Thursday, 7 September 2017

சளைக்காமல் சைக்கிள் ஓட்டும் நாடு

   
  உலகிலேயே மிக அதிகமானோர் சைக்கிள் ஓட்டும் நாடு நெதர்லாந்து. அங்கே ஐம்பது விழுக்காட்டினர் சைக்கிளில் செல்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது கனடா ஆகும். இங்கே நூறு பேரிடம் கேட்டால் நாற்பத்தைந்து பேர்கள் சைக்கிள் ஓட்டுவதாய்த் தெரிவிக்கிறார்கள்.

     நம் நாட்டில் நூற்றுக்குப் பத்துப் பேரிடமாவது சைக்கிள் இருக்குமா என்பது சந்தேகமே. நம் ஊரில் தொலைப்பேசி புழக்கத்திற்கு வந்தபின் உற்றார் உறவினர்க்குக் கடிதம் எழுதும் வழக்கம் மறைந்து விட்டது. தொலைக்காட்சி வந்ததும் புத்தகம் வாசிக்கும் வழக்கம் அருகிவிட்டது. டிவிஎஸ்50 வரத் தொடங்கியதும் சைக்கிள்கள் எல்லாம் பேரீச்சம்பழத்திற்குப் பண்டமாற்றம் செய்யப்பட்டன.

     இந்நிலைக்கு மாறாக, கனடா நாட்டில் ஆண்டுதோறும் சைக்கிள் ஓட்டுவோர் எண்ணிக்கை கூடுகிறது. இங்கே சைக்கிள் விற்பனை அமோகமாக உள்ளது. சைக்கிள் ஓட்டுவதில் மூன்று வகைப்பாடுகள் உள்ளன. விளையாட்டின் ஒரு பிரிவாக(Sports cycling), மன மகிழ்ச்சிக்காக(Recreational cycling), வேலை நிமித்தமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதாக(commuting cycling) என்று அமைத்திருக்கிறார்கள்.

     இங்கே எட்டு வயது சிறுமியும் எண்பது வயது பாட்டியும் சைக்கிளில் செல்வதைப் பார்க்கலாம். ஒரு பெரிய தொழிற்சாலையின் வாயிற்காப்பாளர் பணிக்குச் சைக்கிளில் செல்கிறார்; தலைமை அதிகாரியும் சைக்கிளில்தான் செல்கிறார்.

    
காரில் பயணிக்கும் சைக்கிள்கள்
குடும்பத்துடன் காரில் வெளியூர் செல்வோர் கூட தம் சைக்கிள்களை காரின் பின்பக்கத்தில் பிணைத்து எடுத்துச் செல்கிறார்கள். செல்லும் இடத்திலும் சைக்கிள் சவாரிதான். சுத்த சைக்கிள் பைத்தியமாக இருக்கிறார்கள்!

    பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்னும் சட்டம் இந் நாட்டில் உள்ளது. எனினும் அனைவருமே சைக்கிள் ஹெல்மெட் அணிந்துதான் சைக்கிள் ஓட்டுகிறார்கள். சைக்கிளில் முன்பக்க விளக்கும் பின்பக்க சிவப்பு விளக்கும் பொருத்தப்பட வேண்டும் என்பது சட்டமாகும். மீறினால் நானூறு டாலர் அதாவது இருபதாயிரம் ரூபாய் தண்டத்தொகை!

    இந்த நாட்டில் பொதுமக்கள் பரவலாக சைக்கிளைப் பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

  
சைக்கிள் பாதை
சைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும்  நல்லது என்னும் விழிப்புணர்வு மக்களிடையே மிகுதியாக உள்ளது. சைக்கிள் ஓட்டிகளுக்குத் தனிக் குறுஞ்சாலைகள்(bicycle lanes) போடப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம்
24000 கிலோமீட்டர் சைக்கிள் சாலைகள் உள்ளன என்பதை யாராலும் நம்பமுடியாது. ஒட்டாவா ஒரு  சிறிய நகரம். இதில் 250 கிலோமீட்டர் சைக்கிள் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

   இந்த நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு தனிச் சாலையில் சைக்கிளில் செல்லமுடியும் என்பதைப் பெருமையுடன் சொல்கிறார்கள். சைக்கிள் சாலைகள் நெடுஞ்சாலைகளின் குறுக்கே செல்ல நேர்ந்தால் சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்துள்ளார்கள். நகரச் சாலையின் ஒரு பகுதியை சைக்கிளில் செல்வோர்க்கு ஒதுக்கியுள்ளனர்.

    
நகரப் பேருந்தில் சைக்கிளும்....

சைக்கிள் காப்பகம், பழுது நீக்கு மையம்
அரசு சைக்கிள் ஓட்டிகளுக்கென ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்துகிறது. அதற்காக பெரும் நிதியை ஒதுக்குகிறது. நகரப் பேருந்துகளில் சைக்கிளை கட்டணமின்றி எடுத்துச் செல்லும் வசதியை(Cycle racks) ஏற்படுத்தியுள்ளது. எல்லாப் பேருந்து நிலையங்களிலும் சைக்கிள் நிறுத்தக வசதி(Cycle shelter) உள்ளது.  சைக்கிளில் ஏற்படும் பழுதை நீக்க அங்கே ஸ்பேனர், சைக்கிள் பம்ப் முதலியவை உள்ளன.

  
வாடகை சைக்கிள்
மேலும் சுற்றுலாத் தலங்களில் நாமே கடன் அட்டை மூலம் பணம் செலுத்தி சைக்கிள் எடுத்து ஓட்டும் வகையில் ஆளில்லா சைக்கிள் நிலையங்கள் உள்ளன.

    ஆங்காங்கே சைக்கிள் ஒட்டிகளுக்கான தன்னார்வ அமைப்புகள் அரசு நிதி உதவியுடன் செயல்படுகின்றன. ஒட்டாவா பைசைக்கிள் கிளப் என்னும் அமைப்பு பல்வேறு போட்டிகளையும் விழாக்களையும் சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த கிளப் செய்யும் ஏற்பாட்டில், வாரத்தில் ஒருநாள் விடுமுறை நாளில் ஐம்பது பேர் நூறு பேர் என்று குழுவாக சைக்கிள் சவாரி செய்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

    மராத்தான் ஓட்டப்பந்தயம் என்பதைப் போல சைக்கிளத்தான்(Cyclathan) போட்டிகளை நடத்துகிறார்கள். இந்த அமைப்பின் மூலமாக ஒருவர் ஒலிம்பிக் வரை சென்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

    நம் சென்னையிலும் இத்தகைய அமைப்பு(WCCG-West Chennai cycling Group) ஒன்று இருக்கிறது என்பது ஆறுதல் தரும் செய்தியாகும். இந்த அமைப்பு வரும் செப்டம்பர் பதினேழாம் நாளன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் 110 கிலோமீட்டர் சைக்கிளத்தான் போட்டியை நடத்துகிறது. ஜெகன் சூரியா என்னும் இளைஞர் தன் சைக்கிளில் இன்று மதுரையை நோக்கித் தனி ஒருவராகப் புறப்படுகிறார். அவருக்கு முக நூலில் என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்த ஆர்வம் காட்டுத்தீ என ஊர்தோறும் பரவ வேண்டும். இரசிகர் மன்றங்களை மூடிவிட்டு இளைஞர் சைக்கிள் மன்றங்கள் தொடங்கப்பட வேண்டும்.

    நான்கு மாதங்கள் மட்டுமே சைக்கிள் ஓட்டுவதற்கான காலப்பருவ நிலையுள்ள கனடா நாட்டில் மக்கள் வரிந்து கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுகிறார்கள் என்றால், ஆண்டு முழுவதும் ஏற்றப் பருவநிலை உள்ள நாட்டில் பிறந்த நாம் சைக்கிளை ஓரம் கட்டிவிட்டோமே! இது நியாயமா?

  
எனதருமை சைக்கிள்
இப்படிக் கேட்பதற்கு எனக்குத் தார்மீக உரிமை உள்ளது. 1975 ஆம் ஆண்டு எனது முதல் மாத ஊதியத்தில் கோவை மாநகரில் சிட்டி சைக்கிள் மார்ட் என்னும் கடையில் வாங்கிய ரலே சைக்கிளை இன்னும் பராமரித்து ஓட்டிவருகிறேன்.

  தினமும் கொஞ்சதூரம் சைக்கிள் ஓட்டுவோருக்கு மூட்டு வலியே வராது என்கிறார்களே.

அதற்கு நானே சாட்சி.
..........................................................

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து

9 comments:

 1. நம் நாட்டில் நூற்றுக்குப் பத்துப் பேரிடமாவது சைக்கிள் இருக்குமா என்பது சந்தேகமே.// உண்மைதான் ஐயா....ஆனால் இங்கு சைக்கிள் பிற வாகணங்களுடன் போட்டி போட்டு ஓட்ட வேண்டியுள்ளதே...விபத்து நிகழும் வாய்ப்பு. அதிகம் ...சைக்கிளுக்கென்று அங்கு போல் தனி லேனோ, தனி பாதையோ, சாலையோ இல்லையே ஐயா....

  ஆனால் சுற்றுச் சூழல், மற்றும் உடல் நலனுக்கு மிக மிக நல்லதுதான் நீங்கள் சொல்லியிருப்பது போல்....

  நல்ல பதிவு ஐயா...

  துலச்சிதரன், கீதா

  ReplyDelete
 2. படிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறது ஐயா
  மிதிவண்டி ஓட்ட வேண்டும் என்பது எனது நெடுநாள் விருப்பம்
  ஒரு மிதி வண்டி வாங்கிவிடுகிறேன் ஐயா

  ReplyDelete
 3. இங்கு சைக்கிளை ஓட்டினாலே ஒருமாதிரியாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இடுப்பு, கெண்டைக்கால் சதை உள்ளிட்ட பல இடங்களுக்கு நல்ல பயிற்சி. ஒருவகையான உடற்பயிற்சியே சைக்கிள் ஓட்டல். அவ்வப்போது நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 4. மிதிவண்டி ஓட்டுதல் அவசியத்தை கனடா நாட்டின் அனுபவம் வழியே அறிந்தேன்!
  நன்றி ஐயா!


  ReplyDelete
 5. சைக்கிள் ஓட்டுவது மிக நல்ல விஷயம். நெய்வேலி நகரில் இருந்த வரை எல்லா இடங்களுக்கும் சைக்கிள் பயணம் மட்டுமே.

  ReplyDelete
 6. Arumayanaa Seithi. Nam arasangam eppoluthu viluthukollumo?

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. நல்லவற்றை நாளும் கூறுகிறீர்கள். ஆனால் கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பதுதான், நமது இன்றைய
  பண்பு. - நீதிபதி மூ.புகழேந்தி

  ReplyDelete
 9. பள்ளியில் படிக்கும்போது மிதிவண்டி ஓட்டியது!
  மீண்டும் ஓட்ட ஆர்வமாய் உள்ளது ஐயா!

  ReplyDelete