Thursday 26 September 2024

தழுவுதல் என்பதும் தகைசால் பண்பே

   வழக்கம்போல் இந்த வாரமும் கனடா நாட்டில் நாங்கள் வாழும் பகுதியில் உள்ள உள்ளூர் நூலகத்திற்குச் சென்றேன். படிப்பதற்காகச் சில நூல்களைத் தேர்ந்தெடுத்தேன். வீட்டுக்குச் சென்று தின்னலாம் என்று கூறி அப்பா கடையில் வாங்கித் தந்த தின்பண்டத்தில் அங்கேயே சிறிதை வாயிலே போட்டுச் சுவைக்கின்ற சிறு பிள்ளையைப்போல்  அவற்றுள் ஒரு நூலை அங்கேயே அமர்ந்து புரட்டினேன். சிறிது நேரம் ஆனதும் அது என்னைப் புரட்டிப் போட்டது.

    “நான் இந்திய நாட்டுக்குச் சென்றபோது சாலையிலே, பசுஞ் சோலையிலே ஆண்கள் இருவர் கைகோத்தவாறு பேசிச் சென்றதைப் பார்த்து வியந்தேன்” என்று அந்த அமெரிக்க எழுத்தாளர் கட்டுரையைத் தொடங்கியது கண்டு நான் வியந்து போனேன்.

   முதலில் நூலின் முன்னுரையை ஆழ்ந்து படித்தேன். தொடர்ந்து படித்தேன். இரவெல்லாம் அந்த ஒரு கட்டுரையைக் குறித்தே என் மனம் சிந்தித்தது. அதன் விளைவுதான் இப் பதிவு.

     கட்டுரைத் தலைப்பே என்னைக் கவர்ந்தது. Take one minute for love என்பதே அது.

“இன்சொல் பேசுவது நன்று. அது அன்பை வெளிப்படுத்தும் ஆற்றலுடையது. ஆனால் தொடுதல் மூலம் வெளிப்படுத்தும் அன்புக்கு வேறு எதுவும் இணையாக முடியாது” என நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

   உண்மைதானே? நோயுற்ற குழந்தையின் நெற்றியில் அம்மா தொடுவதும், வருத்தமுடன் இருக்கும் கணவனின் தோளை மனைவி தொடுவதும் கண நேரத்தில் ஒரு மாறுதலை, ஆறுதலைத் தந்து விடுகிறதல்லவா?

   ஒருவரை நாம் தொடும்போது அவருடைய உடலில் Oxytocin என்னும் இயக்குநீர்(harmone) அதிகம் சுரக்கிறது. அது அவரிடத்தில் ஒரு புதிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. ஒருவரை நாம் தொடும்போது அவருடைய உடலில் சுரக்கும் Cortisol என்னும் இயக்குநீரின் அளவைக் குறைக்கிறது. இதனால் தேவையற்ற அச்சமும் மன அழுத்தமும் குறைகிறது. இவற்றை எல்லாம் நான் கூறவில்லை; நூலாசிரியர் கூறுகின்றார்.

    இதற்கு ஆதாரமாகச் சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நேர்ந்த சோக நிகழ்வைக் குறிப்பிடுகிறார். பெற்றோர், உற்றோர் இல்லாத அந்தக் குழந்தைகள் பிறந்த ஏழாம் மாதத்தில் இறந்து போனதற்குச் சத்துக் குறைவோ நோயோ காரணம் அன்று, பெற்றோரின் அன்பான தொடுதல், கட்டித் தழுவல் கிடைக்ப் பெறாமையே காரணம் எனச் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர். தொடுதல் குறைபாட்டு நோயைக் குறிப்பிட Marasmus என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். இப்படி எழுதும் நூலாசிரியர் அடுத்த வரியை ஒரு பொன்மொழியைப் போல நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் அமைத்த பாங்கினைக் கண்டு வியந்தேன். அந்த வரி இதோ:

As babies need touch to survive, adults need touch to thrive.

   இந்தத் தொடுதல் குறித்துத் தொல்காப்பியம் ‘மெய்தொட்டுப் பயிறல்’ எனக் குறிப்பிடுகிறது. இது தலைவன் தலைவிக்கு இடையே நிகழ்வது எனச் சங்கப் பாடல்கள் கூறும். கட்டித் தழுவுதலை முயக்கம் என்று காமத்துப்பாலில் குறிப்பிடுவார் திருவள்ளுவர். இவை எல்லாம் அகப்பொருள் சார்ந்தவை என நாம் புரிந்து கொண்டோம். ஆனால் இந்த நூலின் ஆசிரியர் தொடுதல், கைகுலுக்கல், தழுவல் என்பன புறப்பொருள் சார்ந்தது என்னும் புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கிறார்.


    இது குறித்து என் மனைவியிடம் பேசினேன். இப்படி நான் பேசுவதையெல்லாம் பொறுமையுடன் கேட்டுச் சகித்துக்கொள்ளும் ஒரே பேர்வழி என் மனைவிதான்! அவள் சொன்னாள்:

   “இது பழைய செய்தி. 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் கமலஹாசன் சொன்ன கட்டிப்பிடி வைத்தியம் தானே?”

   பல நல்ல செய்திகளை நம்மிடமிருந்து பெற்றுக்கொண்டு சென்ற வெளிநாட்டவர் தம் வாழ்வில் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் நாம் நல்லவை பலவற்றை மெல்ல மறந்து விட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

 

    

 

9 comments:

  1. புலன வழிச் செய்தி

    திருவள்ளுவப் பெருமானின் திருவாக்கு:
    உயிர் தளிர்ப்பத் தீண்டல்

    -முனைவர் கே.எம்.மோகனசுத்தரம்

    ReplyDelete
  2. இனியன் ஐயாவின் கட்டுரை...
    ஆகச்சிறந்த கட்டுரை..
    நல்ல சுவாரஸ்யமான சொல்லாடல்...

    இதைப் படித்ததும் எனக்கு..
    பதினாறு வயதினிலே...
    மயிலும் கால்நடை மருத்துவனும் சந்திக்கும் காட்சி நினைவுக்கு வருகிறது...

    Oxytocin..
    Cortisol...
    இரண்டும்
    ஊக்குநீர் ஆகும்.

    அவற்றின் செயல்பாடு இவர் கூறியதுபோல் அல்ல...
    அதையும் தாண்டி சக்திவாய்ந்தது...

    -மருத்துவர் உடலியங்கியல் பாலா, சென்னை

    ReplyDelete
  3. மிக அருமைஐயா!
    அதியமான் தன் கையால் தம் தலையைத்
    தடவிக் கொடுத்ததை ஔவையார்
    நரந்தம் நாறும் தன் கையால் புலவு நாறும் என் தலை தைவரு மன்னே என உணர்ச்சி கொப்பளிக்கப் பேசுகின்றாள். தலைவன் தலைவியின் நெற்றியை நீவி விடுவதைச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.எஇட்டும் தொட்டும் ..நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்,
    மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் என்றும் பல்வகையான தீண்டல் இன்பங்களில் திளைத்தவர்கள் அல்லவா தமிழர்கள்! சிறப்பு ஐயா! சிறப்பு.

    -பேராசிரியர் சி.திருஞானசம்பந்தம்

    ReplyDelete
  4. சிறிய விடயத்தைக் கூடச் சிறப்பாக சொல்கிறீர் ஐயா. அதில் சொல்லப்பட்ட தொடுதலைப் போன்றே கட்டுரையும் என் உள்ளத்தைத் தொடுகிறது. சிறப்பு ஐயா.

    -இரா.விஜயலட்சுமி, திருச்சி.

    ReplyDelete
  5. வணக்கம், ஐயா!

    அறிவியல் அணுகுமுறையோடு
    அமைந்துள்ள இவ்விளக்கம், சாலப்பொருந்திய தகைமையுடைத்து!
    -சிவமுத்துக்குமார்

    ReplyDelete
  6. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு!
    என்ற குறளுக்குப் புதுப்பொலிவு ஊட்டினீர்கள்! அருமை! - புலவர் இராமமூர்த்தி

    ReplyDelete
  7. கட்டுரை அருமை அய்யா! -பெரியார் செல்வி

    ReplyDelete
  8. இன்றைய நிலையில் தழுவுதல் இல்லை.நழுவுதல் மட்டுமே.
    -பேரா.அ.பெருமாள்

    ReplyDelete
  9. மிக அருமையான பதிவு ஐயா. "தழுவுதல்" பெயரில் இத்தனை நுட்பங்களா? அருமை. அருமை.👏👌💐🙏 "சிந்தை தழுவிய" இரவு வணக்கம் ஐயா! 🙏. வாழ்க நலமுடன்!😊
    மரு. பூரணசந்திரகுமார், கோபி

    ReplyDelete