Monday 21 March 2022

கூடு திரும்பிய குருவிகள்

    ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் காலடி வைக்கப் போகிறோம் என்னும் குறுகுறுப்பு உணர்வுடன் கனடா நாட்டின் மான்ட்ரியல் விமான நிலையத்தில் நானும் என் துணைவியாரும் தோகா செல்லும் விமானத்துக்காகக் காத்துக் கிடந்தோம்.

      பறப்பது பன்னாட்டு விமானம் என்பதால் மாலை 5.30 மணிக்கே எங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு விடைபெற்றுச் சென்றார் எங்கள் மாப்பிள்ளை. கத்தார் ஏர்வேஸ் விமானம் இரவு 8.50 மணிக்குப் புறப்படும். புறப்பட்டு ஒரு மணி நேரம் கழித்தே உணவு வழங்குவர் என்பதால், மகள் கொடுத்து அனுப்பியிருந்த சுவையான இட்டலிகளை ஆளுக்கு இருபது சாப்பிட்டோம். கொட்டைப் பாக்கு அளவிலான மினிஇட்டலிகள் அவை!

    இந்தமுறை விமான நிலைய சோதனைகள் அவ்வளவு கெடுபிடியாய் இல்லை. ஓர் இளம் அதிகாரி புன்முறுவலுடன் எங்களை வரவேற்றுப், படம் எடுத்து, கடவுச் சீட்டை ஆய்வு செய்து, விமான நுழைவுச் சீட்டுகளை வழங்கிப் பயணம் சிறக்க வாழ்த்தினார். நன்றி சொன்னேன். இளநகை புரிந்துவெல்கம்என்றார். எல்லாம் இயல்பாய் முடிந்ததால் உற்சாகமாகப் பேசிக்கொண்டு பொழுதைக் கழித்தோம். சரியாக 7.50 மணிக்கு விமானம் வாயைத் திறந்து பயணிகளை விழுங்கத் தொடங்கியது. ஒரு மணி நேரத்தில் முந்நூற்று எண்பது பயணியரையும், விமானி, பணியாளர் என இருபது பேர்களையும் அவர்களது மூட்டை முடிச்சுகளையும் சுமந்து கொண்டு பறக்க ஆயத்தமானது. ஏனோ தெரியவில்லை ஒரு மணி நேரம் தாமதமாகப் பறக்கத் தொடங்கியது.

     இரவு பதினோரு மணிக்கு எங்களுக்கு அளிக்கப்பட்ட சைவ உணவு வகைகளைச் சுவைத்தோம். பின்னர் முன்னால் இருந்த திரையில் The Sweet Life என்னும் ஆப்பிரிக்க திரைப்படத்தைப் பார்த்தேன். தொண்ணூறு நிமிடப் படம்; நல்ல படம்; இதமான இசை; இயல்பான காதல் கதை.

  சோர்வு மிகுதியால், தவ யோகியைப் போல உட்கார்ந்த நிலையில் உறக்கத்தில் ஆழ்ந்தேன். முகக்கவசத்துடன் பன்னிரண்டு மணிநேரம் பறந்ததால் காதுமடலில் வலி பிடித்துக்கொண்டது.

Doha Airport

Doha Airport

Doha Airport

   தோகா பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது கத்தார் நாட்டுக் கடிகாரம் மாலை 4.50 எனக் காட்டியது. அங்கே எங்களுக்கு எந்தச் சோதனையும் இல்லை. ஒரு பேட்டரி கார் மூலமாக நேரே சென்னை விமானம் புறப்படும் வாயில் முகப்பில் சென்று அமர்ந்தோம். ஏழு மணியளவில் கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் நெடுங்கதவு திறந்து பயணியரை வரவேற்றது. உரிய நேரத்தில் மாலை 7.50 மணிக்கு நானூறு பேர்களுடன் ஓடு தளத்தில் மெல்ல நகர்ந்து, சற்று நேரத்தில் வானில் பறந்தது. ஒன்பது மணியளவில் சுவையான சைவ உணவை வழங்கினர். உண்டு முடித்து முன்னால் இருந்த  திரையில் The great Indian Kitchen என்னும் மலையாளப் படத்தைப் பார்த்தேன். அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம்.

      பத்தாயிரம் மீட்டர் உயரத்தில் மணிக்கு நானூற்று ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் நாலரை மணி நேரம் பறந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது நள்ளிரவு 2.10 மணி. இறங்கி நெடுந்தூரம் நடந்து குடியமர்வு அலுவலரைச் சந்தித்தோம். முகக்கவசத்தைத் தாழ்த்தச் சொல்லிப் படம் பிடித்தார். கடவுச் சீட்டில் வருகை முத்திரை பதித்துத் தந்தார். ‘நன்றிஎனச் சொன்னேன். அந்தப் பெண்மணி அதைக் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு ரோபோவைப் போல இயங்கினார்!

    பெட்டிகளை அடையாளம் கண்டு, எடுத்து, எங்களுடையதுதானா என்பதை உறுதிசெய்தபின் ஒரு தள்ளுவண்டியில் ஏற்றிக்கொண்டு வெளியே வந்தபோது காத்திருந்த எங்கள் வாகன ஓட்டுநர் அன்புடன் வரவேற்றார்.

   பாதுகாப்பாகப் பறந்து இந்திய மண்ணில் மீண்டும் காலடி பதித்த மகிழ்ச்சியுடன் மகிழுந்தை நோக்கி நடந்தோம்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூரிலிருந்து.

5 comments:

  1. இரண்டு வருடத்திற்குப் பின்னர் தமிழகம் வருகை. மகிழ்ச்சி ஐயா.

    ReplyDelete
  2. இரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் இங்கு வந்து சேர்ந்தது மகிழ்ச்சி. தோஹா விமானநிலையம் கண்ணாடி போன்று பளிச்சென்று இருக்கிறது. படங்கள் சிறப்பு

    கீதா

    ReplyDelete
  3. அப்படியே பயணம் செய்வதுபோல் உணர்வு. அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. மகிழ்ச்சி. புதிய பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete