Friday 6 January 2023

சிறப்பாகப் பாடிய சிக்கில் குருச்சரண்

    பொதுவாகவே எனக்குச் செவ்வியல் இசையில் கொஞ்சம் நாட்டம் உண்டு. அதற்குக் காரணம் இருவர். ஒருவர் என் தமையனார் பேராசிரியர் பெருமாள். அவருக்குச் செவ்வியல் இசை கேட்பது பிடிக்கும். அது குறித்து நல்ல விமரிசனமும் செய்வார். அவருடன் சில காலம் இருந்ததால் அந்த ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது.

  

அய்யங்கார் ரெட்டி


மற்றொருவர் என் மாமனார் அய்யங்கார் ரெட்டி. அவர் மாயவரம் பிடில் கோவிந்தராஜப் பிள்ளையின் சீடர். அவர் பிடில் வாசிக்கப் பழகியது போல நானும் கோபியில் இருந்தபோது வயலின் வித்வான் பங்காரு கிருஷ்ணனிடம் சீடனாகச் சேர்ந்து சிலகாலம் வயலின் வாசிக்கப் பழகினேன். இப்போது அந்த வயலின் எங்கள் வீட்டில் பரண்மீது பள்ளி கொண்டுள்ளது என்பது கூடுதல் செய்தி!

   என் மாமனாருக்கு எல்லா இராகங்களும்  அத்துபடி. செவ்வியல் இசை குறித்து நான் ஒரு செய்தியைச் சொன்னால் அவர் எனக்கு ஒன்பது செய்திகளைச் சொல்வார். இப்போது அவருக்கு அகவை தொண்ணூற்றைந்து. இந்த வயதிலும் வானொலியில் செவ்வியல் இசை கேட்டு அது குறித்து அவ்வப்போது என்னிடம் ஆர்வம் பொங்கப் பேசுவார்.

   மார்கழி வந்துவிட்டால் இந்த இசை ஆர்வம் என்னுள் மழை விழுந்ததும் புல் முளைப்பதுபோல் முளைத்தெழும். அந்த வகையில் நேற்று சிக்கில் குருச்சரண் அவர்களின் இசை மழையில் நனைந்தேன்.


   குறுந்தொகையில் இரண்டு பாடல்களைத் தேர்ந்தெடுத்து மிக அருமையாக பண்ணமைத்துப் பாடினார். அப் பாடல்களுக்கு விளக்கம் சொன்னது கூடுதல் சிறப்புடன் இருந்தது. அவர் பாடிய இரண்டு பாடல்களும் இங்கே வலைப்பூ வாசகர்களுக்காக.

அம்ம வாழி தோழி நம்மொடு

பிரிவின் றாயின் நன்றுமற் றில்ல

குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்

பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கிக்

கல்பொரு திரங்கும் கதழ்வீழ் அருவி

நிலங்கொள் பாம்பின் இழிதரும்

விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே.

   -கோவேங்கைப் பெருங்கதவனார்.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே- சாரல்

கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

                -தேவகுலத்தார்

   இப்படிச் சங்கப் பாடல்களுக்கு யாராவது முன்வந்து செவ்வியல் இசை கூட்டி மேடையில் பாடமாட்டார்களா எனத் தவம் கிடந்த எனக்கு வரமாய் வந்தது அவரது தமிழிசை. நீங்களும் வலையொளியில் கேட்கலாம்.

   ‘தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை’ என பாரதிதாசன் வருந்தியது போல தமிழ்நாட்டில் தமிழர் சூழ்ந்த மேடைகளில் தமிழ்ப் பாடகர் தமிழில் பாடாமல் பிறமொழிகளில் பாடுகின்றனரே என்று நான் வருந்துவதுண்டு. அந்த வருத்தம் குறுநகை நம்பி குருச்சரண் பாட்டால் சற்றே நீங்கியது.

 அவரைப் போலவே மற்ற செவ்வியல் இசைப் பாடகர்களும் பாரதி, பாரதிதாசன், பெரியசாமித்தூரன், அண்ணாமலை ரெட்டியார் போன்றோரின் பாடல்களை மனம் விரும்பி மகிழ்ச்சியுடன் பாட முன் வர வேண்டும். அக இலக்கியப் பாடல்களையும் திருக்குறளையும் திருவாசகத்தையும் மேடையில் பாடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். பிற மொழிப் பாடல்களும் இருக்கட்டும் ஊறுகாயைப் போல. 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

 

 

 

 

 

4 comments:

  1. அருமையான பதிவு ஐயா, அரிகாம்போதி ராகம் தமிழ் பண் செம்பாலைப் பண் என்று அழைக்கப்படும் என்று அறிந்த நினைவு ஐயா.
    செவ்வியல் இசை பற்றிய பதிவு மிகவும் ரசித்து வாசித்தேன் மற்றும் குருசரண் அவர்களின் பாடலையும் ரசித்தேன். நான் கேட்பதுண்டு.

    உங்களுக்கும் செவ்வியல் இசையில் ஆர்வம் இருப்பது மிக்க மகிழ்ச்சி அதுவும் உங்கள் குடும்பத்தினரில் இருவர்....

    கீதா

    ReplyDelete
  2. நான் செவ்வியல் இசையில் பிற மொழிப் பாடல்களை ரசித்தாலும் தமிழ் பாடல்கள் என்றால் உடனே கற்க முனைவதுண்டு.

    கீதா

    ReplyDelete
  3. திருவாசகம், திருக்குறள், கூட மெட்டிசைத்துப் பாடிக் கேட்டிருக்கிறேன். மற்றும் பெரியசாமி தூரன், பாரதியார் இவர்களின் பாடல்களைப் பலரும் பாடுகிறார்கள் ஐயா. மறைந்த டிகே பட்டம்மாள், டிகே ஜெயராமன் மற்றும் அவர்கள் வழியில் வந்திருக்கும் நித்யஸ்‌ரீ அவர்கள் எல்லாம் பாரதியின் பாடல்கள் பல பாடியிருக்கிறார்கள்.

    நீங்கள் மீண்டும் வயலினை வாசிக்கலாமே, ஐயா

    கீதா

    ReplyDelete