Friday 27 May 2016

தேசம்மாள் என்னும் தெய்வம்

   


  அன்பு மகள் அருணாவுக்கு,
    அம்மாவும் நானும் நலம். தங்கை புவனா கனடாவில் நலமுடன் நன்றாகப் படிக்கிறாள். சென்றவாரம் தொலைப்பேசியில் பேசியபோது ஹூஸ்டனில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கப் போவதாகச் சொன்னாய். பிறகு எதை எதையோ பேச, கடைசியில் உன் பாட்டியைப் பற்றிய பேச்சும் வந்தது. பேச்சின் நிறைவில் உன் பாட்டி குறித்து விரிவாக ஒரு கடிதம் எழுதுமாறு வேண்டினாய். உன் வேண்டுகோளை ஏற்று இக் கடிதத்தை எழுதுகிறேன்.


     பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்தது நம் குடும்பம். உன் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பட்டறிவு இருந்ததே தவிர, படிப்பறிவு ஏதும் இல்லை. உன் பாட்டிக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்தன. அந்தக் காலத்தில் மருத்துவமனையில் சேர்ந்து குழந்தை பெறும் வழக்கமில்லை. யாராவது வயதான பெண் ஒருத்தி வீட்டிற்கே வந்து பிரசவம் பார்ப்பது வழக்கம். கிருமித் தொற்று, எடைக் குறைவு  போன்ற காரணங்களால் குழந்தை பிறந்தவுடன் இறந்து விடுவது சர்வ சாதாரண நிகழ்வாக இருக்கும். உன் பாட்டிக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் மூன்று மட்டுமே தப்பிப் பிழைத்தன.

     உன் பெரியப்பா பேராசிரியர் பெருமாள் சென்னையில் இருக்கிறார் அல்லவா? அவர்தான் உன் பாட்டிக்கு முதல் பிள்ளை. கிருஷ்ணன் பெரியப்பா இருந்தாரே அவர் ஐந்தாவது பிள்ளை; நான் ஒன்பதாவது பிள்ளை.

   அந்தக்காலத்தில் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் பதிநான்காம் குழந்தையாகப் பிறந்தவர் என்பதை உனக்குச் சொல்லியிருக்கிறேன். நினைவிருக்கிறதா?

    உன் பெரியப்பாவும் நானும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள். அந்தப் பெருமை உன் பாட்டியை மட்டுமே சேரும். ஆம் குழந்தைகள் எட்டாவது வரை படித்தால் போதும் தொடர்ந்து விவசாயம் பார்க்கட்டும் என்று சொன்னவர் உன் தாத்தா. கல்லூரி சென்று பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்பது உன் பாட்டியின் ஆசை. உன் பெரியப்பா எஸ்.எஸ்.எல்.ஸி படித்து முடித்தபோது எனக்கு வயது ஏழு இருக்கும். உன் பெரியப்பாவை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்தே ஆக வேண்டும் எனப் பலமுறை உன் தாத்தாவோடு வாக்கு வாதம் செய்தது இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. கடைசியில் உன் பாட்டியின் வாதமே வென்றது. பிறகு உன் பெரியப்பா கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்து படித்தார். உன் பாட்டி வெயிலிலும் மழையிலும் கடுமையாக உழைத்துப் படிக்கவைத்தார். அதேபோல் நானும் பெரிய படிப்பெல்லாம் படிக்க வேண்டும் என கனவு கண்டார்.

   உன் பெரியப்பாவின் தயவினால் பி.எஸ்ஸி; பி.எட் முடித்தேன். பிறகு ஒரு சிறிய வேலையில் இருந்தபடியே அஞ்சல் வழியில் எம்.ஏ தமிழ் படித்தேன். இறுதித் தேர்வுக்கு முன்பாக உன் பாட்டி நோயின் பிடியில் சிக்கித் தவித்தார். மருத்துவர் கைவிரித்துவிட்டார். கூடவே இருந்தேன். “நீ புறப்படு. போய் தேர்வை எழுது” என்றார். “தேர்வை எழுதாவிட்டாலும் தப்பில்லை அம்மா; அடுத்த ஆண்டில்கூட எழுதிக் கொள்ளலாம்.” என்றேன். “படிப்புதான் முக்கியம். முதலில் புறப்படு; தேர்வை எழுதி முடித்து வா;  அதுவரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருப்பேன்; போய் வா” என்று அவர் கூறியதை மறுக்க முடியாமல் சென்று தேர்வை எழுதிமுடித்து அன்று இரவே கோவையிலிருந்து ஓடோடி ஊருக்கு வந்தேன். உன் பாட்டி பேச்சும் மூச்சும் ஒடுங்கி பாயிலே முடங்கிக் கிடந்தார். “அம்மா, கோவிந்தராஜூ வந்திருக்கிறேன், பாரம்மா” என்று கூவினேன். ஏதோ நா குளறி சொன்னார். அன்று இரவே இறைவனடி சேர்ந்தார்.

    அவர் சொன்ன மாதிரி இரண்டாண்டு எம்.ஏ படிப்பை இரண்டு ஆண்டுகளில் படித்து முடித்தேன். நான் படிப்பை முடிக்கவும் தமிழ் நாட்டில் பள்ளிகளில் மேனிலைப்  படிப்பு அறிமுகம் ஆகவும் சரியாக இருந்தது. உடனே பட்டதாரி மேற்படிப்பு ஆசிரியராக அரசு ஊதியத்தில் பணி கிடைத்தது. தேர்வை எழுதாமல் ஓராண்டு தாமதமாக எம்.ஏ படிப்பை முடித்திருந்தால் வேலை கிடைத்திருக்காது. அந்த வேலை எனக்குக் கிடைத்ததால்தான் நம் குடும்பம் முன்னுக்கு வந்தது. இன்றைக்கு நீ அமெரிக்காவில் ஒரு விஞ்ஞானியாக வலம் வருகிறாய் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் உன் தேசம்மாள் பாட்டிதான்.

   இன்று உன் பாட்டியின் நினைவு நாள். என் அம்மாவின் பிறந்த நாள் யாருக்கும் தெரியாது. இறந்த நாள் மட்டுமே நினைவில் நிற்கிறது. 27.5.1977 மறக்க முடியாத நாள்.

      1985இல் நீ பிறந்தாய். பாட்டி மடியில் உட்கார்ந்து கதை கேட்க உனக்கு கொடுப்பினை இல்லை. இப்போது உன் பாட்டி உயிருடன் இருந்தால் தொண்ணூற்று  ஐந்து வயது ஆகியிருக்கலாம்.

    உன் பாட்டி எல்லா நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தவர். அவருடைய ஒரு குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். தெரிந்தவர் தெரியாதவர் என யார் வந்தாலும் வயிறார சோறு போட்டு  அனுப்புவார்.

    உன் பாட்டிக்கு நான் கடைக்குட்டி என்பதால் என்னைச் செல்லமாக வளர்த்தார். மூன்று வயது முடியும்வரை நான் தாய்ப்பால் குடித்தேனாம். இதைச் சொல்வதில் எனக்கு வெட்கம் ஏதுமில்லை. குளிர்காலத்தில் அவருடைய திருமணத்திற்காக வாங்கிய  கூறைநாட்டுப் பட்டுச் சேலையை எடுத்து எனக்குப் போர்த்திவிடுவார். இப்போது நினைத்தாலும் அந்தப் பட்டுப்புடைவையோடு ஐக்கியமாகியிருந்த என் அம்மாவின் நறுமணத்தை உணர்ந்து மகிழ்கிறேன். அம்மாவின் மணம் அவளுடைய குழந்தைக்கு மட்டுமே தெரியும்.

  மறக்கமுடியாத இரண்டு நிகழ்வுகளை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன். கல்லூரியில் படித்த உன் பெருமாள் பெரியப்பா விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். விவசாய வேலையாக கொல்லைக்குச் சென்றிருந்தார். அப்போது மாலை மணி ஆறு இருக்கும். வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்த என்னை உன் பாட்டி அவசரமாக அழைத்து, ”சீக்கிரம் கம்பங்கொல்லைக்கு ஓடு. அண்ணனைத் தேடிப்பாரு” என்றார். ஓடிப் போய்ப் பார்த்தால் கம்பங்கொல்லை கிணத்தில் தவறி விழுந்து கத்திக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தோர் துணையோடு அவரைக் காப்பாற்றினோம். உன் பாட்டியின் தொலைவில் உணர்தல் என்னும் உள்ளுணர்வு காரணமக உன் பெரியப்பா பிழைத்தார்.

   
அப்போது பள்ளி இறுதி வகுப்பில் படித்தேன். பள்ளித் தேர்வு மதிப்பெண் அட்டையில் என் அண்ணாரின் அதாவது  உன் பெரியப்பாவின் கையொப்பத்தை வாங்கிவரச் சொன்னார் தலைமையாசிரியர். மதிப்பெண் இலட்சணத்தைப் பார்த்த உன் பெரியப்பா  கையொப்பம் போட மறுத்ததோடு நில்லாமல் இரண்டு அடியும் போட்டார். அவர் வெளியில் சென்றதும் என் அம்மா அந்த அட்டையை வாங்கி கைரேகை வைத்துக்கொடுத்து என்னைப் பெரிய இக்கட்டிலிருந்து காப்பாற்றினார். அண்ணார் ஊரில் இல்லை அம்மாவின் கைரேகை வாங்கி வந்தேன் என்று நான் சொன்ன பொய்யையும் நம்பிவிட்டார் தலைமையாசிரியர். பின்னர் பல்லாண்டுகள் கழித்து நான் பணியாற்றிய கோபி வைரவிழா பள்ளியின் இலக்கிய மன்ற விழாவிற்குத் தலைமையேற்க அவர் வந்தபோது இந்த விஷயத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்  கொண்டேன். என் அம்மாவின் கைரேகையுடன் கூடிய அந்த மதிப்பெண் அட்டையை இன்றும் பொன்னேபோல் போற்றிப் பாதுகாப்பாக வைத்திருப்பது உனக்குத் தெரியுமே.

        என் நினைவில் வழிபடும் தெய்வமாக  வாழும் உன் பாட்டி என்றும் என்னை பாதுகாப்பாக வழி நடத்துவதாகவே உணர்கிறேன். எப்போதாவது என் உடல்நலம் குன்றும்போது அம்மா அம்மா என்றுதான் அரற்றுகிறேன். சாந்தி சாந்தி என்று சொல்வதில்லை.  இந்த விஷயத்தில் என்மீது உன் அம்மாவுக்கு சற்றே கோபந்தான்.

      உன் பாட்டியின் பெயரைக் கவனித்தாயா? தேசம்மாள் அதாவது எல்லா தேசங்களுக்கும் அம்மாள். அவருடைய பேத்தியல்லவா நீ? எனவே உனது அறிவும் ஆற்றலும் அவற்றின் வழி உருவாகும் கண்டுபிடிப்புகளும் தேசமெல்லாம் பயன்பெறும் வகையில் அமையட்டும்.

    உன் கணவரிடத்திலும் உறவினர்களிடத்திலும் தமிழிலேயே பேசுக. கணவரைக் கண்ணின் மணி எனப் பார்த்துக்கொள். உடல் நலமும் உள நலமும் பேணுக.

  இந்த அளவில் இம் மடலை நிறைவு செய்கிறேன்.

இப்படிக்கு,
உன் அன்பில் மகிழும்  அப்பா.


8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Very touching article about your mother uncle. I was able to relate and think about my father's (Sakthivel) flashback. He lost his mother when he was 3 years old. He could not continue his education after certain time but still he strives to educate us, no matter how many hardship he went through. He says that education is the biggest asset in our life. I would say, he is my "Sakthi" to all my success.

    - Kumaresan

    ReplyDelete
  3. இந்த மடலுக்கு மிக நீண்ட பின்னூட்டம் எழுத ஆசை, ஏனெனில் என் பள்ளி நாட்களையும் என் அன்பு அன்னையின் நீங்கா நினைவுகளையும் எனக்கு ஊட்டியது இந்த மடல். நன்றி அண்ணா!

    ReplyDelete
  4. என் ஆத்தாவை (தந்தையின் அம்மா) நினைவூட்டியது இப்பதிவு. என்மீது அளவற்ற அன்பு கொண்டவர். நன்கு படிக்கவும், முன்னுக்கு வரவும் வாழ்த்தியவர். இன்றும் பல பெரியவர்களின் முகங்களைப் பார்க்கும்போது என் ஆத்தாவின் நினைவு வருகிறது. சிலருடைய எண்ணங்களும் அன்பும் நமக்கு என்றும் அனுசரணையாக இருக்கும் என்பதை நான் உணர்வதுண்டு. மனதை அதிகம் நெருடிய பதிவு. நன்றி.

    ReplyDelete
  5. போற்றுதலுக்கு உரியவர்

    ReplyDelete
  6. Thank you for writing this letter pa. I grew up watching you paying respect to late thatha and paati always. I also marvel them and will always love to hear about them. I am sure they are looking down upon and blessing each day.

    ReplyDelete
  7. இணையற்ற நண்பர் அவர்களே! பொன்னேபோல் போற்றிப் பாதுகாக்கப்படவேந்தியக் கடிதம். நான் கொடைக்கானல் சென்றுவிட்டு இன்றுக்காலை வந்து இதைப் படித்தேன்.
    திரைப்பாடல் "... அந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படியில்லை" என்பது நாம் அறிந்ததே. உங்கள் விஷயத்தில் அந்தக் கூற்று தோற்றுத்தான் போயுள்ளது. ஒன்பது கிரகங்களின் நல்வரம் கிடைத்துள்ளது. நவமணிகளின் ஒளி கிடைத்துள்ளது. இவை அனைத்தும் தங்கள் அன்னையின் திருவருளால். நேரு இந்திராவிற்கு எழுதிய கடிதங்களுக்கு ஒப்பானது. அருணாவின் அருமையான நன்றியையும் பாரத்தேன். தாயின் பெருமையை அளவிடவே முடியாது. ஆமா... அன்று அண்ணன் தந்த அடி இன்று சுவைக்குமே! -- நீதிபதி மூ. புகழேந்தி

    ReplyDelete
  8. அருமையான நினைவுகள். என் நெஞ்சம் தொட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களது கட்டுரைகளைப் படிக்கின்றேன். அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, மு வ வின் அன்புள்ள தம்பிக்கு என்பதைப் போல மகள் அருணாவிற்கு நினைவுகளைப் பகிர்ந்துள்ளீர்கள். தேசம்மாள் என்ற பெயருடைய தங்கள் தாயரை அனைவ்ரும் அறியச் செய்துள்ளீர்கள்.

    ReplyDelete