Thursday 7 April 2016

முதுமையின் விண்ணப்பம்

என் அருமை மக்களே!
எனது இறுதி வேண்டுகோளுக்குக்
கொஞ்சம் செவிகளைத் தாருங்கள்!

நான் மூப்படையும்போது இன்னும்
என் கைகள் அதிகமாய் நடுங்கும்.
நடுங்கும் என் கைகளிலிருந்து
உணவுத் துகள்கள் சிதறி என்
நெஞ்சில் விழுவதைக் காண்பீர்கள்!
அப்போது சற்று உதவுங்களேன்.

உங்களுக்குக் கதைகள் சொல்லி
மகிழ்வித்த நாக்குக் குளறும்.
நான் வாய்தவறி உளறும்போது
பரிகாசம் செய்யாமல் இருங்கள்.
உங்கள் மழலை மொழியில்
மகிழ்ந்தேன்; எனது உளறுமொழியை
கொஞ்சம் பொறுத்துக்  கொள்ளுங்கள்.

உங்கள் உடலுக்கு நறுமணம் பூசி
அழகு பார்த்த காலம் அது!
 என் உடலில் துர்நாற்றம் வீசும்
மூக்கைச் சுளித்து வெறுக்காதீர்.

உங்கள் சிறுநீரையும் மலத்தையும்
உவந்து அகற்றிய நாள்கள் எத்தனை!
ஒன்றுக்கும் இரண்டுக்கும் குளிக்கவும்
முடியாமல் போகும் காலத்தில்
இந்த அடிப்படைத் தேவைகளுக்கு
உதவ மாட்டீர்களா? என் மக்களே!

என் கை விரல்களைப் பிடித்தபடி
சுற்றிச் சுற்றி வந்தீர்களே!
விரைவில் தளர்ந்து விழப்போகும் என்
கைகளைச் சற்றுத் தாங்கிப் பிடிப்பீர்களா?

உள்ளாடை அணிவிக்காமல் உங்களை
ஒருநாளும் விட்டு வைத்ததில்லை!
 எனது கீழாடைகள் நழுவும் வேளையில்
மானம் காக்க உங்கள் கைகள் உதவுமா?

நீ பிறக்கும் நிமிடத்திற்காக
காத்து நின்ற காலம் அது!
இறுதிக் காலத்தில் எனது படுக்கையைச்
சுற்றி நின்று கடைசி மூச்சு
அமைதியாக அன்புடன் விடைபெற
அனைவரும் உதவுவீர்களா?

குறிப்பு: கவிதை நடை மட்டுமே என்னுடையது. சவுக்கத் அலி என்பார் மலையாளத்தில் எழுதிய மூலக் கவிதையின் சாரமே இது. 
நன்றி: சமரசம் மதம் இருமுறை இதழ்-ஏப்ரல் 2016.




3 comments:

  1. தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் ஐயா

    ReplyDelete
  2. மன பாரத்தினை குறைக்கும் கவிதை வரிகள்.

    ReplyDelete
  3. முதுமை எல்லோருக்கும் வரும். கவிஞர் குறிப்பிட்டதைப் போல் தளிர் ஒரு நாள் சறுகாகும். இதையே சித்தர்கள் வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கு யார் சுமந்திருபார் இச்சரக்கை என்கிறார்கள். இருந்தபோதும் முதுமையை வாழ்த்த வேண்டும், வணங்க வேண்டும், போற்ற வேண்டும், சொல்லப்போனால் அவர்களை மறுபிறவிக் குழந்தையாக எண்ணி மகிழ்ச்சியாகப் பாதுகாக்க வேண்டும். கவிதை அருமை.

    ReplyDelete