Monday 16 September 2019

வேர்களும் விழுதுகளும் விருதுகளும்


    கோபிசெட்டிப்பாளையம் வைரவிழாப் பள்ளி பல பழம்பெருமைகளைக் கொண்ட பள்ளியாகும். 1884 ஆம் ஆண்டு கொடை உள்ளம் கொண்ட எஸ்.கே.கிருஷ்ண சாஸ்திரியார், சீனிவாச ஐயங்கார் ஆகியோரின் நிதி உதவியுடன் ஒரு நடுநிலைப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது.
கோபி நகரைச் சேர்ந்த பெரியோர் சிலர் சேர்ந்து ஒரு நிலையானக் கட்டடம் கட்டி அதை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த எண்ணி மாவட்ட நிர்வாகத்தை அணுகினர். அன்றைய கோவை மாவட்டத் துணை ஆட்சியர் தலைமையில் 8.6.1897 அன்று ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகரின் மையப் பகுதியில் நிலம் வாங்கவும், ஒரு கட்டடம் கட்டவும் முடிவு செய்தனர். நம் நாட்டு மக்கள் நம்மை ஆண்ட விக்டோரியா மகாராணியாரின் அறுபதாம் ஆண்டு ஆட்சி நிறைவு விழாவைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாட இருந்த காலக்கட்டம் அது. அந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூரும் வகையில் வைரவிழாப் பள்ளி எனப் பெயர் சூட்டவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.(அறுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழா வைரவிழா எனப்படும்)

   அடுத்த ஆண்டில் கோவை மாவட்ட ஆட்சியர் கம்மிங் என்பார் தன் மனைவியுடன் வந்து ஜமாபந்திக்காக கோபியில் சிலநாள் முகாமிட்டிருந்தார். அச் சமயத்தில்தான் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அவரது துணைவியாரால் 3.3.1898 அன்று வைரவிழாப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்காலிக கட்டடங்களில் வைரவிழா உயர்நிலைப்பள்ளி செயல்படத் தொடங்கியது. ஏ.எஸ்.வைத்தியநாத ஐயர் என்பார் முதல் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து வி.எஸ்.சீத்தாராமய்யர் தலைமையாசிரியராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார். பின்னர் தலைமையாசிரியராய்ப் பணியேற்ற வி.என்.வெங்கட்ராமய்யர் முப்பது ஆண்டுகாலம் பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் பள்ளி பன்முக வளர்ச்சி கண்டது. பள்ளிக்கு மகாத்மா காந்தி வந்த வரலாற்று நிகழ்வு இவர்காலத்தில்தான் அரங்கேறியது. அந்தப் பொன்னாள் 22.10.1927.

    நாடு சுதந்திரம் பெற்று, பள்ளியில் நடந்த முதல் சுதந்திர தினவிழாவில் தலைமையாசிரியர் திரு.கே.எம்.இராமசாமி அவர்கள் தலைமையில், அன்றைய பள்ளித் தாளாளர் திரு.ஏ.ஆர்.சோமசுந்தரம் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார் என்பதும் பள்ளி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

   4.9.1956 அன்று வினோபா பாவே பள்ளிக்கு வந்து ஆலமரத்து நிழலில் அமர்ந்து மாணவர்களிடையே உரை நிகழ்த்தியதும் குறிப்பிடத் தகுந்ததாகும்.

    நம் நாட்டின் வெண்மைப்புரட்சியின் தந்தை எனப்படும் டாக்டர் வர்கீஸ் குரியன் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது பெருமைக்கு உரியதாகும்.

    பெரியசாமி தூரன் அவர்கள் இப்பள்ளியில் சிலகாலம் கணித ஆசிரியாரகப் பணியாற்றினார் என்பதைச் சொல்லி சொல்லி மகிழலாம்.

         இப்படிப் பல ஆளுமைகள் வேர்களாக இருந்த பள்ளியில் விழுதுகளாக இருந்த ஆசிரியர்கள் நூற்றுக் கணக்கானவர்கள். விதிப்பயன் காரணமாக, கோபி நகர்மன்ற மேனிலைப்பள்ளியில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தும், அதைப் புறம் தள்ளிவிட்டு, வைரவிழா மேனிலைப்பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராக 10.8.1979 அன்று பணியில் சேர்ந்தேன்.

   கடந்த 118 ஆண்டுகளில் பள்ளியை வழிநடத்திச் சென்ற  தலைமையாசிரியர்கள் பன்னிருவர்.  ஒப்பற்ற மாமனிதர் ஓ.கு.தியாகராஜன் அவர்களின் பணிநிறைவுக்குப் பிறகு 19.6.1993 அன்று நான் ஒன்பதாவது தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய ஆண்டுகள் பதினொன்று. பள்ளிக்கு நிரந்தர அங்கீகார ஆணை பெற்றுத் தந்தது எனது குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும்.


என் பணிக்காலத்தில் பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் அளித்த பங்களிப்பைப் பாராட்டி எனக்கு 5.9.2003 அன்று  அப்போது குடியரசுத் தலைவராய்ப் புகழ்பெற்று விளங்கிய   டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தேசிய விருது வழங்கிச் சிறப்பித்தார்.

“ஊழின் பெருவலி யாவுள?” என்பார் திருவள்ளுவர். அந்த வகையில் 31.5.2004 அன்று நானாகப் பணிநிறைவு பெற்று, அடுத்த நாளே கரூர் டி.என்.பி.எல். பள்ளியின் முதல்வரானேன்.

    இந்த வரலாற்றுப் பின்னணி எல்லாம் இப்போது எதற்கு என்றுதானே கேட்கிறீர்கள்? 

  இம்மாதம் 5.9.2019 அன்று இதே பள்ளியைச் சேர்ந்த டாக்டர் எம்.மன்சூர் அலி என்னும் ஆசிரியர் தேசிய விருது பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டில் தேசிய விருது பெற்ற இருவரில் இவர் ஒருவர். மற்றொருவர் திரு.இரா.செல்வகண்ணன். கரூர் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்.

தேசிய விருது பெறும் டாக்டர் எம்.மன்சூர் அலி


 
தேசிய விருது பெறும் இரா.செல்வகண்ணன், க.பரமத்தி
  இரண்டு தேசிய விருதாளர்களை உருவாக்கிய ஒரே பள்ளி தமிழ்நாட்டில் வைரவிழாப் பள்ளி என்பதை ஒரே வரியில் கூறிச் செல்ல முடியுமா? அதனால்தான் இந்த முன்னுரை.

  தேசிய விருது பெற்றுள்ள டாக்டர் எம்.மன்சூர் அலி அவர்களை வாழ்த்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
-முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூரிலிருந்து.
   

5 comments:

  1. இதைவிட மகிழ்ச்சி ஏதுமில்லை... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  2. இப்பள்ளியில் தங்களிடம் பயின்றவன் என்ற முறையிலும் நானும் பெருமிதம் அடைகிறேன், ஐயா!

    ReplyDelete
  3. விருதுகள் விற்க/வாங்கப்படும் இக்காலத்தில், தகுதிக்கும் திறமைக்கும் விருது கிடைத்தது, நேர்மையாளர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்/வெற்றி.வைரவிழாப் பள்ளியின் முந்நாள் தலையாசிரியர் எங்கிற முறையிலும், முந்நாள் விருதாளர் என்கிற முறையிலும் கருவூரைச் சேர்ந்த மூத்த குடிமகன் என்கிற முறையிலும் அண்ணா உங்களுக்குப் பெருமைப்பட பல காரணங்கள் உள்ளன. ஆனால், எங்களுக்கு "இனியன் அண்ணன்" தொடர்புடைய செய்தி என்கிற ஒற்றைக் காரணம் போதும்....... மகிழ்ச்சிப் பெருக்கில் திழை/ளைக்க...! விருதாளர்களுக்கு உள்ளார்ந்த வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  4. மகிழ்ச்சியும் வாழ்த்தும் ஐயா.

    ReplyDelete
  5. அந்தப்பள்ளியில் என் மகன் மருத்துவர் எழிலரசனை நான் சேர்க்க வந்த நாள் முதல் நாம் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். உங்களது அயரா உழைப்பு பள்ளி, மாணவர்களிடம் நீங்கள் கொண்ட ஈடுபாடு அனைத்தையும் நன்றாக அறிவேன். எத்தனைச் சிறப்புகள்! என் நல்ல நேரம் அங்கு நான் நீதிபதியாகப் பணியாற்ற வந்தது. இப்போது எனக்கு வழிகாட்டியாகவும் நானெழுதியுள்ள 23 நூல்களில் 1 7 நூல்கள் நீங்கள் பார்த்தவையே. உங்கள் சிறப்பு என்றும் மேலோங்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete