Sunday 5 November 2023

கற்றும் கவியுள்ளம் காணார்

  படிப்பு வாசனை அவ்வளவாக இல்லாத மாமனிதர் என்னுடைய அப்பா. அவர் விவசாய வேலைகள் இல்லாத சமயத்தில், அந்தக் காலத்து பெரிய எழுத்து இராமாயண நூலை வாய்விட்டுப் படித்ததைப் பார்த்திருக்கிறேன். போக்குவரத்து வசதி இல்லாத ஐம்பது அறுபதுகளில் குடும்பத்துடன் திருப்பதி சென்று வந்துள்ளார். இராம கதையில் மனம் ஈடுபட்டதாலோ என்னவோ எங்களுக்குப் பெருமாள், கிருஷ்ணன், கோவிந்தராஜூ எனப் பெயர்கள் வைத்தார்.

  


 நான் எம்.. தமிழ் படித்தபோது, பள்ளிப் படிப்பு என்பதைத் துளியும் அறியாத என் அம்மாவிடம் ஒரு நாள்,” அம்மா நீங்க இராமரின் கதையை உண்மைன்னு நம்புறீங்களா?” என்று கேட்டேன். “ஆமாண்டாஎன ஒரு சொல்லில் சொல்ல, நான் விடாமல் தொடர்ந்தேன்.  “இராமாயணம், பாரதம் எல்லாம் பொய்க்கதைன்னு பாரதியார் சொல்றார்மாஎன்றேன்; தற்கான பாடல் வரிகளைச் சொன்னேன். அதைக் கேட்டதும் சற்று யோசித்தார். “அந்த புஸ்தகத்தை முழுசா படிச்சியா?” என்று கேட்டார். இல்லை என்றேன். மீண்டும் கேட்டார்: “அந்தப் பாட்டையாவது முழுசாப் படிச்சியா?”

  அரைகுறையாய்ப் படித்துவிட்டு போகிற போக்கில் ஒரு கருத்தைச் சொல்லக்கூடாது என்னும் புரிதல் அன்று ஏற்பட்டது. மேலும் என் பேராசிரியர் அரியநாயகம் அவர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றேன். அவர் சொன்னார்: “இது பாரதியார் யோக நிலையில் இருந்து உரைத்தது; அதே நிலையில் நின்றால்தான் அவர் சொல்லவரும் கருத்து நமக்குப் புரியும்.” இது நடந்தது 1977 ஆம் ஆண்டு.  

   அண்மையில் வலையொளியில் நெல்லைக் கண்ணனின் உரை ஒன்றைக் கேட்டு அதிர்ந்து போனேன். இராமாயணம், மகாபாரதம் எல்லாம் பொய்க்கதைகள் என்று பாரதியாரே ஒத்துக்கொள்கிறார் எனக் கூறி அதற்கான பாரதியின் பாடல் வரிகளையும் சொன்னார். நான் என் அம்மாவிடம் சொன்ன அதே பாட்டுதான்!

கடலினைத் தாவும் குரங்கும்வெங்

               கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,

வடமலை தாழ்ந்தத னாலே - தெற்கில்

               வந்து சமன் செயும் குட்டை முனியும்,

 

நதியி னுள்ளேமுழு கிப்போய் - அந்த

               நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுற வேமணம் செய்ததிறல்

               வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

 

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் - ஒன்றில்

               உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்

நன்று புராணங்கள் செய்தார் - அதில்

               நல்ல கவிதை பலபல தந்தார்.

 

இந்த அளவில் பாடலை மேற்கோளாகச் சொன்னார். எப்போதும் என் பார்வையில் படும்படியாய் வைத்திருக்கும் பாரதியார் பாடல்கள் புத்தகத்தை எடுத்து அப் பாடலைத் தேடிக் கண்டுபிடித்தேன். ‘வரிகளுக்கிடையே படியுங்கள்’ (Read between the lines) என்று ஆங்கில மரபுத்தொடர் ஒன்று உண்டு. அந்த வகையில் பாடல் முழுவதையும் ஆழ்ந்து நோக்கினேன்.

 

கவிதை மிகநல்ல தேனும் - அக்

               கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;

புவிதனில் வாழ்நெறி காட்டி - நன்மை

               போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

 

  கதைகள் பொய்யெனக் கொண்டாலும் அவற்றில் உள்ள நீதிக்கருத்துகள் மனிதர்கள் அறவழியில் வாழ்வதற்குரிய வழிகளைக் காட்டும் என்பதே பாரதியார் சொல்ல வந்த கருத்து. நெல்லைக் கண்ணன் அதனைச் சொல்லாமல் விட்டதோடு, பாரதியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்னும் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டாரே என்பதுதான் என் வருத்தம். இருப்பினும், ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பதால் அவர்பால் நான் கொண்டிருந்த மதிப்பு அணுவளவும் குறையவில்லை. 

   ஒரு படைப்பாளி தன் சிந்தனை ஓட்டத்திற்கு ஏற்றவாறு பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு கருத்துகளைத் தன் படைப்பில் பொதிந்து வைப்பது இயல்பு. அவற்றில் ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அவர் அப்படிப்பட்டவர் என்றோ, இப்படிப்பட்டவர் என்றோ முத்திரை குத்துவது நியாயமில்லை. அவது ஒட்டுமொத்தப் படைப்புகளைப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்ல வேண்டும்.

   பாரதியார்  தன் காலத்தில் இருந்த கல்விமுறையை விமரிசனம் செய்யும்போது கூறிய வரிகள் இன்றும் பொருந்தும்:

‘அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும்                     ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’

   யானையைத் தொட்டுப்பார்த்த ஒரு பார்வையற்றவர், கைகளில் பட்ட ஒரு காதை மட்டும் தொட்டுத் தடவிப்பார்த்து, ‘யானை முறம் போல் உள்ளது!’ என்றாராம்! இப்படித்தான் இன்று படித்தவர் பலரும் ஒரு படைப்பாளியின் படைப்பைத் திறனாய்வு செய்கின்றனர்.

  மற்றும் சிலர் பிறழ உணர்ந்து, தன் செல்வாக்காலும் சொல்வாக்காலும் முற்றிலும் பொருந்தாத ஒரு கருத்தை உண்மையென நம்பச் செய்துவிடுவார்கள்.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே!’

 இது பாரதியாரின் பாடல் வரி. இதை விமரிசனம் செய்த ஈ.வே.ரா. அவர்கள், “பாரதியார்போச்சேஎன்று மகிழ்ச்சியில் சொல்லவில்லை, மாறாகப் போச்சேஎன்று வருத்தப்பட்டுச் சொன்னார்என்று மேடையில் பேசினாராம்!

அடுத்தவரி இது:

 ‘வெள்ளைப் பரங்கியரை துரையென்ற காலமும் போச்சே!’

பாரதியார் இவ் வரியையும் வருத்தத்திலா சொல்லியிருப்பார்? சற்றே யோசிக்க வேண்டும்.

  ஏனோ தெரியவில்லை, ‘படித்தவன் பாட்டைக் கெடுத்தான்என்னும் பழமொழி என் நினைவுத் திரையில் தோன்றி மறைகிறது.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

6 comments:

  1. வணக்கம் ஐயா தங்களது விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
  2. அருமை ஐயா, எதையும் முழுமையாக படித்து வெளிப்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளீர்கள்

    ReplyDelete
  3. புரட்டு பலவாறு உள்ளன ஐயா...

    ReplyDelete
  4. Interpretation என்பது ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளும் வகையில் இப்படிப் பல தவறான கருத்துகள் நிலைபெற்று விடுகின்றன. அப்படிக் கேட்பவர்கள், வாசிப்பவர்கள் தங்களைப் போன்ற சுய சிந்தனை உள்ளவர்கள் அல்லது அதைப் பகுத்தறிந்து பார்ப்பவர்கள் என்றால் இப்படி நீங்க அழகாகச் சொல்லியது போன்று எடுத்துக் கொள்வார்கள். இல்லை என்றால் கண்மூடிக் கொண்டு நம்புபவர்கள் தவறானவற்றை நிலைபெறச் செய்து அதை மக்களின் மனதிலும் பதிய வைத்து விடுகிர்றார்கள் மக்களும் கண்மூடித்தனமாக நம்புவதால்.

    அருமையான பதிவு ஐயா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அ.கோவிந்தராஜூ6 November 2023 at 17:58

      உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அம்மா.

      Delete
  5. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete