Friday 5 June 2020

மண்ணாகிப் போவான் மனிதன்



 இன்று காலையில் எழுந்ததும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு இன்றியமையாத பணியில் ஈடுபட்டேன். ஆம். சாலையோரத்தில் ஒரு பூவரசு மரக்கன்று நட்டேன்.

  

    ஐந்து ஆண்டுகளுக்குமுன் இப்படியொரு ஜூன் ஐந்தில் நான் நட்ட ஒரு வேப்பங்கன்று வளர்ந்து பெரிதாகி வாசலில் நின்று எங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை நாளும் கூட்டுகின்றது.

  
எழுபதுகளின் தொடக்கத்தில்தான் சுற்றுச் சூழல் குறித்த சிந்தனை எழுந்தது. பன்னாட்டு மன்றத்தின் (United Nations Organisation) கவனமும் சுற்றுச் சூழல் பற்றியதாக இருந்தது. அதன் உறுப்பு நாடுகள் சுற்றுச் சூழல் கேட்டின் தாக்கத்தை உணரத் தொடங்கியதன் விளைவாக பன்னாட்டு மன்றத்தின் ஓர் அங்கமாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை(UN Environment Protection Agency)  உதயமானது.

   
உலக அளவில் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பிய பன்னாட்டு மன்றம் ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச் சூழல் தினமாக அறிவித்தது. முதன் முதலில் 1974 ஆம் ஆண்டு ஜூன் ஐந்தாம் தேதி அன்று உலக நாடுகள் கொண்டாடின.

   
ஒலிம்பிக் போட்டிகளை ஒவ்வொரு நாடும் ஏற்று நடத்துவது போல, உலகச் சுற்றுச் சூழல் தின கொண்டாட்டங்களையும் ஒவ்வோர் ஆண்டும் விரும்பும் நாடு ஏற்று நடத்தும் ஏற்பாடு ஏற்பட்டது. அந்த வகையில் 1974 ஆம் ஆண்டு முதன் முதலில் அமெரிக்கா ஏற்று நடத்தியது.

    நமது பங்களிப்பாக 2011 ஆம் ஆண்டு நம் நாடும் ஏற்று நடத்தியது. புது தில்லியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.

    
இந்தச் சுற்றுச் சூழல் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையக் கருத்தை முன் வைத்துக் கொண்டாடப்படுகிறது. நமக்கு இருப்பது ஒரே ஒரு பூமிதான்; அதனைக் காப்போம் என்னும் மையக் கருத்துடன் 1974 இல் முதலாம் சுற்றுச் சூழல் தின விழா உலகெங்கும் கொண்டாடப்பட்டது.

    பல்லுயிர் வளத்தைக் கொண்டாடுவோம்(Celebrate Biodiversity) என்பது இவ்வாண்டின் சுற்றுப்புறச் சூழல் தின மையக்கருத்தாகும். ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மனித இனம் அழிய நேர்ந்தாலும் மற்ற உயிரினங்கள் வாழும். ஆனால் மற்ற உயிரினங்கள் அழிய நேர்ந்தால் மனித இனம் வாழவே முடியாது.

    கூட்டிக் கழித்துப் பார்த்தால் இன்றைய நாளில் பத்து இலட்சம் தாவர, விலங்கு, பறவை இனங்கள் அழியும் நிலையில் இருப்பதாக பன்னாட்டு மன்றத்தின் ஓர் அங்கமாசுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை எச்சரிக்கை மணி அடிக்கிறது. இருப்பினும் இதை மனித இனம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

    கொரோனா, பாலைவன வெட்டுக்கிளி, சுனாமி போன்றவை புவி மொழிகளாகும். அதாவது பூமி பேசும் மொழிகள். ஆனால் மனிதன் புவிமொழியைப் புரிந்துகொள்ளாத முட்டாளாக இருக்கின்றானே! இயற்கை நடத்தும் பாடத்தைப் புரிந்துகொள்ளாத கடைநிலை மாணாக்கனாக மனிதன் இருக்கின்றான்.

    
முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்த தந்தங்களுக்காகவும் கொம்புகளுக்காகவும் முறையே யானைகளும் ஒற்றைக் கொம்பன்களும் பெருமளவில் வேட்டையாடப் படுகின்றன அதேபோல் ஈட்டி, சந்தனம், தேக்கு,செம்மரம் போன்ற மரங்களும் பெரும் அளவில் வெட்டிக் கடத்தப்படுவதும் அன்றாட நிகழ்வாக ஆகிவிட்டது. . வலுவான சட்டங்கள் இல்லாமைதான் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. எனவே இவ்வாண்டின் சுற்றுச்சூழல் தின மையக் கருத்து மிகப் பொருத்தமாக அமைந்துவிட்டது.

     
இந்த முக்கியமான நாளையொட்டி நாம் என்ன செய்யலாம்? இவ்வாண்டு விடுமுறை தினத்தில் இது வருவதால் எதுவும் செய்யாமல் இருந்துவிடக் கூடாது. சொல்லப் போனால் விடுமுறை நாளை ஒரு வாய்ப்பாகக்  கருதி, ஊருக்கு ஊர் இளைஞர்கள் குழுவாக சேர்ந்து மரக்கன்றுகளை நடலாம். சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல் துறை அனுமதியுடன் மினி மராத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாம். முச்சந்திகளிலும் நாற்சந்திகளிலும்  விழிப்புணர்வு நாடகங்களை நடத்திக் காட்டலாம்.      உள்ளூரில் உள்ள பூங்காக்களுக்குச் சென்று நெகிழிக் குப்பைகளை அகற்றலாம்.

     
நம் தமிழகத்தில் இரசிகர் மன்றங்களுக்குப் பஞ்சமில்லை. அவர்கள் ஒன்றிணைந்து உள்ளூர் மாணவர்களுக்காக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வாசகம் எழுதுதல், கவிதை, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் போன்ற போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கலாம்.

      
அந்தந்தப் பகுதியில் இயங்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இளைஞர்களுக்கான வனநடைப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.

      
விவசாயிகளை அழைத்து அவர்களை இயற்கை வேளாண்மைக்கு ஆற்றுப்படுத்தும் வகையில் ஆர்வமூட்டலாம். நல்ல உடல்வலுவும் நீச்சல் பயிற்சியும் உள்ள பொதுமக்கள் துணையுடன் ஆறு குளங்களை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றும் பணியில் ஈடுபடலாம்.

   
சுற்றுச்சூழல் சிந்தனையை முன்வைத்த முதல் சுற்றுச் சூழல் விஞ்ஞானி யார் தெரியுமா? நம் பூட்டாதி பூட்டன் தொல்காப்பியர்தான். ஐந்து விதமாக நிலத்தை வகைப்படுத்தி, அவற்றுக்கு உரிய  உரிப்பொருளையும் கருப்பொருளையும் சுட்டிக் காட்டியவர் அவர்தான். அவருக்கு அடுத்து வந்த சங்கப்புலவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வை நடத்தியதோடு தாம் இயற்றிய பாடல்களில் அதைப் பதிவும் செய்தார்கள். மரங்களை உறவு முறைகளாகக் கொண்டாடியதை அவர்தம் பாடல்வழி அறிகிறோம். அடுத்த நிலையில் சுற்றுச்சூழல் மீது தன் அறிவியல் பார்வையைத் திருப்பியவர் திருவள்ளுவர்தான். அருவிகளும் ஆறுகளும், காடுகளும் மலைகளும் ஒரு நாட்டின் உறுப்புகள், அவை சமூக அரண்கள்(social securities)  எனப் பதிவு செய்த முதல் சுற்றுச் சூழல் விஞ்ஞானி அவரேதான்.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்


என்னும் இரண்டு குறட்பாக்களே அதற்குச் சான்றாகும்.

  
இத்தகைய சிந்தனைகள் முகிழ்த்த மண்ணில் பிறந்த  நாம் ஆற்று மணலை அளவு மீறி அப்புறப்படுத்துகிறோம். கண்ணை விற்று ஓவியம் வாங்கிய கதையாக, மலைகளை வெட்டி கிரானைட் பலகைகளாக மாற்றி, ஏற்றுமதி செய்கிறோம்.

       '
நம் தேவைக்கு மட்டும்  இயற்கை வழங்கும்; பேராசைக்கு வழங்காது' என்னும் காந்தியடிகளின் கருத்தைச் சிந்தித்துப் பார்த்தோமா? இல்லையே. பொன் முட்டை இட்ட வாத்தை அறுத்துப் பார்த்த முட்டாளைப் போல்தான் நாம் பல சமயங்களில் நடந்து கொள்கிறோம். நுனிமரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டும் அறியாமை எப்போது நம்மைவிட்டு அகலப்போகிறது?

    
சுற்றுச் சூழல் குறித்த அணுகுமுறையில் ஒரு மாற்றம் (Attitudinal change) வந்தாக வேண்டும். கண்கெட்டபின் சூரிய வழிபாடு பயன்தராது. எனவே இந்த மாற்றம் உடனடியாக வரவேண்டும். சுற்றுச் சூழலைப் பேணிப் பாதுகாக்கும் பண்புதான் தலையாய மனிதப் பண்பாகும். இந்தப் பண்புடையவர்களால் மட்டுமே இப் பூவுலகு வாழும்; மனித இனம் வாழும். இல்லையேல் மண்ணோடு மண்ணாக மாந்த இனம் வீழும் என எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.

    
சிந்திப்போம்; செயல்படுவோம்



11 comments:

  1. நல்ல செயல் ஐயா
    //மனித இனம் அழிய நேர்ந்தாலும் மற்ற உயிரினங்கள் வாழும். ஆனால் மற்ற உயிரினங்கள் அழிய நேர்ந்தால் மனித இனம் வாழவே முடியாது//

    இதை மனிதர்கள் உணரவேண்டும்.

    ReplyDelete
  2. நற்ச்செயல் புரிந்தீர்
    நாலும் அறிந்தீர்
    இயற்கையின் சார்பில் நன்றி ஐயா

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு
    சிந்திப்போம்

    ReplyDelete
  4. ஒவ்வொன்றையும் சிறப்பாக சொன்னீர்கள் ஐயா... அருமை...

    ReplyDelete
  5. போற்றுதலுக்குரிய செயல் ஐயா

    ReplyDelete
  6. தி. முருகையன்5 June 2020 at 19:55

    ஐயா தாங்கள் எளையாம்பாளையம் விவேகானந்தா பள்ளியில் பணியாற்றிய போது அங்கு விளையாட்டு மைதானத்தில் நட்ட வேப்ப மரங்கள் பெரிதாக வளர்ந்துள்ளன. நாள் அங்கு செல்லும்போதெல்லாம் அந்நிலழில் சற்று அமர்ந்து வருவேன் மலரும் நினைவுகளுடன்.

    ReplyDelete
    Replies
    1. எங்கள்நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் ஐயா

      Delete
  7. உங்களின் முன்னுதாரணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்தும், நன்றியும் ஐயா.

    ReplyDelete
  8. மிகவும் நல்ல செயல் ஐயா. வாழ்த்துகள். தகவல்கள், கருத்துகள் அத்தனையும் அருமை

    துளசிதரன், கீதா

    மனித இனம் அழிய நேர்ந்தாலும் மற்ற உயிரினங்கள் வாழும். ஆனால் மற்ற உயிரினங்கள் அழிய நேர்ந்தால் மனித இனம் வாழவே முடியாது.//

    கொரோனா, பாலைவன வெட்டுக்கிளி, சுனாமி போன்றவை புவி மொழிகளாகும். அதாவது பூமி பேசும் மொழிகள். ஆனால் மனிதன் புவிமொழியைப் புரிந்துகொள்ளாத முட்டாளாக இருக்கின்றானே! இயற்கை நடத்தும் பாடத்தைப் புரிந்துகொள்ளாத கடைநிலை மாணாக்கனாக மனிதன் இருக்கின்றான்.//

    அப்படியே வழி மொழிகிறேன் ஐயா.

    கீதா

    ReplyDelete
  9. "இயற்கை என்னும் இளைய கன்னி...
    ஏங்குறாள் துணையை எண்ணி....!" ஆம் இயற்கை என்னும் இளய கன்னியின் இணை, துணை, தோழமை இப்படி எல்லாமும் மனிதன் தானே!
    தன் இணையாளின் உள்ளங்கவர் கள்வனாய் அல்லவா இந்த மாந்த இனம் பயணித்திருக்க வேண்டும்...?
    ஆனால் இவனோ இயற்கையை சூறையாடி விற்றுப் பிழைக்கும் திருடனாய் அல்லவா செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்..!
    மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா! வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  10. கட்டுரைச் செய்திகள் அருமை. ஒரு சமூக ஆர்வலரின் மன எண்ணங்களைப் படம் பிடித்துக்காட்டியுள்ளீர்கள். எத்தனையோ அறிவாளிகள், ஞானிகள் வாழ்ந்த நாடு. அவர்கள் மரபாக சடங்காகக் கூறிய அனைத்தையும் பின்பற்றாமல் பணம், சொத்து என்ற எதிர்பார்ப்பில் உறவை மறந்தான் மனிதத்தை மறந்தான் ஏன் தன்னையே மறந்தான். எனக்கு சந்தேகம். மனிதர்கள் வாழும் நாட்டில் தான் வாழ்கிறோமா? முட்டாள்கள்..மூடர்கள்...மனிதத்தை மறந்த வஞ்சகர்கள். மீண்டும் பல நூறாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி வாழ்ந்து மறந்து மறைந்து போன விடயங்களை கொண்டு வர வேண்டும்.
    முனைவர் ரா.லட்சுமணசிங்

    ReplyDelete