தாம் உழைத்துச் சேர்த்த பணத்தை இணையவழி மோசடியால் இழப்போர் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தாம் ஆசை ஆசையாய்ப் பெற்று வளர்த்த இளம் பிள்ளைகளை இழக்கும் சோகம் இணையவழியில் அரங்கேறுவதைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.
இரண்டு நாள்களுக்கு
முன் அந்தியூர் அருகில் உள்ள பர்கூர் மலைச் சாலையில் நிகழ்ந்த பைக் விபத்தில் ஒன்பதாம்
வகுப்பு மாணவி ஒருத்தி அநியாயமாய் இறந்துவிட்டாள் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்தது.
பள்ளிக்குச்
செல்வதாய்ச் சொல்லிச் சென்ற இந்த இளஞ்சிறுமி பள்ளிக்குச் செல்லாமல் முன்பின் பார்த்தறியாத
ஓர் இளைஞன் பின்னால் பைக்கில் அமர்ந்து பயணித்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. எந்தக் காயமும் இல்லாமல் அவன் பிழைத்துக்
கொண்டான். உடனே அவ்விடத்திலிருந்து தலைமறைவு
ஆனதாகச் செய்தி.
இவர்கள் சமூக
ஊடகமான இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி பின்னர்
இணையவழிக் காதலர் ஆனவர்களாம்.
இப்போது இரு
தரப்புப் பெற்றோரும் காவல் நிலையத்தில் தாங்கவியலாத அவமானத்தில் தலைகுனிந்து அமர்ந்துள்ளனர். பெற்ற மகளை இழந்த தாயின் தவிப்பு எப்படியிருக்கும்?
நான் நினைத்துப்
பார்க்கிறேன். இதை அவளுடைய தலைவிதி என்பதா? அவனையும் அவளையும் பெற்றோர் வளர்த்த விதம்
கேள்விக்குரியது என்பதா?
கல்வித்திட்டம் சரியில்லை
என்பதா? வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பத்தைக்
குறை சொல்வதா? சமுதாயம் சரியில்லை என நினைப்பதா?
“உங்கள் மாணவர்
இருவர் பள்ளி நேரத்தில் கடைத்தெருவில் திரிந்தார்கள்” என்று பொதுமக்கள் இழுத்து வந்து என் முன்னால்
நிறுத்திய காலம் ஒன்று இருந்தது.
அது கோபிசெட்டிபாளையத்தில்
கால் நூற்றாண்டு காலத்துக்கு முன் நான் தலைமையாசிரியராகப்
பணியாற்றிய காலம்.
யாரோ பெற்ற பிள்ளைகள்
கெட்டுப் போகிறார்களே என்று கவலைப்பட்டது அன்றைய சமுதாயம்.
முன் அறிவிப்பு இல்லாமல் ஆசிரியர் இருவரை
அனுப்பி பகல் காட்சியின்போது திரையரங்குகளில் என் பள்ளி மாணவர் யாரேனும் பள்ளிச் சீருடையில்
உள்ளார்களா என்று
சோதனையிட்ட காலம் அக்காலம். அதற்குத் திரையரங்க உரிமையாளர் அனுமதித்தார்
என்பதை இன்றைய சூழலில் உங்களால் நம்ப முடியாது.
அப்படியொரு
சோதனையின்போது பிடிபட்டான் ஒரு மாணவன். அன்று
பிற்பகலில் அவனுடைய தந்தையை அழைத்துவரச் செய்து அறிவுரை கூறினேன். “அவன் வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்தர மாட்டான். ஐயா தயவு செய்து அவனுக்கு மாற்றுச்சீட்டு
கொடுத்து வெளியில் அனுப்புங்கள்.”
என்று சொன்னபோது சற்றே
அதிர்ந்து போனேன்.
இன்றைக்கு இப்படியொரு
தந்தையைக் காண முடியுமா?
பிறகு அவன் வாலைச்
சுருட்டிக்கொண்டு படித்துப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தான் அந்த மாணவர் இன்று பெரிய
கட்டட மேஸ்திரியாக இருக்கின்றார்.
எனக்கு நன்றாக
நினைவிருக்கிறது.
தமிழ் அல்லாத பாட ஆசிரியர்கள்
கூட ஐந்து
நிமிட நேரம் ஒதுக்கி ஒழுக்கத்தின் மேன்மையைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
என்னும் குறட்பாக்களை ஐந்தாம் வகுப்பில் இராசாத்தி டீச்சர்(அப்படித்தான் அவரை அழைப்போம்) பால பாடமாக விளக்கிச் சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது.
சினிமாவில்
காட்டுவதையெல்லாம் நிஜ வாழ்வில் செய்து பார்க்காதீர் என்பது அவர்கள் வலியுறுத்திச்
சொன்ன மற்றொரு செய்தியாகும்.
பாடம் தொடங்குமுன்
ஆசிரியர்கள் மாணவர்களின் முகக்குறிப்பைக் கூர்ந்து பார்ப்பார்கள். குறிப்பிட்ட மாணவனை இடைவேளை நேரத்தில் சந்தித்து
விசாரிப்பார்கள்.
தகுந்த புத்திமதி புகட்டுவார்கள்.
சுருங்கச் சொன்னால், ஆசிரியர், பெற்றோர், சமுதாயம் என்னும் மூன்றடுக்குப் பாதுகாப்பில்
அன்றைய சிறுவர் சிறுமியர் வளர்ந்தார்கள்.
ஆனால் இன்றைய
மாணவர் சமுதாயம் யாருடைய பிடியிலும் அடங்காமல் தறிகெட்டுச் செல்கிறது.
மாணவப் பருவத்தில்
சமூக ஊடகங்களைக் கையாள்வது குறித்துச் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். இன்றும் சில நாடுகளில் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்சப் பயன்பாட்டிற்கு முழுத்தடை உண்டு. அப்படியான தடைகள் வேண்டா. ஆனால்
பயன்பாட்டு நெறிமுறைகளை வகுத்துப் பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக நடத்தலாமே.
ஆதார் அட்டையை
செல்போனுடன் இணைத்து,
அதில் உள்ள பிறந்த தேதியின் அடிப்படையில், பதினெட்டு
வயதை எட்டியவர்கள் மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் வகையில் செல்போனின் இயங்கு
மென்பொருளை அமைக்கலாம். இதற்கான தொழில் நுட்பம் உள்ளது என எனக்குத் தெரிந்த அண்ணா பல்கலைக்கழகப்
பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கிறார். அரசு நினைத்தால் இதற்கு எளிதில் ஆவன செய்யலாம்.
விளைந்து பயன்தர
வேண்டிய இளம் நாற்றுகள் நாற்றங்காலில் கெட்டு வீணாவதை என்னால் சகித்துக்கொள்ள இயலவில்லை.
-முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Delete'பசி' பரமசிவம் அவர்களின் பின்னூட்டம் தவறுதலாகக் கைபட்டு நீங்கியது. மன்னிக்க. அவர் மீண்டும் தன் பின்னூட்டத்தை அளிக்கலாம்.
Deleteஆம் ஐயா நீங்கள் கூறியதெல்லாம் எனது மாணவப் பருவத்திலும் நடந்தது. ஆசிரியர்கள் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தார்கள். அன்றைய மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர் சொல்வதைக் கேட்டு தங்களை திருத்திக் கொண்டார்கள். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழ்.சொல்வதை யாரும் கேட்பதில்லை. தவறுக்கு துணை தான் நிற்கிறார்கள். கடந்து போகத்தான் முடியவில்லை... வலிக்கிறது மனம்.
ReplyDeleteஅந்தியூர் மைந்தனின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. இன்று ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
Deleteஅருமை தற்கால
ReplyDeleteஇளைஞர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். வாழ்த்துகள்!
முனைவர்.
நன்றி மன்சூர் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்.
Deleteபுலன வழியில் ஈரோடு ஜி.பரமசிவம் :
ReplyDeleteஅந்தக்காலம் போல் வருமா, இந்தக்காலக் கல்வி? நாம் ஆசிரியர்களாக இருந்த போது எத்துணை நல்ல விசயங்களை நாம் மாணவர்களுக்கு போதித்து இருப்போம்! அதை அக்கால மாணவர்கள் கேட்டார்கள். ஆனால் இப்போது மாணவர்களும் சரி,அவர்தம் பெற்றோரும் சரி ,காது கொடுத்துக் கேட்பதில்லை.தற்போதைய நிலை குறித்து நொந்து கொள்வதை விட, வேறு வழி ஏதும் உண்டா?
முனைவர்.நஞ்சப்பா, கோபி புலன வழியில்:
ReplyDeleteஇப்போது ஆசிரியராக வேலை பார்ப்பது என்பது
நெஞ்சம் தாங்காத வலியோடுதான் ஐயா.
அந்தக்காலம் போல் வருமா, இந்தக்காலக் கல்வி? நான் மாணவனாக இருந்த போது எத்துணை நல்ல விசயங்களை எங்களுக்கு போதித்தார்கள். தவறு செய்தால் அடி விழும்.
ReplyDeleteஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. பெற்றோர் ஆசிரியர்களின் கண்டிப்பை ஏற்க மறுக்கின்றனர். அதுவும் இது போன்ற நிகழ்வுகள் நடக்க காரணமாக அமைகிறது
பெற்றோர்களும் மாணவர்களும் அவசியம் உள்வாங்க வேண்டிய இன்றைய காலகட்டத்திற்கான மிக முக்கிய பதிவு இது ஐயா. மாதா, பிதா, குரு, தெய்வம் என்றிருந்த காலம் போய் சினிமா, அரசியல், சூது, போதை என்று கலாச்சாரம் மாணவர்களிடையே மாறி வருவது எதிர்கால சமூகத்தின்மீதான ஆபத்தான அறிகுறி! "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்!". பதிவிற்கு மிக்க நன்றி ஐயா.
ReplyDelete-மருத்துவர் பூரணசந்திரகுமார், கோபி
Happy and glad to get your posts directly.. Thank you very much sir...
ReplyDeleteVery true.. Technology/ Social media is a kind of knife where we can use it for either killing a person OR cutting a fruit to eat and be healthy.. Unfortunately our kids and younger generations are using it for killing themselves by using it with wrong ways..
Best example is you are posting good news / informations using social media like whatsup / blogs/Facebook.. but others are using it to chat with unknown persons/ distracted with thoughts due to age related thoughts..
Basically parenting , society and self awareness about using this social media has to be monitored with great care and support with good cause. Also we are running behind money, work, wealth creation without knowing the fact that this will not help to solve the purpose.
-Manikandan I S, Bangalore
முடிந்த அளவு பகிர வேண்டிய பதிவு. 🙏🏼
ReplyDelete-நித்தியானந்தன்
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்🙏.
ReplyDeleteதங்களுடைய ஆதங்கம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
தற்போதுள்ள சமுதாயத்தில், பெற்றோர்களின் கவனக் குறைவும்,
பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து,
அவர்களை கட்டுப்பாடு இன்றி வளர்ப்பதும்
ஒரு காரணமாக உள்ளது.
நீங்கள் பள்ளியில் இருந்த காலக்கட்டத்தில்
மாணவர்கள் கெட்டுப் போவதை தவிர்க்க
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள்.
ஆனால் தற்போது அவையெல்லாம்
கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
மாணவனின் மதிப்பெண்கள் மட்டுமே
கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு
மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.
ஆசிரியர்களாகிய நாங்களும்
மாணவர்களைப் படிக்க வைக்க வேண்டும்
மேலும் நூறு சதவீதம் தேர்ச்சி மட்டுமே நாங்கள் தர வேண்டும்
என்ற நிலை எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களைப் பற்றிய அக்கறை இருந்தும்
அதனை எங்களால் செயல்படுத்த முடியவில்லை.
அதற்கான நேரமும் எங்களுக்கு தரப்படுவதில்லை.
மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர் சமுதாயம்,
பெற்றோர் சமுதாயம் மற்றும் அரசு இவை மூன்றும்
இணைந்து செயல்பட்டால் மட்டுமே
நாளைய மாணவர் சமுதாயம் சிறப்பாக இருக்கும்.
நீங்கள் சொல்லும் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ள தக்கவையே.
-சுதா.