Saturday, 26 March 2016

நல்ல வெள்ளி

  நல்ல வெள்ளி அன்று  பள்ளிக்கு விடுமுறைதான். மதங்கள் தொடர்பான விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகளையும் நடத்துவது கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால், பள்ளிக்குச் செல்லாமல் சற்று ஓய்வாக இல்லத்தில் இருந்தேன்.


   இயேசுநாதரை சிலுவையில் அறைந்த அந்த வெள்ளிக்கிழமையை ஏன் நல்ல வெள்ளி என்று குறிப்பிடுகிறார்கள் என யோசித்துக்கொண்டிருந்தேன். கருப்பு வெள்ளி என்றல்லவா வரலாற்றில் பதிவாகி இருக்கவேண்டும்?

   எனக்கு ஏனோ தெரியவில்லை கிறிஸ்துவ மதத்தில் ஓர் இனம்புரியாத  ஈர்ப்பு இருந்து வருகின்றது. ஒருகால் நான் பிறந்து வளர்ந்த சூழல் ஒரு காரணமாக இருக்கலாம்.

      நான் பிறந்தது கூவத்தூர் என்னும் கிராமத்தில். அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடத்திற்கும் ஜெயங்கொண்டத்திற்கும் இடையில் உள்ளது அவ்வூர். கிறிஸ்துவ குடும்பங்களும் இந்து குடும்பங்களும் இணக்கமாக வாழ்ந்த ஊர். மாதா கோவில் அந்த ஊரின் அடையாளம்.

     அந்த தேவாலயத்தின் தேர்த் திருவிழா வைகாசி மாதத்தில் மிகச்சிறப்பாக நடைபெறும். நடு நிசியில் தொடங்கும் தேர் பவனி ஊரின் ரோட்டுத் தெரு, ரெட்டித் தெரு, மேலத்தெரு வழியாகச் சென்று காலை ஏழு மணி அளவில் நிறைவடையும். அத் தேர் எங்கள் இல்லத்திற்கு  அருகில் வரும்போது சற்று நேரம் நிற்கும். நானும் என் மூத்த சகோதரர்களும் சேர்ந்து அந்தத் தேரின் பீடத்தில் மெழுகு வர்த்திகளை ஏற்றிவைத்து வணங்குவோம்.

   எனக்கும் கிறிஸ்துமஸ் நாளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இயேசுநாதர்  டிசம்பர் இருபத்தைந்தாம் நாள் பிறந்தார்; நான் அதற்கு முதல் நாள் மாலையில் பிறந்தேன்! இதன் காரணமாக எங்கள் குடும்பத்திற்கு வேண்டப்பட்ட கிறிஸ்துவ நண்பர்கள் எனக்குக் குழந்தைசாமி என்றொரு பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

      என்னுடைய தொடக்கப்பள்ளித் தோழர்கள் பலரும், தோழியர் சிலரும் கிறிஸ்துவர்களே. ஜோசப், அந்தோனிசாமி, ஆரோக்கியசாமி, மார்க்சாமி, வின்சென்ட், லூர்து மேரி, அருள் மேரி ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்களுள் ஆரோக்கியசாமி என்பவர் திருமணம் ஏதும் செய்து கொள்ளாமல் கிறிஸ்துவ துறவி ஆகிவிட்டார். சிவகங்கை மாவட்டம் கடையம் என்னும் ஊரில்  கல்விப்பணியும் ஆன்மிகப் பணியும் ஆற்றி வருகிறார். இன்றும் எங்களுக்கு இடையே முகநூல் தொடர்பு உள்ளது.

   இப்படியான மலரும் நினைவுகளோடு நாளேடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். மாலை மலரில் வந்த ஒரு கட்டுரை என் ஐயத்தைப் போக்கியது. இயேசுநாதர் மரிப்பதும் மீண்டும் உயிர்த்தெழுவதும் மனிதர்களின் பாவங்களை இரட்சிப்பதற்கான இறைவனின் திட்டம் என்பதால் இயேசு மரித்த வெள்ளி நல்ல வெள்ளி ஆனது என அறிந்து வியந்தேன்.
  
photo: Dinamalar
வாட்டிகன் நகரில் போப் ஆண்டவர் நல்ல வெள்ளி அன்று நிகழ்த்தும் பல்வேறு சடங்குகளில் ஒன்று பன்னிரண்டு கிறிஸ்துவர்களை அழைத்துவந்து அவர்தம் கால்களைக்கழுவி போப் ஆண்டவர் முத்தமிடுதல் ஆகும். அது என்ன பன்னிரண்டு என்னும் கணக்கு?  அது இயேசுவின் பன்னிரண்டு சீடர்களைக் குறிக்கும். இந்த மரபை மீறி போப் ஆண்டவர் இவ்வாண்டு ஒரு காரியம் செய்துள்ளார். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் ஆகிய மும்மதங்களைச் சேர்ந்த அகதிகள், ஏழை எளியவர் எனப் பன்னிருவரின் கால்களைக் கழுவி முத்தமிட்டார். வாட்டிகன் புரட்டோகாலைத் தூக்கி எறிந்துவிட்டுப் புரட்சி செய்துவிட்டார் போப் ஆண்டவர். உண்மையில் இதுதான் நல்ல வெள்ளி என்பதற்கான அடையாளம். இச் செயல் மூலமாக மதங்களுக்கு இடையேயான காழ்ப்புணர்ச்சியும் அதன் காரணமாக எழும் தீவிரவாதமும் மெல்ல குறையும் என நம்பலாம்.

    இப்போது கிறிஸ்துவ மதத்தின்பால் உள்ள எனது ஈர்ப்பு இரு மடங்காகிவிட்டது.
   

    

1 comment:

  1. போப்பாண்டவரின் செயல் பாராட்டிற்கு உரியது

    ReplyDelete