Saturday, 30 April 2016

திரும்பிப் பார்க்கிறேன்

    நாற்பது ஆண்டுகாலப் பள்ளிப் பணி. கோவை நேரு வித்யாலயா பள்ளியில் ஆய்வக உதவியாளராகச் சேர்ந்து, கரூர் லார்ட்ஸ் பார்க் பள்ளியின் முதல்வராக இன்றைக்கு எனது பணியை நிறைவு செய்கிறேன்.


   விட்டு விடுதலை ஆனோம் என்ற மகிழ்ச்சி ஒரு பக்கம். பழகிய மாணாக்கச் செல்வங்களை விட்டுப் பிரிகிற வருத்தம் ஒரு பக்கம். இப் பள்ளியில் இப்போது சேர்ந்த மாதிரி இருக்கிறது; நான்கு ஆண்டுகள் நான்கு நிமிடங்களாக ஒடி விட்டனவே என்ற வியப்பு ஒரு பக்கம்.

     இன்று காலை ஏழு மணிக்குப் பள்ளி சென்றேன். சேர்ந்த புதிதில் நான் நட்ட வேப்பங்கன்றுகள் செழித்து வளர்ந்து மரங்களாகி விட்டன. அவற்றுடன் நின்று செல்ஃபி படம் எடுத்துக் கொண்டேன்.

    பத்து மணிக்கு மீண்டும் பள்ளி சென்று, சிறப்பு வகுப்பில் இருந்த பத்து, பன்னிரண்டாம் வகுப்புப் பெண் குழந்தைகளுக்குச் சிறப்பு ஆலோசனைகளை வழங்கினேன்.

   பட்ட மேற்படிப்பு முடிப்பதற்கு முன் காதலும் வேண்டாம்; கல்யாணமும் வேண்டாம் என்னும் முடிவோடு இருங்கள். பெண்களைக் கண்ணியமாக வாழ வைக்கும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உண்டு. பெற்றோர்களுக்கு அன்பும் ஆதரவும் அளிக்க வேண்டியது முதற்கடமையாக இருக்கட்டும்.  இவற்றை மனம் கொள்ளும் வகையில் எடுத்துரைத்தேன்.

    பின்னர் ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி அவர்கள் புதிய முதல்வரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுகுறித்துச் சில குறிப்புகளைத் தந்தேன்.

    என் பணிக் காலத்தில் பெற்ற வெற்றிகளைப் பெரிதாகக்  கொண்டாடியதுமில்லை; சந்தித்தத் தோல்விகளைக் கண்டு துவண்டு போனதுமில்லை. சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதை ஒரு கோட்பாடாகவே கொண்டிருந்தேன்.

      சக ஆசிரியர்களும் ஊழியர்களும் என் உடன் பணி செய்வதாகக் கருதினேன்; ஒருபோதும் என் கீழ் பணிசெய்வதாக நினைத்ததில்லை. அதேபோல், என்னைச் சந்திக்க வந்த பார்வையாளர்களை, குறிப்பாகப் பெற்றோர்களை ஒரு போதும் காக்க வைத்ததில்லை. முன்னாள் மாணவர் என்றால் முன்னுரிமை கொடுத்துப் பேசி அனுப்புவேன்.

    பணி நேரத்தில் என்னைச் சந்திக்கவரும் உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் முதலில் உட்கார வேண்டும்; பிறகு பேச வேண்டும். அவர்கள் கடமை தவறும்போது சினம் கொண்டு நெறிப்படுத்துவேன். அந்தச் சினம் அந்தக் கணத்தோடு சரி.

       குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
       கணமேயும் காத்தல் அரிது

என வள்ளுவர் வகுத்துக் காட்டும் வழியில்தான் நடைபயின்றேன்.

   தேர்வு நோக்கில் நான் தமிழ்ப் பாடத்தை நடத்தியது இல்லை; வாழ்க்கைக்கான பாடமாகத்தான் நடத்தினேன்.

   காலை வணக்க வகுப்பை ஒப்புக்காக ஒருபோதும் நடத்தியதில்லை. மாணவர்களின் மனக் கழனிகளைப் பண்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகக் கருதுவேன். அவர்தம் மனங்களில் குறள் விதைகளைத் தூவி மகிழ்வேன்.

     பன்னிரண்டு ஆண்டுகள் ஆங்கிலவழிப் பள்ளிகளில் முதல்வராகப் பணியாற்றிய போதிலும் தமிழின் மேன்மைக்காக நிறையவே செய்துள்ளதை நினைத்துப் பார்க்கிறேன். பள்ளிச் சுவர்களை ஒளவையின், பாரதியின் ஆத்திசூடிகள், வள்ளுவரின் குறட்பாக்கள் அலங்கரிப்பதை இன்றும் காணலாம்.
   ஆசிரியர் ஏணியாகவும் தோணியாகவும் இருந்த இடத்தில் இருந்துவிடக்கூடாது. மாணவரை உயர்த்தும்போது கூடவே ஆசிரியரும் உயர வேண்டும். அதனால்தான் முனைவர் பட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பட்டங்களையும் பட்டயங்களையும் முயன்று பெற்றேன்.

     விளைகிறதோ இல்லையோ உழவன் தொடர்ந்து வேளாண்பணியைச் செய்வதுபோல, விருதுகளைக் கருதாமல் வியர்வை சிந்தினேன்; பல விருதுகள் அவற்றின் போக்கிலே வந்தன.

   கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனம் நிறைவாக உள்ளது.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

என்று திருமூலர் கூறுவார்.


 என் மன நிலையும் அத்தகையதே.

7 comments:

 1. என் இனிய இனியன் அண்ணா, ஏனோ நேற்றிலிருந்து, இதயம் கணக்கச் செய்யும் பதிவுகளாயப் பார்க்கிறேன். இன்று அது ஒரு படி மேலே சென்று வெடித்து அழும் நிலைக்குள்ளானேன் உங்கள் பதிவைப் படிக்கும் பொழுது.

  ReplyDelete
 2. இன்று காலை தான் சரவண பாவா அவர்கள் வாசிப்பை நேசிப்பது பற்றியும் கற்பித்தலைக் காதலிக்கச் சொல்லியும் ஒரு அருமையான காணொளியை அனுப்பி இருந்தார். அதில்கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு வாழும் விளக்கமாக தங்களது பதிவினைப்பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. தங்களின் பணி நிறைவு வாழ்வு சிறப்பாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துகள். அடுத்த ஆண்டு இதே நாளில் (30.4.2017) பணி நிறைவு பெறவுள்ளேன். நன்றி.

  ReplyDelete
 4. You may get tired due to your chronological and biological age. But you never get retired from the minds of your beloved students and most loyal teachers like me. You are an exemplary to the teaching faculties. Your way of approach with the fellow beings are highly laudable. You are a philanthropist, a good educator, a guide and all the above a good human being. I like your act of tolerance. I learned many things from you. You are my Father. So I dont bother anything. Let your service to be continued to enrich the poor and needy. I pray God the Almighty to support you in extending your life period in the planet earth as many as years possible in view of helping the society. Be proud to be your disciple always. Thank you for your perennial support. Love you sir.

  ReplyDelete
 5. I pray for your continuous publication of articles like this. Prof.R.Pandiaraj

  ReplyDelete