Tuesday 27 August 2019

அமேசான் காடும் அணையாத் தீயும்


    இயற்கையில், இயற்கையின் செயல்பாடுகளில் எப்பொழுதும் ஓர் ஒழுங்கும் ஒத்திசைவும்  இருக்கும். சென்ற நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் அந்த ஒழுங்கைக் கண்டு இரசித்தார்கள். அந்த ஒழுங்குக்கு ஊனம் நேராத வண்ணம் வாழ்ந்து மறைந்தார்கள்.
   சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லிவிடுகிறேன்.
 பூமியின் வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகள் உருகும் செயல் ஆண்டுதோறும் ஓர் அளவுடன் ஓர் ஒழுங்குடன் நடந்தது. ஆனால் இப்போது கதை கந்தலாகிவிட்டது. அளவுக்கு அதிகமாகப் பனிப்பாறைகள் உருகி, அதனால் கடல் மட்டம் பெருகி, கடல்களே நிலப்பரப்பை விழுங்கத் தொடங்கிவிட்டன.

    இன்னும் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியிருக்கும் திருவல்லிக்கேணி, பாரிமுனை போன்ற நகரங்கள் காணாமல் போய்விடும். தெற்கே இருக்கும் கன்னியாகுமரியை கடல் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும். இதற்கு என்ன காரணம்? பசுங்குடில் வாயுக்கள் அண்ட வெளியில் அதிகம் ஆக, அதன் விளவாக பூமியின் குடையாகத் திகழ்ந்த ஓசோன் படலத்தில் ஓட்டைவிழ, அதன் காரணமாக பூமியின் வெப்பம் அதிகம் ஆக பனிப்பாறைகள் தாறுமாறாக உருகத் தொடங்கிவிட்டன.

    பசுங்குடில் வாயுக்கள் ஏன் பெருகின? மனிதனின் அளவுக்கு அதிகமான நுகர்வுதான் காரணம். தானியங்கி வாகனங்கள், நாம் பயன்படுத்தும் ஏ.சி., ஃபிரிட்ஜ் போன்றவை வெளியிடும்  கரியமில வாயுக்களின் கூட்டணிதான் பசுங்குடில் வாயுக்கள். அவைதாம் ஓசோன் குடையைக் கிழித்துப் போடுகின்றன.

     இப்படி இயற்கையின் செயல்பாடுகளை மாற்றியமைப்பது மனிதர்களே. இந்தப் பூமிப் பந்தின்மேல் வாழும் மற்ற உயிரினங்கள் எதுவும் இத்தகைய சூழல் தீவிரவாதத்தை முன்னெடுப்பதில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த முறையில்தான் இன்றும் மனிதனைத்தவிர மற்ற விலங்குகள் வாழ்கின்றன. அவற்றின் தேவைகள் எப்பொழுதும் ஒரே அளவிலேயே இருக்கின்றன. ஆனால் தேவையற்ற நுகர்வு காரணமாக மனிதனின் தேவைகள் பன்மடங்கு பெருகிவிட்டன. தன் தேவைகளை அறம் அல்லாத முறையில் நிறைவேற்றத் தொடங்கியதன் பின் விளைவுதான் சூழல் கேடு.

    மனிதன் நடத்தும் சூழல் தீவிரவாதத்தின்  இன்னொரு முகம்தான் அமேசான் காட்டுத்தீ என்றால் இக் கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

   உலகின் மிகப்பெரிய காடு அமேசான் மழைக்காடு என்பதாகும். இது பூமித் தாயின் நுரையீரல் என்று அழைக்கப்படும் சிறப்புடையது. உலகின் ஒன்பது நாடுகளில் பரவிக்கிடக்கிறது. அறுபது விழுக்காடு காடு பிரேசில் நாட்டில் உள்ளது. அமேசான் ஆறு உள்ளிட்ட ஆயிரம் ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் இந்த அமேசான் என்னும் அடர்வனம். தாவர, விலங்கினங்களின் மரபின வங்கியாக  விளங்குகிறது. மேலும் உலக மக்கள் தொழில்நுட்ப வாழ்வியல் காரணங்களால் வெளியிடும் இரண்டு பில்லியன் டன்கள் கரியமில வாயுவை ஈர்த்துக்கொண்டு அதை உயிர் வளியாக மாற்றி வெளியிடுகிறது. பூமியில் வாழும் உயிரினங்கள் சுவாசிப்பதற்குத் தேவையான உயிர்வளித் தேவையில் இருபது  விழுக்காட்டைக் கொடையாய்த் தருவது அமேசான் காடுதான்.

    இத்தகு சிறப்புகள் கொண்ட அமேசான் அடர்வனத்திற்கு இது சோதனைக் காலம் போலும். இப்போது அமேசான் காடு வாரக்கணக்கில் பற்றி எரிகிறது. இது ஓர் இயற்கை நிகழ்வு அன்று என்னும் அதிர்ச்சித் தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இது ஒரு செயற்கை நிகழ்வு என அமேசான் சூழல் ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

    பேராசை கொண்ட கார்ப்போரேட் நிறுவனங்கள் தங்கள் வணிக விரிவாக்கத்திற்காகத் திட்டமிட்டுச் செய்துள்ள சதியே இது. வேண்டுமென்றே காட்டை அழிக்க இடப்பெற்றத் தீ இதுவாகும். இதுவரை 40,341 இடங்களில் தீப்பற்றி எரிவதாகவும், 32500 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுள்ள காடுகள் வெந்து சாம்பலாகிவிட்டன என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரு நிமிடத்திற்கு ஐந்து கால்பந்து மைதான  பரப்பு என்னும் அளவில் அமேசான் காடு அழிக்கப்படுவதாக பிரேசில் நாட்டு விண்வெளிக்கழகம் தெரிவிக்கிறது. அரியவகை விலங்கினங்கள், தாவர இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. வரும் தலைமுறைக் குழந்தைகள் இவற்றை இனிமேல் படங்களில் மட்டுமே பார்க்கமுடியும்! ஏனோ தெரியவில்லை. நம்மூர் ஊடகங்கள் இதுகுறித்து ஆர்வம் காட்டாமல் இருக்கின்றன.

    இந்தச் சூழலில் நாமும் இதுகுறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். மண்ணை, மலையை, காட்டை நாட்டின் அரண் எனச் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாட்டில் வாழும் நாம் ஒரு தனி மனிதனாக உலகச் சூழல் மேம்பாட்டுக்கு எப்படி உதவலாம் என யோசிக்க வேண்டும்.

     நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அதன் அடிக்கிளையை வெட்டும் அறிவிலாச் செயலை மனிதன் நிறுத்துவானா? சூழல் கெடாமல் வாழும் வகையை இளைய தலைமுறைக்கு இன்றைய கல்வி சொல்லிக் கொடுக்குமா? மனிதன் தான் கண்டுபிடித்த அதி தொழில்நுட்பக் கருவிகளின் போதைக்கு அடிமையாகி இந்தப் பூமியில் அவன் வாழ்ந்த சுவடே இல்லாமல் அழிந்து போவானா?

   சிறிய அலைபேசிகளின் நச்சு வளையத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் நாம் இவை குறித்துச் சிந்திக்க வேண்டாமா? இயற்கை தந்த பூமிச் செல்வத்தை மனித இனம் அழித்தது என்னும் பழிச்சொல் நம்மைச் சேரும் என்பதை உணர வேண்டாமா? எங்கோ உள்ள அமேசான் காடு எரிகிறது நமெக்கென்ன குடிமுழுகிப்போனது என்று நம் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியில் தொலைந்து போவது நியாயமா?

   வாருங்கள். விழித்துக் கொள்வோம். சூழலுக்கு ஊறு நேராமல் இனி வாழப் பழகுவோம். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று பாரதி சொல்வானே அந்தப் புத்துணர்வுடன் புறப்படுவோம். செயல்படுவோம்.

கட்டுரை ஆக்கம்: முனைவர் அ.கோவிந்தராஜு, தேசிய விருதாளர்.
    

5 comments:

  1. ஒவ்வொருத்தரும் சிந்திக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் பகிர்வில்...

    விழிப்புணர்வு பதிவு என்று என்னால், சர்வ சாதாரணமாக ஒதுக்கிக் கொள்ள முடியவில்லை எனக்கு...

    மரம் வளர்ப்போம்... மேலும் மேலும் மரம் வளர்ப்போம்... இன்றைய நேரத்திற்கு அதுவே ஒரு சிறு துணை...

    ReplyDelete
  2. மரம்தனைப் போற்றுதும்...மரம்தனைப் போற்றுதும்!
    மாமழை பெற்றிட...மரம்தனைப் போற்றுதும்!
    மாமழை போற்றுதும்...மாமழை போற்றுதும்!
    மானுடம் பேணிட...மாமழை போற்றுதும்!
    மரம்தனை...மழைதனை...மானுடம் பெற்றிட,
    ஞாயிறு போற்றுதும்...ஞாயிறு போற்றுதும்!

    ReplyDelete
    Replies
    1. தம்பிக்கு நன்றாகக் கவிதை எழுதவும் வருகிறதே. அருமை

      Delete
  3. வேதனையாக இருக்கிறது ஐயா

    ReplyDelete
  4. அருமையான அறிவியலுடன் கூடிய தமிழ்ச் சிந்தனை.வாழும் சமுதாயத்திற்கு வழிகாட்டும் கருத்துரை.அவசியம் அவர்சொல் கேட்போம்.அழிவை நிறுத்துவோம். நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete