Monday 30 September 2024

ஆழ்வார் பாடலில் அறிவியல் நுட்பம்

    அடிப்படையில் நான் இயற்பியல் படித்த அறிவியல் பட்டதாரி. பின்னர் முதுகலையில் தமிழைப் படித்துத் தமிழாசிரியராய் ஆனேன். எனவே என் சட்டைப் பையில் அறிவியல் என்னும் கண் கண்ணாடி எப்போதும் இருக்கும். அவ்வப்போது அதை அணிந்து கொண்டு தமிழில் அமைந்த பழம்பாடல்களைப் பார்ப்பதுண்டு.

    அண்மையில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தத்தைப் படித்தபோது ஒரு பாடல் என்னைச் சுண்டி இழுத்தது. அந்தப் பாடலில் எண்களை வைத்து விளையாடுகிறார். ஆனால் அதை விளையாட்டாக என்னால் எடுத்துக்கொள்ள இயலவில்லை. அந்தப் பாட்டு என்னதான் சொல்ல வருகிறது என இணையத்தில் தேடியபோது பாடல் நவில் பொருளை நான் காணாது மயங்கினேன்.

    ஒன்றும் புரியாமல் எனது மின்னணு நூலகத்திற்குள் நுழைந்தேன். ஐந்நூறு நூல்களைக் கொண்ட அந்த நூலகம் என் மடிக்கணினியில்தான் உள்ளது. தேடிப் பார்த்ததில் சுஜாதா எழுதியஆழ்வார்கள் அமுதம்ஓர் எளிய அறிமுகம்என்னும் நூல் இருந்தது. நான் பார்த்த பாடல் அதில் இருக்குமா என்னும் ஐயம் கூடவே எழுந்தது. அது நூற்றுக்கும் சற்றுக் கூடுதலான பாடல்களுக்கான விளக்க நூல் என்பதை முன்னரே அறிவேன்.

    கணினிக் கடவுள் என் வேண்டுகோளை ஏற்று சுஜாதாவின் நூலை என் முன் காட்ட, ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினேன். அது என்ன நாவலா ஒரே நாளில் படிப்பதற்கு. பல நாள்கள் ஒதுக்கிப் பொறுமையாகப் படித்தேன். ஒருநாள் என்னுடைய நல்லூழின் பயனாக அந்தப் பாடலும் விளக்கமும் அந் நூலில் இருக்கக் கண்டேன்!

அப் பாடல் இதுதான்:

பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாயது ஒன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே?

 Count down என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல் ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்று அமைத்த பாங்கினைப் பார்த்து வியந்தேன்.

இனி, நான் புரிந்து கொண்டதை உங்களுக்குப் பகிர்கிறேன்.

பஞ்ச பூதங்கள் ஐந்து என்பது நாம் அறிந்ததே. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன அவை. அவற்றின் இயல்புகளை ஓர் அளவு கோலை வைத்து ஆராய்கிறார் நம் திருமழிசை ஆழ்வார்.

அது என்ன அளவுகோல்?  

அந்த அளவுகோலில் ஐந்து வினாக்கள் உண்டு..

தொட்டுப் பார்க்க முடியுமாசுவை உண்டா? நாற்றம் உண்டா? ஓசை உண்டா? ஒளி உண்டா?

தன் ஆய்வு முடிவின்படி சகலருக்கும் ஆழ்வார் அறிவிப்பது என்னவென்றால்,

பூமிக்கு ஐந்து குணங்கள் ஊறு(touch), ஒளி(light), ஓசை(sound)  சுவை(taste), நாற்றம்(smell). பூமிக்கு ஒளியுண்டா என ஐயுறலாம். ஒளியின் துணையால் அதைப் பார்க்க முடியும் என்பது பொருள்.

நீருக்கு நான்கு குணங்கள்  ஊறு(touch) ஒளி,(light), ஓசை(sound)  சுவை,(taste) உண்டு; நாற்றம் இல்லை.

நெருப்புக்கு மூன்று குணங்கள் ஓசை(sound), ஊறு (touch) ஒளி,(light) உண்டு.   சுவையும் நாற்றமும் இல்லை.

காற்றுக்கு இரண்டு குணங்கள் ஒலி,(sound), ஊறு(touch) உண்டு. ஒளி, சுவை, நாற்றம் இல்லை.

ஆகாயத்துக்கு ஒரு குணம்     :  ஒலி(sound) மட்டும் உண்டு; ஊறு, ஒளி, சுவைநாற்றம் இல்லை. ஆகாயம் என்பது வானம் அன்று; விண்வெளி(Space).

 இப்போது பாடலின் பொருளைப் பார்ப்போம்.

 

பூநிலாய ஐந்துமாய்                     - ஐந்து குணங்களுடன் இருக்கும் பூமி

புனற்கண் நின்ற நான்குமாய் நான்கு குணங்களுடன் இருக்கும் நீர்
தீநிலாய மூன்றுமாய்ச்               - மூன்று குணங்களுடன் இருக்கும் தீ

சிறந்த கால் இரண்டுமாய்        - இரண்டு குணங்களுடன் இருக்கும் காற்று
மீநிலாயது ஒன்றுமாகி              - ஒரு குணத்துடன் இருக்கும் ஆகாயம்

வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை

யார் நினைக்க வல்லரே?       -இப்படி வேறு வேறு தன்மையுடன்                            விளங்குகின்ற இறைவனாகிய உன்னை (என்னைத் தவிர)                                   யாரால் ஆய்ந்து பார்க்க முடியும்.?

   இப்படி அறிவியல் அடிப்படையில் திருமழிசை ஆழ்வாரை ஆராய்ந்து பார்க்கச் சொன்ன மூத்த  அறிவியலார் ஒருவர் தமிழகத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவர் சொல்கிறார்:

 சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்

 வகைதெரிவான் கட்டே உலகு.

    ஆக, வள்ளுவர் சொன்ன வண்ணம் பஞ்ச பூதங்களின் வகைதொகையை ஆராய்ந்து பாடல் படைத்த வாலறிவனார் திருமழிசை ஆழ்வாரின் திருவடிகளைப் பணிவோம்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

 

 

 

 

1 comment:

  1. அறிவியல் நுட்பத்துடன் தமிழ் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பதனை தங்களின் நுட்ப உரையாலும், திறந்தாலும் அறிந்ததில் பெரு மகிழ்வடைகின்றோம். மிக்க நன்றிங்க ஐயா.

    ReplyDelete