Wednesday, 1 October 2025

எழுத்தறிவித்த இறைவனைக் கண்டேன்

     அறுபத்தாறு ஆண்டுகளுக்குமுன் - 1959ஆம் ஆண்டு - என் பெற்றோர் ஏழு வயது சிறுவனான என்னை, அன்றைய திருச்சி மாவட்டம் இன்றைய அரியலூர் மாவட்டம் கூவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், முதலாம் வகுப்பில் சேர்த்தபோது என் வலக்கை ஆட்காட்டி விரலைப்பிடித்து, தட்டில் பரப்பியிருந்த பச்சரிசிமேல் ஆனா ஆவன்னா எழுதச் செய்தவர் இராஜாத்தி டீச்சர். அப்போது அவருக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது இருக்கலாம். நான் நான்காம் வகுப்புக்குச் செல்லும் வரையில் எனக்கு ஆசிரியராக இருந்தார்.

  நான் பின்னாளில் பத்துப் பட்டங்களும் பட்டயங்களும் பெற்றாலும், அவற்றுக்கான அடித்தளம் அமைத்தவர்களுள் இந்த இராஜாத்தி அம்மாவும் ஒருவர் என்பதை என்றும் நினைத்துப் பார்ப்பதுண்டு..

    இப்போது அவருக்கு வயது தொண்ணூறுக்கு மேல் இருக்கலாம். சென்னையில் மகள் அமலாவுடன் வசிக்கிறார். நானும் என் துணைவியாரும் சென்று அவரைச் சந்திக்க முடிவு செய்தோம்.

    அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சென்னையில் அவர் வசிக்கும் மடிப்பாக்கம், ஐயப்பன் நகர் இல்லத்திற்குச் சென்று அவருடைய அடிகளில் வீழ்ந்து வணங்கினேன். நான் எழுதி வெளியிட்ட The Symphony of Nature என்னும் ஆங்கிலக் கவிதை நூலையும், திருக்குறள் பாவுரை நூலையும் அவருக்கு அளித்து மகிழ்ந்தேன்.



    சென்ற ஆண்டு கனடாவில் வெளியான இந்த ஆங்கிலக் கவிதை நூலை அவருக்குதான் சமர்ப்பணம் செய்திருந்தேன். நூலின் அந்தப் பக்கத்தை விரித்துப் படித்துக் காட்டியபோது அவருடைய முகத்தில் ஒரு பெருமிதம் தவழ்ந்ததைப் பார்த்தேன்.

   அரைமணி நேரம் அவருடன் உரையாடி மகிழ்ந்தேன். அவரது பேச்சில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. என்னிடம் படித்த பழைய மாணவருடன் பேசும்போது கிடைக்கும் மகிழ்ச்சி ஈடு இணையற்றது என்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். அத்தகைய மகிழ்ச்சியை என் ஆசிரியையின் முகத்தில் பார்த்தேன்.

    இந்த வயதிலும் நல்ல நினைவாற்றலுடன் உள்ளார். அவர் முதல் முதலில் பணியில் சேர்ந்தபோது கூவத்தூர் பள்ளியில் இருந்த தலைமையாசிரியர் வடவீக்கம் சாமிநாதனை நினைவு கூர்ந்தார்.

    அவர் பிறந்த ஊர் வடவீக்கம் அருகேயுள்ள கல்லேரி என்றும், வடவீக்கம் பாத்திமா பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்ததும் கடலூர் சென்று ஆசிரியர் பயிற்சிப் படிப்பைத் தொடர்ந்ததைக் குறிப்பிட்டார். தாம் பணியாற்றிய பள்ளிகளைப் பட்டியலிட்டார். இறுதியாக ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் பள்ளியில் பணிநிறைவு பெற்றதைக் குறிப்பிட்டார். நல்ல வேளையாக நான் அவரது வகுப்பில் செய்த குறும்புகளை மட்டும் நினைவு கூரவில்லை!

   அவருடைய மகள் அமலா தயாரித்தளித்த சுவையான காபியை அருந்தி மகிழ்ந்தோம்.

 மீண்டும் ஒருமுறை குருவின் காலடியில் வீழ்ந்து வணங்கி விடைபெற்றேன்.

    உண்மையைச் சொல்கிறேன். ஒரு கோவிலுக்குள் சென்று இறைவனை வணங்கி வந்த உணர்வு ஏற்பட்டது.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

      

1 comment:

  1. நெகிழ்ச்சிங்க

    ReplyDelete