Thursday, 3 May 2018

மக்காத குப்பையும் என் மனைவியின் மகத்தான தீர்வும்

   நம் நாட்டில் திடக் கழிவுகள் பிரச்சனை என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாகவே உள்ளது. அழகு நகரங்கள் பட்டியலில் உள்ள திருச்சி மாநகரிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இது தொடர்பாக ஒரு குறும்படம் தயாரித்து வெளியிட்டும் கூட போதிய விழிப்புணர்வு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

  வீட்டுவரி கட்டுவதற்காக சென்றவாரம் கரூர் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். வழக்கமாகச் செலுத்தும் தொகையைவிட ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கேட்டார்கள். அது புதிதாக விதிக்கப்பட்டுள்ள குப்பை வரியாம். நாள்தோறும் நகராட்சி ஊழியர் வீடு வீடாக வந்து,  வீட்டில் சேரும் திடக் கழிவுகளைச் சேகரித்துச் செல்கிறார். மகிழ்ச்சியுடன் குப்பை வரியைச் செலுத்தினேன்.

   பொதுமக்கள் இந்த வசதியைப் பொறுப்புடன் பயன்படுத்துவதில்லை. உடைந்த பிளாஸ்டிக், கிழிந்த பாலித்தீன் பைகளை வீட்டிற்கு முன்புறம் உள்ள தெருவில் வீசி எறிந்து விடுகிறார்கள். வீசி எறியப்படும்  பாலித்தீன் பைகள் காற்றில் பறந்து சென்று வேலிகளிலும் செடிகளிலும் சிக்கிக்கொண்டு கேவலமாக் காட்சியளிக்கின்றன. மழை பெய்தால் அவற்றில் நன்னீர் தேங்கி டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் பெருகக் காரணமாகின்றன.

    தெருவில் ஆங்காகே கிடக்கும் பாலித்தின் பைகள் எல்லாம் மழை பெய்யும்போது ஓடும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு சாய்க்கடைக் குழாய்களை அடைத்துக் கொள்கின்றன. அதனால் சாய்க்கடை நீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து வீட்டினுள் புகும் சூழலும் உருவாகின்றது.

    துணிப்பை எடுத்துச் சென்று பொருள் வாங்குவதை கேவலமாக நினைக்கிறோம். பாத்திரம் எடுத்துச் சென்று பால், எண்ணெய் வாங்குவதை அவமானமாக நினைக்கிறோம். பூக்களை இலையில் கட்டிக்கொடுத்த காலம் போய்விட்டது. பனை நுங்கை பனையோலையில் கட்டிக் கொடுத்த காலம் மறைந்து விட்டது. எல்லாவற்றுக்கும் பாலித்தீன் பைகளே பயன்படுத்தப் படுகின்றன.

   திருமண நிகழ்வின்போது சாப்பிடுவதற்கு பிளாஸ்டிக் வாழை இலைகள் கூட பயன்படுத்தப்படுகின்றன. ஆயிரக் கணக்கில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் அணி வகுப்பதையும் பார்க்கிறோம். பாயாசத்தை இலையில் ஊற்றச் சொல்லி நக்கிச் சாப்பிடுவதே முறையாகும். ஆனால் இப்போது பாயாசம் பிளாஸ்டிக் கிண்ணத்தில் பரிமாறப்படுகிறது.

A heap of plastic bottles in Kodaikanal
    ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் எங்கு நோக்கினும் பிளாஸ்டிக் குப்பைகள். ப்ளாஸ்டிக் பொருளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த ஊர்களில் இந்த அவல நிலை எனில் பிற ஊர்களில் கேட்கவா வேண்டும்?

   இப்போதெல்லாம் தேநீர்க் கடைகளில் தேநீரைக் கண்ணாடிக் குவளையில் தருவதில்லை. ப்ளாஸ்டிக் குவளையில் தருகின்றார்கள். அதற்கு ஆங்கிலத்தில் யூஸ் அண்ட் த்ரோ கப் என்று பெயர். அந்த பெயருக்கேற்ப தேநீரை அருந்திவிட்டுக் குவளையை கண்ட இடங்களில் விட்டெறிகிறார்கள்.

   இதுகுறித்து நானும் என் துணைவியாரும் இன்று  பேசிக்கொண்டிருந்தபோது ஒரு புதிய யோசனையைச் சொன்னார்.

   உடைந்த பிளாஸ்டிக், கிழிந்த, பழைய பாலித்தீன் பைகளை எடுத்துக்கொண்டு கிலோ ஒன்றுக்குப் பத்து ரூபாய் தந்தால் யாரும் அவற்றை வெளியே எறியமாட்டார்கள். சேர்த்து வைத்து விற்பதில் குறியாக இருப்பார்கள்.

   நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறப்பதுபோல் பிளாஸ்டிக் கொள்முதல் நிலையங்களை ஊருக்கு ஊர் அரசே திறந்து மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கிக்கொள்ள வேண்டும். அவற்றைத் தாருடன் கலந்து சாலைகள் அமைக்கப் பயன்படுத்தலாம்.

   முதல் முறையாக ஒரு நல்ல யோசனையைச் சொல்லியிருக்கிறாய் எனச் சொன்னால் கோபித்துக் கொள்வாரே என அஞ்சி, “நீ அடிக்கடி இப்படி நன்றாகச் சிந்திக்கிறாய்” என்று பாராட்டினேன்.

   பாராட்டுக்கு மயங்காதார் யாருமில்லை. சற்று நேரத்தில் முலாம் பழச்சாறு கிடைத்தது!

    

13 comments:

 1. "நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறப்பதுபோல் பிளாஸ்டிக் கொள்முதல் நிலையங்களை ஊருக்கு ஊர் அரசே திறந்து மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கிக்கொள்ள வேண்டும்."
  நல்ல யோசனை அம்மா.பிளாஸ்டிக் மறுசுழற்சியில் நமக்கு பல பொருட்கள் கிடைக்கும். இதனால் நமது சற்றுச்சூழலையும் காக்கலாம்.

  ReplyDelete
 2. உண்மையிலேயே அருமையான சிந்தனை ஐயா

  ReplyDelete
 3. As said by mother, it is good to take away all the unwanted plastics by the concerned.. That alone cannot be a solution Sir, the production of all these plastic based things should be banned by the govt with proper implementation and strict order.. That alone can save the future generations

  ReplyDelete
 4. As said by mother, it is good to take away all the unwanted plastics by the concerned.. That alone cannot be a solution Sir, the production of all these plastic based things should be banned by the govt with proper implementation and strict order.. That alone can save the future generations

  ReplyDelete
 5. நல்ல யோசனைதான். அம்மையாருக்கு நன்றி. பகிர்ந்த உங்களுக்கும்.

  ReplyDelete
 6. நல்ல யோசனை ஐயா. தங்கள் மனைவிக்குப் பாராட்டுகள். உங்களுக்கு முலாம்பழ ரசம் கிடைத்தது போல எங்களுக்கும் கிடைக்குமா?!!! ஹா ஹாஅ ஹா ஹா ஹா..

  -துளசிதரன், கீதா

  கீதா: சென்னையில் முன்பெல்லாம் பால் கவரை வாங்கிக் கொண்டுச் செல்வார்கள் விலைக்கு. அது போல இடையில் ப்ளாஸ்டிக் குப்பைகள் தனியாகவும் மக்கும் குப்பைகள் தனியாகவும் வாங்கிச் சென்றனர். பின்னர் அது போய்விட்டது. ஏனோ..யோசனை செயல்படுத்தப்பட்டால் நல்லதே ஐயா...

  ReplyDelete
 7. சிறப்பான யோசனை.

  ReplyDelete
 8. நல்ல யோசனை

  ReplyDelete
 9. மிகவும் அவசியமான ஆலோசனை. இந்த ஆலோசனைக்கு பலன் கிடைக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி

  ReplyDelete
 10. மிகவும் அவசியமான ஆலோசனை. இந்த ஆலோசனைக்கு பலன் கிடைக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி

  ReplyDelete
 11. நன்று. பாராட்டுக்கள்

  ReplyDelete