. I became a bit emotional. Jai Hind.

  ReplyDelete
 4. நல்லதொரு வார்த்தை ஐயா

  ReplyDelete