Thursday 29 December 2022

சாதலும் இனிது

        இதயத்தைக் கசக்கிப் பிழிவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் சங்கப் பாடல் ஒன்று உண்டென்றால் அது இதுவாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியான தருணங்களை எந்தப் புலவரும் பாட்டிலே கொண்டு வந்து காட்டமுடியும். ஆனால் சோகமான தருணத்தைப் பாட்டாக இயற்றுவது என்பது ஒரு சிலரால்தாம் இயலும். ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் ஒரு சங்கப் புலவர் இயற்றிய பாட்டு நம்மை உள்ளுக்குள் அழ வைக்கிறது என்றால் அந்தப் புலவரின் திறனை என்னென்று சொல்வது!

    அவள் அண்மையில் திருமணமாகிய இளம்பெண். சொல்லாமல் கொள்ளாமல் தன் காதலனுடன் ஓடிச் சென்று திருமணம் செய்துகொண்டு வெளியூரில் வாழ்ந்தவளின் கண்ணீர்க் கதையே இப் பாடல்.

   இவள் இனிதாய் இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய போது நாட்டில் போர் மூண்டது. போரில் மார்பில் அம்பேற்றுத் தன் கணவன் மாய்ந்த செய்தி கேட்டு ஒரு கணம் நிலை குலைந்தாள் அவள். உடன் சென்றோர் அவனது உடலைக் கொண்டு வந்து அவளிடத்தில் ஒப்படைத்தார்கள். காதல் கணவனைப் பிரிந்து வாழ்தலைவிட சாதல் இனிதென்று எண்ணினாள். அடுத்து அவள் செய்த செயல்தான் நம் நெஞ்சைப் பிசைகிறது.

   அந்த ஊரில் மட்பாண்டங்கள், தாழிகள் செய்து தரும் முதுபெரும் குயவனாரின் குடிசையை நோக்கி ஓடினாள். தலைவிரி கோலமாய் ஓடிவந்த இளம்பெண்ணை உற்றுப் பார்க்கிறார். புதிதாய்த் திருமணம் ஆகி வந்தவள் அல்லவா இந்தப் பெண் என நினைத்தபடி ‘என்னம்மா?’ என்றார்.


  “குயவனாரே! குயவனாரே! மாட்டு வண்டியின் அச்சில் சுழலும் சக்கரத்தின் ஆரக்கால் ஒன்றில் விழாமல் ஒட்டிக்கொண்டு, அந்த வண்டி சென்ற இடமெல்லாம் சென்ற சிறிய வெண்பல்லியைப் போல, நான் என் காதலனுடன் கைகோத்தவாறு, கொடுமையான பாலை நிலத்தின் வழியாகப் பல ஊர்களுக்கும் சென்று கடைசியில்  இவ்வூருக்கு வந்து மணம் செய்து மணவாழ்க்கையைத் தொடங்கினோம்.  அந்தச் சமயத்தில் போர் முரசம் கேட்க, என் கணவர் போருக்குச் சென்று விழுப்புண் ஏற்று இறந்துவிட்டார். இப்போது அவர்தம் உடல் என் குடிசையில் கிடத்தப் பெற்றுள்ளது. அவரைப் பிரிந்து இனி நான் வாழ்வதாய் இல்லை.

   இந்தப் பழைய பேரூரைச் சார்ந்த பெரியவரே! எந்தக் கணத்திலும் என் உயிரும் பிரியும். எங்கள் இருவரது உடல்களையும் ஒன்றாக வைத்துப் புதைக்கும் அளவுக்கு அகன்ற ஈமத் தாழி ஒன்றைச் செய்து கொடுக்க முடியுமா?”

இதுதான் அந்தப் பாடல். புறநானூற்றில் 256 ஆம் பாட்டு.

கலம்செய் கோவே! கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!

    இதைவிடவும் கொடுமை என்னவென்றால், இவ்வளவு உணர்ச்சிமயமான உள்ளத்தை உருக்கும் பாடலை எழுதிய சங்கப் புலவர் யார் என்பது தெரியவில்லை! 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூரிலிருந்து.

photo courtesy: internet

 

 

 

 

 

 

 

 

 

 

2 comments:

  1. முதலில் பாடலைத்தான் வாசித்தேன் ஐயா. பாடலை வாசிக்கும் போது பொருள் புரிகிறதா என்று பார்க்கும் வழக்கம். இப்பாடல் வாசிக்கும் போதே பொருள் கொஞ்சம் புரிந்துவிடுகிறது கூடவே உங்கள் விளக்கமும். அருமை

    கீதா

    ReplyDelete