இப்படியொரு தலைப்பில் பேராசிரியர் மு.வரதராசன் எழுதிய கட்டுரையின் நீட்சியே இப்பதிவு.
நேற்று
பிரதமர் மோடியின் மனதின்குரல்
உரையைத் தொடர்ந்து அதன் தமிழாக்கம் ஒலிபரப்பானது.
‘அனைவருக்கும்
பலப்பல நன்றிகள்’
என அவர் கூறுவதாக உரை
முடிந்தது.
நன்றி தொடர்பான
ஐயம் என் மனத்தில் தோன்றியது.
உடனே அவருடைய இந்தி
உரையைக் கேட்டேன்.
தன்யவாத் என ஒருமையில்தான்
முடித்துள்ளார்.
மொழிபெயர்த்தவர் ‘பலப்பல நன்றிகள்’ என்று பன்மையில் சொல்ல வைத்தார் போலும்.
எதைச் சொல்ல
வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியவில்லைதானே?
இது ‘நன்றி’ என்னும் சொல்லுக்குக் ‘கள்’ சேர்ப்பது குறித்த விவாதம். இது குறித்து முன்னரே எழுதியும் பேசியும்
உள்ளேன்.
நன்றி என்றுதான்
சொல்ல வேண்டும்;
நன்றிகள் எனச் சொல்வது
தவறு எனச் சுட்டிக் காட்டியுள்ளேன்.
நான் உன்மீது அன்பைப் பொழிகிறேன் –சரி நான்
உன்மீது அன்புகளைப் பொழிகிறேன்
– தவறு
எனக்கு உன்மீது மிகுந்த காதல் – சரி எனக்கு உன்மீது மிகுந்த காதல்கள் – தவறு
உன்மீது எனக்குள்ள பாசம் என்றும் அழியாது – சரி உன்மீது எனக்குள்ள பாசங்கள் என்றும் அழியாது – தவறு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் – சரி ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
– தவறு
நெஞ்சார்ந்த வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன் – சரி நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன் – தவறு
நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – சரி நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் – தவறு
நடிகர் ரஜனி கூட ஒரு திரைப்படத்தில் ‘மகிழ்ச்சி’ என்றுதான் சொல்வார்.
ஆங்கிலத்தில் wishes, thanks, condolences எனப் பன்மையில் அமைந்திருப்பது அம் மொழியின்
மரபு. நம்
தமிழ் மொழியின் மரபினை நாம் போற்ற வேண்டும். அன்பு,காதல்,பாசம், இரங்கல்,வாழ்த்து, நன்றி, மகிழ்ச்சி, வருத்தம் – இவையெல்லாம் உணர்வை வெளிப்படுத்தும் சொல்கள். இவற்றுக்குக் ‘கள்’ சேர்க்க வேண்டாம். வேண்டுமாயின் கடலளவு காதல், ஆழ்ந்த இரங்கல், நெஞ்சார்ந்த நன்றி என அடைமொழிகளைச் சேர்க்கலாம்.
எனவே ஒருவருக்கு நன்றி சொல்லும்போது நன்றி என்றே சொல்லுங்கள். நன்றிகள் எனச் சொல்வதைத் தவிர்க்கலாம்.
உயர்திணைக்குக் ‘கள்’ சேர்த்தல் கூடாது என்றும், அது அஃறிணையில் பலவின் பாலுக்கு மட்டும் உரியது எனத் தொல்காப்பியர் அறுதியிட்டுக் கூறியுள்ளார். ஆனால் விதிவிலக்காக மக்கள் என்பதை ஏற்கிறார். இதை அறியாத எழுத்தாளர் சிலர் உயர்திணைக்கும் ‘கள்’ சேர்க்க, இன்று ‘கள்’ தமிழ்மொழியைத் தள்ளாட வைக்கிறது. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது இதுதானோ?
கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பலவறி சொற்கே
என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரத்தில் உள்ள 169 ஆவது நூற்பா ஆகும்.
பின்வரும் ஒப்பீட்டு அட்டவணையை ஊன்றிப் பார்த்தால் உங்களுக்கே
புரியும்.
|
பழைய
ஒருமை
|
பழைய
பன்மை |
பின்னர்
வந்து சேர்ந்த
‘கள்’ |
|
அவன்
வந்தான் |
அவர்
வந்தார் |
அவர்கள்
வந்தார்கள் |
|
இவன்
வந்தான் |
இவர்
வந்தார் |
இவர்கள்
வந்தார்கள் |
|
எவன்
வந்தான் |
எவர்
வந்தார் |
எவர்கள்
வந்தார்கள் |
|
நீ
வந்தாய் |
நீர்
வந்தீர் |
நீங்கள்
வந்தீர்கள் |
|
நீ
சொல் |
நீர்
சொல்லும் |
நீங்கள்
சொல்லுங்கள் |
அவர்கள் தங்கள்
வீடுகளுக்குச் சென்றார்கள் என எழுதுகிறார் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். இத் தொடரில் இருப்பவை நான்கு சொல்கள். நான்கு சொல்களில் தேவையில்லாமல் மூன்று சொல்களுக்குக் ‘கள்’ சேர்த்த பாவம் அவரையே சேரும்.
அவர்
தம் வீடுகளுக்குச் சென்றார் அல்லது அவர் தம் வீடுகளுக்குச் சென்றனர் என எழுதுவதே முறையாகும்.
ஓர் உணவகத்தில் இருந்த அறிவிப்பு இது:
வாடிக்கையாளர்கள் தாங்கள் தங்கள் பொருள்களைத் தாங்களே பாதுகாப்பாக
வைத்துக்கொள்ள வேண்டும்.
எதற்கு இத்தனை ‘கள்’?
வாடிக்கையாளர் தம் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்க என்று
எழுதினால் போதுமே.
ஒரு கல்லூரிப் பேருந்தில் ‘மாணவியர்கள் உள்ளே’ என எழுதப்பட்டிருந்தது. மாணவி ஒருமை; மாணவியர் என்பது பன்மை; பிறகு மாணவியருக்குக் ‘கள்’ சேர்ப்பது ஏன்? மாணவன் ஒருமை; மாணவர் பன்மை. மேலும் ‘கள்’ சேர்த்து மாணவர்கள் என எழுதுவது தவறுதானே? . ‘கள்’ சேர்த்தே ஆக வேண்டும் என்றால் மாணாக்கச்
செல்வங்கள் என எழுதலாம்.
ஒரு பள்ளியில் ‘ஆசிரியர்கள் உணவு அருந்துமிடம்’ என்று ஓர் அறைக்கு முன்னால் எழுதப்பட்டிருந்தது. ஆனால் எழுதியவர் ‘ஆசிரியர் கள் உணவு அருந்துமிடம் என ஓர் இடைவெளி
விட்டு எழுத, அதன் பொருளே மாறி விட்டது!
ஆசிரியர் என்றாலே பன்மைதான். ஆசிரியருக்குக் ‘கள்’ சேர்க்கலாமா?
என்னதான் தீர்வு?
‘கள்’ சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் அல்லது
இற்றைக்கால ‘கள்’ பயன்பாட்டை ஏற்கலாம் எனப் புதிய இலக்கண நூற்பாக்களை
இயற்றி பின்னேற்பு வழங்க வேண்டும்.
கள் தமிழரின்
வாழ்வில் மட்டுமன்று,
மொழியிலும் பெருவாழ்வு
பெற்றுள்ளது! இதற்குமேல் இதுகுறித்து எழுதினால்
உங்களுக்குக் கள் உண்ட மயக்கம் ஏற்படும்!
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்
No comments:
Post a Comment