Sunday 30 August 2020

பள்ளிகள் திறக்கும் பாடங்கள் நடக்கும்

    ஆம். பள்ளிகள் திறக்கும்; பாடங்கள் நடக்கும். நம் தமிழ் நாட்டில் அன்று; கனடா நாட்டில். கனடா நாட்டின் பல மாநிலங்கள் வருகிற செப்டம்பர் மூன்றாம் நாள் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளன.

   கொரோனா நோய்த்தொற்று மறைந்திருந்து பார்த்த மர்மத்தைப் புரிந்துகொண்ட கனடா நாட்டரசு கடந்த பிப்வரி மாதத்தின் முதல் வாரத்திலேயே பள்ளிகளை மூடித் தள்ளிவிட்டன. அதன் பிறகு பாடம், தேர்வு, மாணவர் சேர்க்கை எல்லாம் இணையவழியே நடந்தன.

   இப்போது கோடை விடுமுறைக்குப்பின் வழக்கமாகத் திறக்கப்படும் நாளில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.

  முதல் அறிவிப்பு என்ன தெரியுமா? இனி பள்ளி மணி ஒலித்தல் கூடாது. மாலையில் நீண்ட மணி ஒலிப்பதும் குழந்தைகள்முட்டி மோதிக்கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று விட்டு விடுதலையான மகிழ்ச்சியுடன் வகுப்பறையை விட்டு வெளியேறும் வழக்கம் முடிவுக்கு வருகிறது. இனி அந்த அழகிய காட்சிகளை வலையொளியில்(YouTube) மட்டுமே பார்க்கமுடியும்.

  அடுத்த முக்கியமான அறிவிப்புகள்: இனி காலை வணக்க வகுப்பு இல்லை; பள்ளி நூலகம் இயங்காது; ஆடிடத்திற்குச் சென்று விளையாடுவதற்கும் தடை. பள்ளி வளாகத்தினுள் முன் அனுமதியின்றி  பெற்றவரோ மற்றவரோ யாரும் நுழைய முடியாது.

   நேற்று காலை நடைப் பயிற்சியின்போது பே ஷோர் பொதுப் பள்ளியை(Bayshore Public School) எட்டிப்பார்த்தேன். பள்ளித் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.





   ஒவ்வொரு வகுப்பறையிலும் கைகழுவும் தொட்டி(wash basin) அமைக்கப்படுகின்றது. நானூறு சதுர அடி கொண்ட வகுப்பறையில் பதினைந்து பேர்கள் மட்டும் அமரும் வண்ணம் இருக்கைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. முதல் வரிசை மாணவருக்கும் பாடம் நடத்தும் ஆசிரியருக்கும் இடையே ஆறடி தூரம் இடைவெளிவிட்டு அதற்கான ஸ்டிக்கர்கள் தரையில் ஒட்டப்பட்டுள்ளன. ஏதோ ஒரு திரைப்படத்தில் வடிவேலு சொல்லுவாரே – இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன் என்று- அப்படி ஒரு அமைப்பாக இது உள்ளது.

   மாணவர் நடக்கும் பொதுத் தடங்களை எல்லாம் இரண்டாகப் பிரித்து வலப்புறமே செல்க(Keep right) என்னும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அங்கே நடக்கிற மாணவர்க்கிடையே இரண்டு மீட்டர் இடைவெளி அவசியம் என்னும் ஸ்டிக்கர்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

   இவற்றை எல்லாம் பார்த்து வியந்த நான், இல்லம் திரும்பியதும் இந் நாட்டின் பள்ளிக்கல்வி வாரியத்தின் வலைத்தளத்தில் வலைவீசிப் பார்த்தபோது கிடைத்த வியத்தகு செய்திகள் பின்வருவன:

   கோவிட்19 நோய்த்தொற்றைப் பள்ளிகளில் நுழையவிடாமல் தடுக்க அரசு இருநூறு பில்லியன் டாலர் தொகையை ஒதுக்கியுள்ளது.

  ஆசிரியர்கள் முழுக் கவச உடை, உயர்தர முகக் கவசம், முகக் கேடயம் இவற்றை முழு நாளும் அணிய வேண்டும். இவற்றை அரசே வழங்குமாம்.

ஆசிரியர்களும் மாணவர்களும் கிருமிக்கொல்லி குடுவைகளைக்(sanitizers) கைவசம் வைத்திருக்க வேண்டும். இவற்றைப் பள்ளி நிர்வாகம் வழங்கும்.

ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் விருப்ப அடிப்படையில் முகக் கவசம் அணிந்து வரலாம். மேல்வகுப்பு மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

மேல்வகுப்பு மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அதுவும் பதிவேட்டில்(sign-out sheets) பதிந்துவிட்டுதான் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும். மற்ற மாணவர்க்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை.

மாணவர்கள் தாம் கொண்டுவரும் மதிய உணவை தனிமனித இடைவெளியுடன் அமர்ந்து உண்ண வேண்டும். மேலும் ஒருவர் முதுகை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து உண்ண வேண்டும் என்பது கூடுதல் நிபந்தனை ஆகும். மீதி உணவு போன்றவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல் அவரவர் வீட்டிற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பது புதிய கட்டுப்பாடு. இந்த ஏற்பாடு எதற்காக எனப் புரியவில்லை.

  பள்ளியில் சிற்றுண்டியகம் இருந்தால் ஒரு நேரத்தில் ஒரு மாணவருக்கு மட்டுமே அனுமதி. அடுத்த மாணவர் இரண்டு மீட்டர் இடைவெளியில் காத்திருக்க வேண்டும்.

    வகுப்பறையில் மாணவர் தொடும் கதவுப் பிடி, ஜன்னல் பிடி போன்றவற்றை மணிக்கு ஒருமுறை கிருமிக்கொல்லியால் துடைக்கப்படும். குறிப்பிட்ட இடைவெளியில் அல்லது பாடவேளையின் தொடக்கத்தில் மாணவர்கள் உரிய முறையில் கைகழுவ வேண்டும்.

  பள்ளியில் இருக்கும் பொது குடிநீர்க் குழாய்களில் மாணவர்கள் நீர் அருந்துதல் கூடாது. பாட்டிலில் வேண்டுமானால் பிடித்துக் கொள்ளலாம்.

   விளையாட்டுப் பிரிவேளைகளில் வகுப்பறைகளில் அமர்ந்து மாணவர்கள் தாம் வைத்துள்ள கைக்கணினியில் குறிப்பிட்ட கணினி விளையாட்டுகள் விளையாட அனுமதிக்கப்படுவர்.

 ஒவ்வொரு பள்ளியிலும் கழிப்பறை வசதியுடன் கூடிய தனிமை அறைகள்(Isolation chambers) இருக்கும். ஒரு மாணவரோ ஆசிரியரோ ஒரு தும்மல் போட்டால்கூட நாள் முழுவதும் அந்த அறையில்தான் தனித்திருக்க வேண்டும்.

  பள்ளிப் பேருந்துகளிலும் குறிப்பிட்ட, குறியிட்ட இருக்கைகளில் மட்டுமே மாணவர்கள் அமர்ந்து பயணிக்க முடியும். இனி தம் குழந்தைகளைப் பேருந்துகளில் அனுப்ப விரும்பவில்லை எனப் பெரும்பான்மையான பெற்றோர் தெரிவிப்பதாக ஒரு நாளேடு குறிப்பிடுகிறது.

  மாணவர்கள் முகக் கவசத்தைச் சரியாக அணியாதபோதும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதபோதும் ஆசிரியர்கள் அன்புடன் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வழக்கமான பள்ளித் திறப்பின்போது குட்டிச் செல்லங்களை ஆசிரியர்கள் கட்டித்தழுவி வரவேற்பர்; கை குலுக்குவர்; நெற்றியில் முத்தமிடுவர். இந்த ஆண்டு ஆறடி தூரத்தில் கைகட்டி நின்று, ஆசிரியர்கள் புன்முறுவலை மட்டும் காட்டுவார்கள் அதுவும் முகக் கவசத்துக்குள் முடங்கிவிடும். ஆசிரியர்களின் புன்னகையைக் கூட அவர்கள் காணமுடியாமல் ஏமாந்து போவார்கள். கொரோனாவால் விளைந்த மிகப்பெரிய சோகம் இதுவாகத்தான் இருக்கும்.

  முதல் நாள் வணக்க வகுப்பில் கம்பீரமாக நின்று உரையாற்றும் பள்ளி முதல்வர் கைகளைப் பிசைந்தபடி நிற்பார். பள்ளி முதல்வராகப் பலகாலம் பணியாற்றிய எனக்கு இந்த நிலையைக் கற்பனையில் காணும்போதே கண்ணீர் வருகிறது.

  ஆக, ஒரு பொது எதிரியைக் களத்தில் சந்திக்கும் முன்னேற்பாட்டுடன் பள்ளிகளைத் திறக்க ஆயத்தமாகி வருகிறது கனடா நாடு.

............................................................................................

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவாவிலிருந்து.

 

9 comments:

  1. என்னவொரு திட்டமிடல்...! வியக்க வைக்கிறது ஐயா...

    ReplyDelete
  2. ஊழல் இல்லாதவர்கள் கல்வியில் இருப்பதால் தான் அந்த நாடு அருமையாக உள்ளது

    ReplyDelete
  3. முருகையன்.தி30 August 2020 at 10:48

    சிறப்பான முன்னேற்பாடு. நம்மவர்கள் என்ன செய்யக் காத்திருக்கிரார்களோ.

    ReplyDelete
  4. கனடா நாட்டின் தற்போதையக் கல்வி நிலை பற்றித் தங்களால் அறிந்து கொண்டோம். மிக்க நன்றி. கட்டுரை மிகவும் அருமை.மிக்க நன்றி ஐயா. இப்படிக்கு எஸ். ஈஸ்வரன். தமிழ் ஆசிரியர்.. புகலூர்

    ReplyDelete
  5. WHAT A WONDERFUL PRESENTATION!

    ReplyDelete
  6. Ours is a Rich Country with poor people.We can't think that much facilities in our Schools.By opening Schools one or two months later(we had closed our Schools in March),no any problem arise.

    ReplyDelete
  7. குரு குலம் ஆகிடி மோ

    ReplyDelete
  8. அவர்கள் பள்ளிக் கல்விக்கு ஒதுக்கும் தொகையும், முன்னேற்பாடுகளும், மகிழச் செய்கின்றன.
    அதே சமயம் ஏக்கமும் வருகிறது

    ReplyDelete
  9. வேறு சில நாடுகளும் இவ்வாறான முயற்சியில் ஈடுபடுவதைப் படித்தேன் ஐயா.

    ReplyDelete