Monday, 5 September 2016

ஆசிரியர் இனி ஆலோசகராகவும் இருக்க வேண்டும்


 
 பாலியல் வன்முறை, கொலை, குடி, களவு இவற்றில் ஈடுபடும் இளைஞர்கள் தொடர்பான செய்திகள் நாளும் நமது கவனத்தை ஈர்க்கின்றன. கவலை கொள்ளச் செய்கின்றன. இக் குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களாக அல்லது படித்தவர்களாக இருக்கிறார்கள்.

     படிக்காத இளைஞர்கள் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டால் அறியாமையால் செய்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் படிக்கின்ற மாணவ, மாணவியர் பற்பல ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

   இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் உமாமகேஸ்வரி என்ற ஆசிரியை வகுப்பறையில் தன் மாணவனால் கொல்லப்பட்டார். இருபது ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் பொன் நாவரசு, தான் படித்த மருத்துவக் கல்லூரியின் மூத்த மாணவர் ஜான் டேவிட் என்பவரால் கொலை செய்யப்பட்ட நிகழ்வு இன்றளவும் பேசப்படுகிறது.

    சில நாள்களுக்கு முன் கரூரில் ஒரு முன்னாள் பொறியியல் மாணவர் கல்லூரி வளாகத்தினுள் புகுந்து ஒரு மாணவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

      திருச்சியில் ஒரு கல்லூரி மாணவர் தன் காதல் வார்த்தைக்குச் செவி சாய்க்காத இன்னொரு கல்லூரி மாணவியை பட்டப்பகலில் பேருந்து நிறுத்தத்தில் சரமாரியாகக் கத்தியால் குத்திய நிகழ்வு பெண்ணைப் பெற்ற பெற்றோர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

    தூத்துக்குடியில் ஒரு  தேவாலயத்துக்குள் புகுந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு பெண் ஆசிரியரைக் குத்திக் கொன்றவர் ஒரு முன்னாள் பள்ளி மாணவர்.

     திருச்செங்கோட்டுப் பகுதி பள்ளி மாணவி ஒருத்தி குடித்துவிட்டுப் பள்ளிக்கு வந்த செய்தி மாவட்ட ஆட்சியரின் கவனத்தையும் ஈர்த்தது. மற்றும் ஒரு பள்ளியில் நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் குடித்துவிட்டு வகுப்புக்கு வந்த மேல்நிலை மாணவர்களின் செயல் மிகவும் கீழ்நிலையில் இருந்ததைச் செய்தித் தாள்கள் சுட்டிக் காட்டின.

     அண்மையில் திருப்பூரில் கொஞ்சம் கண்டிப்பாக இருந்த ஆசிரியையின் கன்னத்தில் அறைந்த ஒரு மாணவனின் மாபாதகச் செயல் மக்கள் மனத்தைவிட்டு இன்னும் அகலவில்லை.

    எண்பதுகளுக்கு முன் இதுபோன்ற குற்றங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் நடந்தன. காரணம் அக் காலகட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை. மாறாக மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டில் கவனம் செலுத்தினார்கள். வகுப்பில் பாடத்தோடு வாழ்வியல் நெறிகளை இணைத்துக் கற்பித்தார்கள். மொழியாசிரியர்கள் நல்ல கதைகளை வகுப்பில் சொன்னார்கள். நன்னெறி வகுப்பு, நீதி போதனை வகுப்பு முதலியவை இருந்தன. அந்த வகுப்புகளில் நீதி நூல்களைக் கற்பிப்பது கட்டாயமாக்கப் பட்டிருந்தது.

    நான்கு ஆண்டுகளுக்குக் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை ஒதுக்கிவிட்டு, ஒழுக்கமாக வாழ்வது எப்படி என்பதை மட்டும்  பள்ளிகளில் சொல்லிக் கொடுத்தால் நல்லது என்று தீபம் நா.பார்த்தசாரதி தன் நாவல் ஒன்றில் குறிப்பிடுவார்.

    சமுதாய ஒழுங்குகளை மதித்து வாழச் சொல்லிக் கொடுப்பவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். திருக்குறள், ஆத்திசூடி, இனியவை நாற்பது, இன்னா நாற்பது போன்ற நீதி நூல்களை முதலில் ஆசிரியர்கள் படிக்க வேண்டும். பிறகு அவற்றை மாணவர்களுக்குச் சுவைபடச் சொல்லித்தர வேண்டும்.

    ஒரு மாணவர் தன் பள்ளி இறுதி வகுப்பை முடிக்கும் முன் திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருள்பாலையும் கட்டாயம் கற்றிருக்க வேண்டும். இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளை ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் நம் தமிழ் நாட்டு மாணவச் செல்வங்கள் தடம் மாறி போகமாட்டார்கள்.

   நான் எழுபதுகளில் பட்டப் படிப்பைப் படித்தபோது, எனது தமிழ்ப்பேராசிரியர் அரியநாயகம் அவர்கள் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி முடிந்ததும் திருக்குறள் வகுப்பை நடத்தி, வாழ்வாங்கு வாழும் நெறிகளைச் சொல்லிக் கொடுத்தார்.

    எனது தமையனார் பெருமாள் அவர்கள் எனக்குக் கணிதப் பேராசிரியராக வாய்த்தார். செங்கோண முக்கோணம் பாடத்தை நடத்தியபோது, செங்கோண முக்கோணத்தின் செங்குத்துக் கோட்டைப் போல வாழ்க்கையில் வறுமை வந்தாலும் ஒழுக்க நெறியிலிருந்து சாயாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று கூறியது பசுமரத்து ஆணிபோல் இன்றும் என் நினைவில் பதிந்து என்னை வழிநடத்துகின்றது.

    நான் தலைமையாசிரியராக, முதல்வராகப் பணியாற்றிய பள்ளிகளில் பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான நீதி போதனை வகுப்பை எனக்காக ஒதுக்கிக்கொண்டு,  மன நல ஆலோசனைகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மேலும் ஒழுக்கக் கேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை அளிப்பதற்காக மூத்த ஆசிரியப் பெருமக்களை ஆலோசகர்களாக நியமித்தேன்.

   இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் காலை வணக்க வகுப்புகள் நாள்தோறும் நடைபெறுவது இல்லை. இவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, முதல்வர்கள் அல்லது ஆர்வமுடைய ஆசிரியர்கள்  நாளும் ஒரு திருக்குறளை மாணவர்களின் மனத்தில் பதியம் போட்டால், வருங்காலத்தில் இளைஞர் தொடர்பான குற்றங்கள் குறையும்.
     வருமுன் காப்பது என்பது நோய்க்கு மட்டுமன்று; மாணவருக்கும்தான். மாணவர்கள் தவறு செய்தபின் வருந்துவதைவிட, அவர்கள் தவறு செய்யாத வகையில் திட்டமிட்டு முன்கூட்டியே தகுந்த ஆலோசனைகள் வழங்கி ஆற்றுப்படுத்த வேண்டும்.  அதற்கு இனி ஒவ்வொரு ஆசிரியரும் ஆலோசகராக மாற வேண்டும். அதற்கானப் பயிற்சியைப் பெற வேண்டும்.

     புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்த வெளிப் பல்கலைக்கழகம் இது குறித்தப் பட்டயப் படிப்பை ஆசிரியர்களுக்கு அஞ்சல் வழியில் வழங்குகிறது. பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள், கல்லூரிக்கு இரண்டு பேராசிரியர்கள்  இப் பட்டயப்படிப்பில் சேர்ந்து படித்து முடிக்க வேண்டும். இதற்கு ஆகும் செலவை அரசு ஏற்றுக் கொள்ளலாம்.
     அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு. ஆசிரியர் ஒவ்வொருவரும் ஆலோசகர் என்னும் புதிய பரிமாணத்தை ஏற்றுத் தம்மிடம் படிக்கும் மாணாக்கச் செல்வங்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்னும் வேண்டுகோளை அவர்கள் முன் வைக்கிறேன்.

 -முனைவர் அ.கோவிந்தராஜூ

தேசிய விருதுபெற்ற ஆசிரியர்.

3 comments:

  1. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. ஆசிரியர் தின வாழ்த்தைத் தெரிவித்த தங்கள் பதிவிற்கு காலம்கடந்து எனது கருத்தைப் பதிவு செய்கிறேன். கல்விக்கண் கொடுத்த முதல்வர் என அழைக்கப்படும் கர்மவீரர் காமராசர் அவர்கள் சிறார்கள் அறிவில் சிதைந்து அழிந்து போகக்கூடாது என கிராமங்கள் தோறும் பள்ளிகளைத் தோற்றுவித்தார். ஆனால், இன்றைய நிலை பள்ளிகளை மூடிவருகின்றனர். தாங்கள் தெரிவித்ததைப்போன்று அறநூல் கருத்துக்களை ஊன்றிக் கற்றால் மனித மனத்தவறுகளில் இருந்து விடுபடலாம். அன்று மாணவன் கைகட்டி பாடம் கேட்டான், இன்று ஆசியரின் கைகள் கட்டப்பட்டதால் மாணவன் கையைத் தூக்குகின்றான். எதிர்காலம் எப்படிப்பட்ட மாணவனை உருவாக்குமோ தெரியவில்லை. காலம் தான் பதில் கூற வேண்டும்.
    பேராசிரியர் ரா.லட்சுமணசிங்
    அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கரூர்-5

    ReplyDelete