Tuesday, 25 November 2025

வள்ளுவமும் வாழைமரமும்

     எங்கள் வீட்டுத் தோட்டத்தில் நன்கு உயரமாக வளர்ந்த மொந்தன் வாழைமரம் ஒன்று தெருப்பக்கம் சாய்ந்து நின்றது. அதிலிருந்து தொங்கிய பசுமையான கிழிந்த இலையுடன் கூடிய மட்டைகளைத் தெருவில் திரியும் மாடு கடிப்பதுண்டுதுணைவியார் அதைப் பார்க்கும் போதெல்லாம் மரத்தை நிமிர்த்தி ஒரு முட்டுக் கொடுக்கச்சொல்லி என்னை வற்புறுத்துவார். ஆனால் நான் ஆகட்டும் பார்க்கலாம்என்று சொல்லிக் காலம் கடத்தினேன்.

  இன்று காலையில் தோட்டத்திற்குச் சென்றபோது, அந்த வாழைமரம் அடியோடு சாய்ந்து தெருப்பக்க வேலிமேல் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தேன். குருத்து இலை சிதைந்து காணப்பட்டது. இலைகள் இல்லாமல் மட்டைகள் சேதமாகிக் கிடந்தன. கண்காணிப்புக் கேமரா பதிவை இயக்கிப் பார்த்தேன். தெருவில் திரிந்த இரண்டு மாடுகள் தொங்கிய ஒரு மட்டையைக் கடித்து இழுத்ததால் மரம் விழுந்தது தெளிவாகத் தெரிந்தது.

   துணைவியாரை அழைத்துக் காட்டினேன். இன்னும் ஒரு மாதத்தில் குலை தள்ள வேண்டிய மரம் இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினோம்.

அந்த மரத்தின் காய் கனியைத் துய்ப்பதற்குரிய பேறு நமக்கு இல்லை போலும். ‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிதுஎன்று வள்ளுவர் கூறுகிறார். அதுதான் உண்மைஎன்று துணைவியாரிடம் சொன்னேன்.

    “அதே வள்ளுவர்தான்அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்என்று சொல்கிறார். முட்டுக் கொடுக்கச் சொன்னேனே கேட்டீர்களா?” இது என் துணைவியாரின் மறுமொழி. எனக்கு அறிவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்லிவிட்டார்.

 அவர் சொல்வது நியாயம்தானே? ஒரு கழியைக் கொண்டு உரிய காலத்தில் முட்டுக் கொடுத்திருந்தால் மரம் தப்பியிருக்குமே.

    நான் சொன்னேன்: “உனக்குத் தெரியுமா? எல்லாம் விதிப்படிதான் நடக்கும். என் சோம்பலுக்குப் போகூழ் என்னும் விதியே காரணம். ‘ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடிஎன்று வள்ளுவர் கூறுகிறார்.”

   இதைக் கேட்டதும் என் துணைவியார் என்னை மடக்கினார். “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் என்று வள்ளுவர் கூறியதை மறந்து விட்டீர்களே! கொஞ்சம் எச்சரிக்கையாய் இருந்திருந்தால் உங்கள் வியர்வையில் செழித்து வளர்ந்த மரத்தை இழந்திருக்கமாட்டோம்.

    “இந்த இழப்புக் குறித்து வருந்தாதே. ‘இழப்பினும் பிற்பயக்கும் நற்பால் அவைஎன்று வள்ளுவர் சொல்வது உனக்குத் தெரியாதா? பக்கக் கன்று வளர்ந்து தார் போட்டு இரு மடங்காகப் பயன்தரும்என்றேன்.

    அப்போது நல்ல வேளையாகப் பணிப்பெண் வந்து அழைத்ததால் என் துணைவியார் என்னை இந்த அளவில் விட்டார்.

    மரம் போன வருத்தத்திலும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாடுவதற்கு வாய்ப்பாய் அமைந்ததே என மகிழ்ந்தேன்.

 முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

3 comments:

  1. திருக்குறள் தம்பதியினர் நீடு வாழ்க

    ReplyDelete
  2. நனிநன்று. ஐயா

    ReplyDelete
  3. Dr S T Gunasekhar25 November 2025 at 14:51

    Your narration of even small anecdotes is very interesting to read !

    ReplyDelete