Tuesday 27 August 2024

மழலையர் விரும்பும் மாபெரும் நூலகம்

    செந்தமிழ் நாடு என்று சொல்லக் கேட்டவுடன், காதிலே தேன் வந்து பாய்ந்ததாகப் பாடுவான் பாரதி. எனக்கும் அப்படியே. கனடா நாட்டு நூலகம் ஒன்றைப் பார்த்தவுடன் கட்டுக் கரும்பை வெட்டித் தின்ற உணர்வு ஏற்பட்டது.

   சென்ற வாரம் ஒருநாள் காலையில் பெய்த அடாத மழையிலும் விடாது அழைத்துச் சென்றாள் என் மகள். நாங்கள் சென்ற நூலகத்தின் பெயர் பீவர் ப்ரூக்(Beaver Brook Public Library) பொது நூலகம். இது கனடா நாட்டின் தலைநகராக விளங்கும் ஒட்டாவா நகரின் ஒரு பகுதியாய் உள்ள கனாட்டா என்னும் ஊரில் அமைந்துள்ளது.

  மழலையர் விரும்பும் நூலகம் என்பதற்குச் சான்றாக நூலகத்தின் முகப்பில் பெரிய ஆமைகளைச் சிலைகளாக அமைத்துள்ளனர். குழந்தைகள் அந்தச் சிலைகள்மீது ஏறி அமர்ந்து கும்மாளம் போடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மழைபெய்தால், பனி விழுந்தால் குழந்தைகள் ஏமாற்றம் அடைவார்களே என நினைத்து நூலகத்தின் உள்ளேயும் ஒரு பெரிய ஆமையின் சிலையை வைத்துள்ளனர்!

   குழந்தைகளுடன் குடும்பமாகச் செல்லும் வண்ணம் அமைந்த மிகப்பெரிய வாயிற்கதவுகள் அருகில் சென்றதும் தாமே திறந்து வழி விட்டன. உள்ளே நுழைந்து இடப்புறம் திரும்பிப் பார்த்தால் ஒரு பெரிய கூடம். அங்கே மகிழ்ச்சி, உற்சாகம், சுறுசுறுப்பு, அழகு இவற்றைக் கொண்டு உருவான ஒரு பெண்மணி நாற்பது ஐம்பது சுட்டிக் குழந்தைகளுக்கு விலங்குகளின் ஓவியங்களைக் காட்டி, அவை தொடர்பான செய்திகளை எளிய ஆங்கிலத்தில் மிக உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாக் குழந்தைகளும் ஆர்வமாகச் செவிமடுத்தது வியப்பாக இருந்தது!



  நானும் சற்று நேரம் குழந்தையாக மாறிவிட்டேன். அப் பெண்மணி அந்தந்த விலங்காக மாறும்போது நான் குழந்தையாக மாறியதில் வியப்பேதும் இல்லை.



   குட்டிச் செல்லங்கள் உட்கார்ந்து படிக்க வசதியாய்க் குட்டி இருக்கைகள் ஆங்காங்கே போடப்பட்டுள்ளன. அவர்கள் உயரத்தில் அமைந்த புத்தக அடுக்ககங்கள்(Book Racks) நாம் பார்க்கும் வழக்கமான வடிவத்தில் இல்லை. வளைந்தும் நெளிந்தும் இருந்த அடுக்குகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன!

   இரண்டு குறும்புக்கார குழந்தைகள் சேர்ந்து கிழிக்க முயன்றாலும் கிழிக்க முடியாத வகையில் குழந்தைக்கான நூல்கள் உருவாக்கப் பட்டுள்ளன. ஓரிடத்தில் BOARD BOOKS எனக் குறிப்பிடப்பட்ட நூல்கள் இருந்தன. ஒரு நூலில் இருபது தாள்கள் மட்டும் இருந்தன. ஒரு தாளின் தடிமன் நான்கு மில்லி மீட்டர்! குழந்தைகள் தம் பிஞ்சு விரல்களால் எளிதில் புரட்டிப் பார்க்க வசதியாக அந்த நூல்கள் வடிவமைக்கப்பட்டவை.


    திரும்பும் பக்கமெல்லாம் கணினித் திரைகள் கண்ணில் படுகின்றன. அங்கே வசதியாக அமர்ந்து, நமக்குத் தேவையான நூல் உள்ளதா, இல்லையா, இருந்தால் எந்தப்பக்கம் எந்த அடுக்ககத்தில் உள்ளது போன்ற விவரங்களை நொடிப்பொழுதில் பெற இயலும். ஆனால் இத் தகவலைப்பெற நமக்குக் கணிப்பொறியை இயக்கத் தெரிய வேண்டும்.

   திருக்குறள் உலகப்பொதுமறை என்பதால் கனடா நாட்டு நூலகத்திலும் இருக்கும் என்னும் எதிர்பார்ப்புடன், நான் திருக்குறள் நூல் ஏதேனும் உள்ளதா என்று கணினியிடம் கேட்டேன். ‘இருக்கிறது ஆனால் அதை நூலக வாடிக்கையாளர் ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார்என்னும் தகவலைத் தந்தது. எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. முதலாவதாக, திருக்குறள் நூல் நூலகத்தில் உள்ளதே என்பது. இரண்டாவதாக, அது புத்தக அடுக்கில் தூங்காமல் வாசகர் ஒருவரின் கையில் தவழ்கிறதே என்று மகிழ்ந்தேன்.

கனடா நாட்டு நூலகத்தில் திருக்குறள்

    அடுத்து இருந்த நூல் தொகுதி என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது. அவை பெரிய எழுத்து நூல்கள்(Large Font Books) எனக் குறிப்பிடப்பட்டு இருந்தன. எடுத்துப் புரட்டினேன். முதியவர்கள் கண் சோர்வின்றிப் படிக்க ஏதுவாகப் பெரிய எழுத்துகளில் அழகாக அச்சிடப்பட்டு இருந்தன. அவற்றுள் ஒன்றையே நான் தேர்ந்தெடுத்தேன்.

   என் மகள் பத்து நூல்களை எடுத்தாள். என் பெயரன் ஐந்து நூல்களை எடுத்தான். ஒரே சமயத்தில் ஒருவர் எத்தனை நூல்களை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று மகள் சொன்ன போது எனக்கு வியப்பின் காரணமாகத் தலை சுற்றியது! அதைவிட ஒரு பெருவியப்புக்குரிய தகவலைச் சொன்னாள். ஒரு நூலகத்தில் எடுத்த நூலை ஒட்டாவா நகரில் இயங்கும் மற்ற எந்த ஒரு நூலகத்திலும் திருப்பிக் கொடுக்கலாமாம்! மேலும் சொன்னாள். ஒரு நூலகத்தின் வேலை நேரம் முடிந்தபின்னும் நூல்களைத் திருப்பியளிக்கும் வசதி எல்லா நூலகங்களிலும் உண்டு. நூலகத்தின் முகப்பில் உள்ள ஒரு மாடத்தில் நூலை வைத்தால் அது நூலகத்திற்குள் சென்றுவிடும்.

      நூலகர், நூலக ஊழியர் குறித்தும் நான் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். நூலகத்திற்கு வரும் வாடிக்கையாளரின் மனம் சற்றும் கோணாமல் நடந்து கொள்கிறார்கள். நான் ஓர் ஆங்கிலக் கவிதை நூல் குறித்து ஓர் ஊழியரிடம் கேட்டேன். உடனே கணினியில் அது குறித்த தகவலை அறிந்து, உரிய நூலை அடுத்த ஐந்து நிமிடங்களில் தேடி எடுத்துக் கொடுத்தார். குழந்தைகள் ஏதேனும் கேட்டால் அவர்கள் உயரத்திற்கு மண்டிபோட்டு அமர்ந்தபடி உற்சாகமாக உரையாடுகிறார்கள். குழந்தைகள் உரக்கப் பேசினாலும் அதை வரவேற்கின்றனர்.

    கூர்ந்து நோக்கியதில் நான் கண்ட இன்றியமையாத சிறப்பு யாதெனின் நூலகத் தூய்மையே அது. தூசு தும்பு, அப்பு அழுக்கு, ஒட்டடை என எதையும் பார்க்க முடியாது. தூய குடிநீர் ஒவ்வொரு தளத்திலும் கிடைக்கும். மிகத் தூய்மையான கழிப்பறைகள் அதிக எண்ணிக்கையில் உண்டு. இருக்கைகள் அனைத்தும் படு தூய்மையாக உள்ளன.

     வீட்டிற்கு எடுத்துச் செல்லும் நூல்களை நூலக உறுப்பினர் நூலக ஊழியரிடம் காட்டுவதுமில்லை; ஊழியர் ஒரு பேரேட்டில் அவற்றைப் பார்த்துக் குறித்துக் கொள்வதுமில்லை. ஆங்காங்கே வருடிப் பொறிகள்(Scanners) உள்ளன. நூலை அதனிடம் காட்டினால் போதும். முப்பது நூல்கள் என்றாலும் ஒரு நிமிடத்தில் வேலை முடிகிறது. உடனே ஒரு பற்றுச்சீட்டை அந்தப் பொறி நமக்கு வழங்கும். அதில் நூல்கள் விவரம் அனைத்தும் அச்சிடப்பட்டிருக்கும்!

நான்கு வயது சிறுவன்!

     பொதுமக்களை நூலகத்தின்பால் ஈர்ப்பதற்குக் கனடா நாட்டின் நூலகத்துறை பல்வேறு உத்திகளைக் கையாளுகிறது. ஒருவர் நூலகத்தின் உறுப்பினராக இருந்தால் அருகிலுள்ள உடற்பயிற்சி நிலையங்களில்(Fitness Centre) இருபது விழுக்காடு கட்டணச் சலுகை பெறமுடியும். நூலக உறுப்பினர் மின்சாரத்தில் இயங்கும் மகிழுந்து வைத்திருந்தால் நூலகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இலவசமாக மின்னூட்டம்(Charging) செய்து கொள்ளலாம். அங்கே என் மகள் தன் மகிழுந்துக்கு மின்னூட்டம் செய்ததை நேரில் பார்த்தேன்.

பாட்டியும் பேரனும் நூலகத்தில்

      இங்கே நூலகம் என்பது பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டதாய்த் திகழ்கிறது. குழந்தைகளுக்கு நூல்கள் வாசித்தல், ஓவியம் வரைதல், பேச்சுக்கலை, எழுத்தாற்றல், கவிதை புனைதல், நன்னடத்தை என்பதை மையப்பொருளாகக் கொண்டு பயிற்சிப் பட்டறைகளை நடத்துகின்றனர். மூத்த உறுப்பினர்களுக்கும் கூட நூலகத்தில் பயிற்சி வகுப்பு உண்டு. முதுமையில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி, இணையவழிப் பணப்பரிமாற்றத்தில் கவனமாக இருப்பது எப்படி என்றெல்லாம் சொல்லித் தருகிறார்கள்.

   இந்த நூலகம் நகரின் நடுவில் அமைந்து இருந்தாலும் இடப்பற்றாக்குறை  என்பது அறவே இல்லை. உள்ளே இரண்டு புத்தக அடுக்ககங்களுக்கிடையில் பெரிய இடைவெளி உள்ளது. வாசகர்கள் ஒருவர்க்கொருவர் முட்டாமல் மோதாமல் அமர்ந்து படிக்கும் வகையில் இருக்கைகளை போதிய இடைவெளி விட்டுப் போடப்பட்டுள்ளன. நூலகத்தின் வெளியே பார்த்தால் குறைந்தது முப்பது மகிழுந்துகளை நிறுத்தும் அளவுக்கு இடவசதி உள்ளது.

     நூலகத்திற்குச் செய்யப்படும் செலவுகளை, இந்த நாட்டின் அரசு செலவாகக் கருதுவதில்லை. மாறாக, ஓர் அறிவார்ந்த சமுதாயத்தை, அறவழியில் இயங்கும் சமுதாயத்தை உருவாக்குவதற்கான  முதலீடாகக் கருதுகிறது. இதுதான் நான் நாடு திரும்பும்போது எடுத்துச் செல்ல விரும்பும், எடுத்துச் சொல்ல விரும்பும் செய்தியாக இருக்கும்.

முனைவர் .கோவிந்தராஜூ,

தேசிய ஆசிரியர் விருதாளர், கனடாவிலிருந்து.

 

  

   

7 comments:

  1. Excellent one. Very informative and useful.

    ReplyDelete
  2. படிக்கப் படிக்க வியப்பு ஐயா

    ReplyDelete
  3. நா. முத்துநிலவன்27 August 2024 at 18:28

    அரிய தகவல்கள் மட்டுமல்ல, நம்நாட்டில் பின்பற்றுவதற்கு ம் உரிய தகவல்கள்! நன்றி அய்யா🙏

    ReplyDelete
  4. ரவிச்சந்திரன் கரூர்.27 August 2024 at 19:44

    அடேங்கப்பா!
    இவ்வளவு தகவல்களையும் படிக்க படிக்க ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன .

    ReplyDelete
  5. very informative sir,
    the initiatives taken by government for people welfare is really amazing sir

    ReplyDelete
  6. தங்களது தகவல்கள் பிரமிக்க வைக்கிறது ஐயா.

    ReplyDelete