Saturday 23 October 2021

கட்டுடல் கொண்ட கனடா மக்கள்

     இப்போது கனடா நாட்டின் மக்கள் தொகை ஏறத்தாழ மூன்றரை கோடி! இவருள் சுமார் முப்பது விழுக்காடு அளவு வெளிநாட்டினராக இருக்கலாம். கனடாவைத் தாயகமாய்க் கொண்ட மக்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ்வதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

   கனடா நாட்டின் குடியுரிமை பெற்று,  இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டாவா நகரில் வசிக்கும் என் நண்பர் பொறியியல் அறிஞர் திரு.சி.முருகானந்தம் இந் நாட்டு மக்கள் குறித்து ஒரு முகநூல் பதிவில் இப்படி எழுதுகிறார்:

    இரவு பகல் பாராது நடை பயிலும் நன்மக்கள். சிலர் நடை, சிலர் ஓட்டம், சிலர் காலில் சக்கரம் (Roller Skates, Skateboard). இடையறாத உடற்பயிற்சி, இடைவிடாத நடைப்பயிற்சி,  விளைவு ஆணும் பெண்ணும் அத்தனை அழகு!

        கோடையில் நடை, ஓட்டம்; குளிரில் பனிச்சறுக்கு. எந்தப்பருவத்திலும், எல்லாப்பருவத்தினரும் நடக்கத் தோதாக அமைந்த பாதைகள். எங்கு நோக்கினும் பாரதி கண்ட புதுமைப் பெண்கள். கம்பன் சொன்ன இல்லையோ!என எண்ண வைக்கும் இடைகள்; அழகுமிகு சிகை, அதரங்களில் நகை, அலைபாயும் விழி, தடையில்லா மொழி! 

       ஆண்களும் சளைத்தவர்கள் அல்லர். பலர் கட்டுடல் காளைகள்; வேழம் நிகர்த்த விரி மார்பு கொண்டவர்கள்; விரைவு நடை வேங்கைகள். 

     நேர்த்தியான உடை, நேரான நடை, ஒட்டிய வயிறு கொண்ட ஒப்பிலா உடற்கட்டு. திய மரம் பெருத்தால் உத்தரத்துக்கு உதவாது என்று நன்கு உணர்ந்தவர்கள். மின்னுயர்த்தி (Elevators) இருந்தாலும், மாடிப்படிகளைத் தாவிக்கடப்பவர்கள். நல்லுடல் கொண்டோர், நிறைய பேர் வாழும் நாடு கனடா.”   

    இவரது கூற்று முற்றிலும் உண்மை. இது குறித்து என்னுடைய கண்டேன் கனடா’(வானதி பதிப்பகம், சென்னை) என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளேன். 

    சென்ற வார இறுதியில் நான், என் துணைவியார், மகள், மாப்பிள்ளை, பேரன் அனைவரும் சேர்ந்து அல்மாண்டே என்னும் ஊருக்குச் சிற்றுலா சென்றிருந்தோம். அங்கே நான் கண்ட ஒரு காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

       கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்தவரின் உருவச்சிலை நகரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. பந்து, கூடையுடன் மிக இயல்பாக அமர்ந்திருக்கும் தோற்றம். அவருடன் அமர்ந்து படம் எடுத்துக் கொள்ளும் வகையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அவர் அந்த ஊரைச் சார்ந்தவர் என்பதால் அவ்வூர் மக்கள் அவர்தம் உருவச் சிலையைப் பெருமையுடன் அமைத்துள்ளனர். உலகம் முழுவதும் விரும்பி விளையாடப்படும் கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகம் செய்தவர், கனடா நாட்டில் பிறந்து, பின்னாளில் உடற்பயிற்சி ஆசிரியராகவும் மருத்துவராகவும் விளங்கிய  டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித்(Dr.James Naismith) என்னும் செய்தி இச் சிலையைப் பார்த்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. 



Dr.James Naismith, the inventor of Basketball Game

     மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில் படித்தபோது சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரராக விளங்கிய என் மாப்பிள்ளை இந்தச் சிலைக்கு அருகில் அமர்ந்து ஒரு படம் எடுத்துக்கொண்டார். 

       கனடாவில் பல வீடுகளின் முகப்பில் கூடைப்பந்துடன் கூடிய கம்பம் நடப்பெற்றுள்ளதும், சிறார்கள் துள்ளிக் குதித்து அக் கூடையில் பந்தைப் போட்டுப் பழகுவதும் ஏன் என இப்போது எனக்குப் புரிகிறது. 


முனைவர் .கோவிந்தராஜூ,

துச்சில்: கனடா.

 

8 comments:

  1. வியப்பாக இருக்கிறது ஐயா

    ReplyDelete
  2. மகிழ்ச்சி. அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

    ReplyDelete
  3. அருமை உண்மை எங்களுக்கு பெருமை

    ReplyDelete
  4. நல்ல தகவலுடன் ஆன பதிவு ஐயா.

    உங்கள் மாப்பிள்ளையும் கூடப்பந்து விளையாட்டு வீரராக இருந்ததும் இப்போது அந்த விளையாட்டைக் கண்டுபிடித்தவரின் சிலை அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிந்ததும் கூட ஒரு ஆச்சரியம் இல்லையா?

    நான் பள்ளியில் கூடைப்பந்துக் குழுவில் இருந்த நினைவுகளை எழுப்பியது.

    கீதா

    ReplyDelete
  5. நான் இப்பொழுதுதான் கனடா வந்திருக்கிறேன்.‌இனிமேல்தான் கவனித்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  6. கூடைப்பந்து விளையாட்டு நல்ல உயரமானவர்கள் விளையாடுவதற்கு உகந்தது. உலகில் பல நாடுகளில் இவ்விளையாட்டு இருந்த போதிலும், இவ்விளையாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் கனடாவைச் சார்ந்த உடற்கல்வி பயிற்றுநர் டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித்(Dr.James Naismith) என்பதை உங்கள் கட்டுரையின் வாயிலாக அறியமுடிந்தது. அடுத்து கனடாவில் வாழும் மக்கள் நல்ல உடற்கட்டுடன் வாழ்கின்றனர். மகிழ்ச்சி. உடற்பயிற்சி தான் மனிதனைப் பலப்படுத்தும். மனப்பயிற்சி மனதைப் பலப்படுத்தும். வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சி மிகவும் நன்று. மனிதனின் அக புற உறுப்புகளைப் பாதுகாத்தால் நோயின்றி வாழலாம். நன்றி.

    ReplyDelete