Sunday, 2 April 2017

நன்னனும் நானும்

   சென்னை வானொலி நிலையம் ஓர் உருப்படியானச் செயலைச் செய்கிறது. கடந்த ஆறு மாத காலமாக  சனிக்கிழமை தோறும் காலை பத்து மணிக்கு வானொலிப்பெட்டி முன் அமர்ந்து விடுவேன்.

    குறள் நெறி என்னும் தலைப்பில் குறிப்பிட்ட அதிகாரத்தை எடுத்துக்கொண்டு பத்துக் குறட்பாக்களுக்கும் இருபத்தைந்து நிமிடங்களில் விளக்கவுரை தருவதாய் அமையும். 

   முதலில் முதுமுனைவர் வெ.இறையன்பு சில வாரங்கள் பேசினார். பிறகு ஒளவை நடராசன், சிலம்பொலி செல்லப்பன் பேசினார்கள். தொடர்ந்து கவிஞர் அப்துல் ரகுமான் பேசினார். இப்போது புலவர் மா.நன்னன் சில வாரங்களாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.    நேற்று அமைச்சு என்னும் அதிகாரத்தை விளக்கிப் பேசினார். நம் அருகில் அமர்ந்துகொண்டு கலந்துரையாடுவது போல இருந்தது.

    பேராசிரியர் நன்னனுக்கும் எனக்கும் உள்ள நட்பு கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இருந்த காணா நட்பு போன்றது. ஐந்தாண்டுகளுக்கு முன் இளைஞர் ஆத்திசூடி என்னும் நூலை இயற்றி அவருக்கு அனுப்பினேன். நன்னன் சொல் கேள் என்று ஒரு சூடியை அதில் சேர்த்திருந்தேன்.

  பாராட்டியும் நன்றி தெரிவித்தும் ஓர் அஞ்சல் அட்டை அனுப்பினார். அதைப் பொன்னே போல் போற்றி என் கோப்பில் வைத்துள்ளேன்.

  நேற்று அவருடைய வானொலி உரை முடிந்ததும் நன்னன் அவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவருடைய குறள் விளக்கம்  சிறப்பாக இருந்ததைப் பாராட்டினேன். தொடர்ந்து இருபது நிமிடங்களுக்குமேல் பேசிக்கொண்டிருந்தோம். இடையிடையே தம்பி தம்பி என்று அழைத்துப் பேசினார். “என்ன வயசிருக்கும்/” என்று கேட்டார். ”அறுபத்தைந்து” என்று சொன்னேன். “சின்னப் பையன்தான்” என்று சிரித்தார்.  அவருக்குத் தொண்ணூற்றைந்து வயது ஆகிறது. அவரது பேச்சு ஐம்பது வயது இளைஞருக்கு உரியதாய் உள்ளது.

    நன்னன் அவர்கள் விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள சாத்துக்குடல் என்னும் ஊரில் பிறந்தவர். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிப் பல்கலைக்கழகப் பேராசிரியராக உயர்ந்தவர். பெரியாரியலில் கரை கண்டவர்.

   பேராசிரியர் நன்னனும் பேராசிரியர் அன்பழகனும் ஒருசாலை மாணாக்கர்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.

   இன்றைய தேதியில் எழுபதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றப் பின்னர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரகாவும், வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

     நன்னன் அவர்கள் தமிழ் பயிற்றுவிப்பதில் வல்லவர். நன்னன் கற்பித்தல் முறை என்ற தனித்துவமான முறை உருவானது என்றால் நீங்கள் வியப்படைவீர்கள்.

   இவ் வாண்டு ஜூலை முப்பதாம் நாள் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார். ஒவ்வோர் ஆண்டும் ஒரு நூலை எழுதி அவர் பிறந்த நாளான ஜூலை முப்பதாம் நாளன்று சென்னையில் வெளியிடுகிறார். இவ்வாண்டு அவர் எழுதிய சிலப்பதிகார உரை வெளியாகிறது.

    முதுமையில் முடியுமா என்று வினாத் தொடுப்போருக்கு முதுமையிலும் முடியும் என வாழ்ந்து காட்டுகிறார் எனதருமை நண்பர் நன்னன் அவர்கள்.

    பேச்சுவாக்கில் ஒன்றைச் சொன்னார். “பள்ளத்தில் விழுந்தவனுக்குக் கை கொடுத்துத் தூக்க முயலும்போது, அவன் மேலே வர வேண்டுமே அன்றி நாம் பள்ளத்தில் விழுந்துவிடக் கூடாது. தமிழை மேம்போக்காகப் படித்தவருக்குப் புரிய வேண்டும் என்பதற்காகக் கொச்சையாக எழுதுவது கூடாது. மாறாக நம்முடைய தரத்துக்கு  அவர்களை உயர்த்த வேண்டும்” என்றார்.

   தமிழின் தரத்தைப் பாதுகாப்பதற்காகப் பல நூல்களை எழுதியுள்ளர்.
ஒரு சிறிய நூற்பட்டியல் இதோ:

   செந்தமிழா கொடுந்தமிழா?, செந்தமிழைச் செத்தமொழி ஆக்கிவிடாதீர், தடம் புரள்கிறதா தமிழ் உரைநடை?, தமிழ் எழுத்தறிவோம், தமிழைத் தமிழாக்குவோம், தமிழைத் தவறின்றி எழுதுவோம், நல்ல உரைநடை எழுத வேண்டுமா?, எல்லார்க்கும் தமிழ், எழுதுகோலா கன்னக்கோலா?, கல்விக்கழகு கசடற எழுதுதல், பைந்தமிழ் உரைநடை நைந்திடலாமா?

   இந்த நூல்களைத் தமிழாசிரியர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், செய்தியாளர்கள், வலைப்பூவர் போன்றோர் கட்டாயம் படிக்க வேண்டும்; பிழையில்லாமல் எழுத வேண்டும்.

   புலவர் மா. நன்னன் அவர்கள் பைந்தமிழுக்கு வாய்த்தவொரு புலவராய், புரவலராய்ப் பன்னெடுங்காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.20 comments:

 1. பெருந்தகை புலவர் மா. நன்னன் அவர்களைப்பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி ஐயா - கில்லர்ஜி

  ReplyDelete
 2. ...என்றும் போற்றப்பட வேண்டியவர்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி; உங்கள் பின்னூட்டம் இல்லாமல் முந்தைய பதிவுகள் வருந்தின.

   Delete
 3. டி வியில் அவரின் நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன் . கூடுதல் விஷயங்கள் தெரிந்துகொண்டேன் நன்றி

  ReplyDelete
  Replies
  1. நேரம் ஒதுக்கிப் பதிவைப் பார்த்தமைக்கு நன்றி.

   Delete
 4. Prof.Nannan is an inspiration to youngsters. They have to learn a lot from this old young man. Prof.Pandiaraj

  ReplyDelete
 5. நன்னன் அவர்களை ஒரு முறை கரந்தைத் தமிழ்ச் சங்க விழாவிற்கு அழைத்திருக்கிறோம்
  அவருடன் ஒருசில வார்த்தைகள் பேசும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்
  புலவர் மா. நன்னன் அவர்கள் பைந்தமிழுக்கு வாய்த்தவொரு புலவராய், புரவலராய்ப் பன்னெடுங்காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்.

  ReplyDelete
 6. புலவர் நன்னனின் தமிழ் கற்றுத்தரும் பாணி, என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கா வயது 95 ? நம்பமுடியவிலையே! ஆண்டுக்கொரு நூல் வெளியிடும் உற்சாகம் சாதாரணமானதல்ல. அவரை வாழத்த வயதில்லை, வாங்குகிறேன்.
  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
 7. அவருடைய நூல்களைப் படித்திருக்கிறேன். அவரைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 8. வணங்கி போற்றுகிறேன்.
  மரியாதைக்குரிய ஐயா,
  வணக்கம்.
  தங்களது பதிவு பயனுள்ளதாக அமைந்தது. தங்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.
  என அன்புடன்
  தங்களது முன்னாள் மாணவன்
  C.பரமேஸ்வரன்,
  சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.

  ReplyDelete
 9. தமிழுக்கு ஏது மூப்பு....! நன்னன் ஐயா நூற்றாண்டு கடந்தும் தமிழ்ப்பணி ஆற்றிட உள்ளார்ந்து வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 10. ...அவரது நிகழ்ச்சிகள் பல கண்டதுண்டு. அவருக்கு வயது 95 வியப்பளிக்கிறது....இளைஞர் தான். நாம் எப்படி சிந்திக்கிறோமோ அப்படித்தானே நம் மனம் மற்றும் நலன்.... தமிழுக்கும் மூப்பில்லை ஐயா நன்னன் அவர்களுக்கும் மூப்பில்லை....அவர் சேவை மேலும் சிறக்க வாழ்த்துகள்.
  கீதா

  ReplyDelete
 11. தங்களுக்கும் மிக்க நன்றி..மேலதிகத் தகவலுக்கு

  கீதா

  ReplyDelete
 12. திரு.நன்னன் அவர்களிடம் எனது சிறுகதை
  நூலைக் கொடுத்த ஒரு வாரத்தில் என்னிடம் தொலைபேசியில் அந்த நூலைப்பற்றிப் பாராட்டியும் குறைகளை எடுத்துக் கூறியும் உறையாடியதை மறக்க முடியாது.அவரது தமிழ்த்தொண்டு மறக்க முடியாதது.

  ReplyDelete
 13. திரு.நன்னன் அவர்களிடம் எனது சிறுகதை
  நூலைக் கொடுத்த ஒரு வாரத்தில் என்னிடம் தொலைபேசியில் அந்த நூலைப்பற்றிப் பாராட்டியும் குறைகளை எடுத்துக் கூறியும் உறையாடியதை மறக்க முடியாது.அவரது தமிழ்த்தொண்டு மறக்க முடியாதது.

  ReplyDelete
 14. தமிழுக்கு வயதில்லை என்பதைக்காட்டுகின்றது உங்கள் பதிவு. நல்ல தமிழெழுத அனைவருக்கும் வழி காட்டியுள்ளீர்கள். உங்கள் நட்பு பாலும் தேனும் கலந்தது போன்றது. வாழ்க. நீதிபதி மூ.புகழேந்தி

  ReplyDelete
 15. I saw the write up very late. Really a nice one about Nannan. Inspiration to many of us. Age is not a factor..if there is involvement and dedicated. His biography should be included in high school level lessons. Thank u .

  ReplyDelete
 16. முதுபெரும் பேராசிரியர் அவர்களது பேச்சு ஆழமானது. அழகானது. உச்சக்கும் தொனியே அழகு. மக்கள் தொலைக்காட்சியில் தமிழின் சிறப்புக்களைப் பேசுவார். மிகவும் பயனுள்ள தவலாக இருக்கும். நாளிதழ்களில் பிழை, நகர்ப்புற இளைஞர்கள் தேவையில்லாத இடங்களில் கூட ஆங்கிலக் கலப்புடன் பேசுவது திமிர்த்தனமாக உள்ளது. தமிழை அறிந்தவர்கள் தமிழில் பேசிவதில் என்ன கூச்சம். அய்யா நன்னன் போன்றவர்களால் தமிழ் தலை நிமிர்ந்து நிற்கிறது. நன்றி.
  முனைவர் ரா.லட்சுமணசிங்

  ReplyDelete
 17. முதுபெரும் பேராசிரியர் அவர்களது பேச்சு ஆழமானது. அழகானது. உச்சக்கும் தொனியே அழகு. மக்கள் தொலைக்காட்சியில் தமிழின் சிறப்புக்களைப் பேசுவார். மிகவும் பயனுள்ள தவலாக இருக்கும். நாளிதழ்களில் பிழை, நகர்ப்புற இளைஞர்கள் தேவையில்லாத இடங்களில் கூட ஆங்கிலக் கலப்புடன் பேசுவது திமிர்த்தனமாக உள்ளது. தமிழை அறிந்தவர்கள் தமிழில் பேசிவதில் என்ன கூச்சம். அய்யா நன்னன் போன்றவர்களால் தமிழ் தலை நிமிர்ந்து நிற்கிறது. நன்றி.
  முனைவர் ரா.லட்சுமணசிங்

  ReplyDelete