Friday 2 August 2019

தமிழில் பேசிய தருண் விஜய்


   உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அவர்கள் தன் ஆங்கிலப் பேச்சின் நடுநடுவே தமிழில் பேசி கல்லூரி மாணவர்களின் கைதட்டலைப் பெற்றார். அம்மா செய்யும் பாயாசத்தில் உடைத்த முந்திரி பருப்புகள் வாய்க்கு வாய்த் தட்டுப்படுவது போல, அவரது பேச்சின் இடையே உச்சரித்த திருவள்ளுவர், திருக்குறள், ஆண்டாள், வேலுநாச்சியார், சுப்ரமணிய பாரதிபோன்ற  தமிழ்ச் சொற்கள் உண்மையில் செவிக்கு இன்பம் தருவதாகவே அமைந்தன.

   யார் இந்த தருண்விஜய்?
திருக்குறள் தூதுவர் தருண் விஜய்
  திருக்குறளின்பால் ஏற்பட்ட காதல் காரணமாக, திருக்குறள் மாணவர் இயக்கத்தைத் தொடங்கி நடத்துபவர். உத்தரகாண்ட் பகுதியில் திருவள்ளுவர் சிலையை நிறுவியவர். நாடு முழுவதும் சென்று அந்தந்த உள்ளூர் மொழிகளில் திருக்குறளின் சிறப்பைச் சொல்லும் பரப்புரையாளர்.

  அகர முதல எனத் தொடங்கும் குறளை அவர் சொன்னது, ஒரு குழந்தை தன் மழலை மொழியில் சொன்னால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது.

    இனி அவரது பேச்சின் சாரத்தைச் சுருக்கமாகக் காண்போம்.

   “பண்பாடு, நாகரிகம் மிகுந்த ஒரு சமுதாயம் உருவாக வேண்டுமானால், முதலில் திருக்குறளை மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குறள் பாக்கள் சொல்லித்தரப்பட வேண்டும். அதையும் உள்ளூர் மொழிகளில் சொல்லித்தர வேண்டும். திருக்குறளை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்.” என்று தன் உரையில் குறிப்பிட்டதை அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

  மேலும், “நான் இமயமலையின் அடிவாரத்தில் வசிக்கிறேன். அங்கே அளவுக்கு அதிகமான மழை இருக்கும். இமயமலையைத் தழுவும் அந்த மேகக்கூட்டத்தின் ஒரு தொகுதி தமிழ்நாட்டுக்கு வந்து மழையாய்க் கொட்ட வேண்டும் என விரும்புகிறேன் தண்ணீர்ப் பஞ்சம் தீர்ந்தாலும் நாம் தண்ணீரைச் செலவிடுவதில் ஓர் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.” என்று பேசியது ஓர் எச்சரிக்கை மணியாக ஒலித்தது.

   வான் சிறப்பு அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்பாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருவரி உரை எழுதி, அதை நேர்த்தியாக அச்சிட்டு, நண்பர் இராமசுப்பிரமணியன் என்னை அறிமுகப்படுத்தியபோது, தருண் விஜய் அவர்களிடம் கொடுத்தேன். தன் பேச்சின் இடையே அந்த ஒரு வரி தமிழ் உரையைப் படித்தார், படிக்க முயன்றார் என்பது தமிழ் மொழியின்பால் அவருக்கிருந்த ஆர்வத்தை காட்டியது. அவ்வப்போது என் பெயரையும் குறிப்பிட்டுப் பேசியது எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது.

  வான்சிறப்பு அதிகாரத்திற்கு நான் எழுதிய அந்த ஒருவரி உரை: 

வான் சிறப்பு
The blessing of rain


1.மழை நீர் அமிழ்தமாகும்.
 The rain is known as ambrosia.

2.மழையே உணவை ஆக்கித் தருகிறது.
 The rain begets food

3.மழை இல்லையேல் பஞ்சமும் பசியும் தலை விரித்தாடும்.
 If the rain fails, hunger will cause famine and misery.

4.மழை இல்லையேல், உழவர் உழமாட்டார்.
 If the rain fails, farmers cannot plough.

5.உயிரினங்களின் வாழ்வை மீட்டளிப்பது மழையே.
 The rain restores the life of living beings.

6.மழை இல்லையேல் புல் கூட முளைக்காது.
  If the rain fails, even the grass will not shoot up.

7.மழை இல்லையேல் கடல் வளமும் குன்றும்.
      If the rain fails, even the wealth of the sea will shrink.

8.மழை இல்லையேல் பூசையும் விழாவும் நடை பெறா.
 If the rain fails, there will be no festivals and rituals.

9.மழை இல்லையேல் தானமும் இருக்காது; தவமும் இருக்காது.
  If the rain fails, nobody will practise charity or penance.

10.எனவே, மழை இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது.
 So, life on earth cannot sustain without water             

  அவரது பேச்சைத் தொடர்ந்து, மழைவேண்டி வான்சிறப்பில் அமைந்த குறள்பாக்களை வள்ளுவர் கல்லூரியில் படிக்கும் 2500 மாணவர்களும் ஒருமித்தக் குரலில் முற்றோதல் செய்தனர்.

 
அதனைத் தொடர்ந்து நாதஸ்வர, வயலின்,  கலைஞர்கள் அமிர்த வர்ஷினி இராகத்தில் இசைத்த பாடல்கள் செவிகளில் தேனாய்ப் பாய்ந்தன. தொடர்ந்து ஓதுவார் இருவர் ஞானசம்பத்தரின் மேக இராகத்தில் அமைந்த மழைவேண்டும் பாடல்களை மனமுருகிப் பாடியவிதம் கேட்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.

    விழா முடிந்ததும், திருக்குறளைப் பரப்பும் பணியை ஒரு வேள்வியாகச் சத்தமின்றிச் செய்யும் கல்லூரித் தாளாளர் திரு,க,செங்குட்டுவன் அவர்களைப் பாராட்டிப் பேசிவிட்டு, ‘இந்த நாள் இனிய நாள்’ என்னும் உணர்வோடு இல்லம் வந்து சேர்ந்தேன்.
   

8 comments:

  1. இந்த நாள் இனிய நாள் - இந்த பகிர்வை படித்ததினால்... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. மழை பெற மரம் வளர்க்கவேண்டும். அதை விடுத்து மரங்களை வெட்டிச்சாய்த்து விட்டு அதில் கட்டடங்களைக் கட்டி அதன் மீது அமர்ந்து யாகம், பதிகம் பாடினால் மழை வராது ஐயா. தொண்டை வரண்டு கண்ணீர் தான் வரும். இது விளம்பர நோக்கில் செய்யும் செயலே அன்றி பொது நலமல்ல. எல்லாம் பணத்தை நோக்கிய நகர்வு. அங்கே 100 செடிகளை வைத்து விழா எடுத்து அதைக் காப்பாற்ற உறுதி
    மொழி எடுத்திருந்தால் பாராட்டி இருக்கலாம். ஆனால் அவர் தமிழ் பேசியது வியப்பாக உள்ளதாக சொல்வதில் என்ன இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உறக்கச் சொல்ல வேண்டிய சிந்தனை! அதை ஏன்....?

      Delete
  3. Accurate Translation ! When non-native speakers speak our language,it is naturally enjoyable.

    ReplyDelete
  4. "மழை இல்லையேல் பூசையும் விழாவும் நடை பெறா.
    If the rain fails, there will be no festivals and rituals."
    நம் மண்ணில் இது மட்டும் தடைபடுவதில்லை. மழை இல்லை...! விவசாயம் இல்லை....! வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது...!

    ஆனாலும் இங்கே பூசை புனஸ்காரத்திற்கு குறைவில்லை...! கடன் வாங்கி பூசை செய்யும் எம் மக்களை என்னவென்று சொல்வது. ஆரியம் எவ்வளவு ஆழம் ஊடுறிவியுள்ளது....!

    "இந்த நாடும்.... நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்....!"
    பி. எஸ். வீரப்பாவின் வரிகள் என் காதுகளுக்கு மிக அருகில் ஒலிக்கின்றன!

    ReplyDelete
  5. உண்மையிலேயே இனிய நாள்தான் ஐயா. அதனை நீங்கள் பகிர்ந்தவிதம் அருமை.

    ReplyDelete
  6. உங்களின் தமிழ்ப்பணி பாராட்டிற்குரியது. தருண்விஜய் முயற்சி வெற்றிபெற வேண்டும் என்பதே நம் அவா.

    நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  7. தருன்விஜய் ஆர்வமும் முயர்ச்சியும் பாராட்டிற்குரியது.

    ReplyDelete