நம் நாட்டின் எண்பதாவது விடுதலை நாள் விழாவை நாம் சீரும் சிறப்புமாகக் கொண்டாடும் தருணமிது. ‘நாமிருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம்’ என்று பாடிய பாரதியோடு நாமும் நெஞ்சை நிமிர்த்திப் பாடும் நேரமிது.
ஆனால் நாம் முழுமையான ஈடுபாட்டுடன் கொண்டாடுகிறோமா என்பதையும் இந்த நேரத்தில்
சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விடுதலைநாள் விழாவையொட்டி ஒரு வாரம் பொதுமக்கள் தத்தம் இல்லங்களில் தேசியக்கொடி
ஏற்ற வேண்டுமென நடுவணரசு வேண்டுகோள் விடுத்தது. அதையேற்று நாம் செயல்படுத்தவில்லையே.
நான் அமெரிக்கா, கனடா நாடுகளுக்குச் சென்றிருந்தபோது அங்கு நான் கண்ட காட்சியை இப்போது நினைவு கூருவது பொருத்தமாக இருக்கும்.
அங்கே இல்லந்தோறும் தமது தேசியக்கொடியை பறக்கவிட்டதைப் பார்த்தேன்; அனைவரும்
தம் வாகனங்களில் தேசியக்கொடியைப் பறக்கவிட்டவாறு சென்றனர். பலர் தம் வீட்டின்முன் கம்பம்
நட்டு அதில் ஆண்டு முழுவதும் தேசியக் கொடியைப் பறக்க விடுவதையும் பார்த்து வியந்தேன்.
அந்நாட்டின் பெரிய வணிக நிறுவனங்கள் வானுயரக் கம்பம் அமைத்து அதில் மிகப்பெரிய
கொடிகளைப் பறக்க விடுகின்றனர். அந்நாட்டின் பூங்காக்களுக்குச் சென்றால் அவர்களுடைய
தேசியக் கொடிதான் நம்மை முதலில் வரவேற்கும்!
அங்கே பெட்டிக்கடை தொடங்கிப் பேரங்காடிவரை தேசியக் கொடி விற்பனை பெருமளவில்
நடைபெறும்.
அவர்களுக்குள்ள நாட்டுப்பற்று நமக்கு இல்லையோ என நினைக்கத் தோன்றுகிறது.
இல்லந்தோறும் கொடியேற்றும் இயக்கத்தை தமிழக அரசு ஏன் முன்னெடுக்கவில்லை? தமிழ்நாட்டில்
இயங்கும் கட்சிகள் ஏன் முன்னெடுக்கவில்லை? தமிழ்நாட்டு காட்சி ஊடகங்கள் இந்த இயக்கத்தை
ஏன் கண்டுகொள்ளவில்லை?
தேசியக்கொடியைத் தயாரிப்பது கதர் வாரியம். ஆயிரக்கணக்கான ஏழை நெசவாளர்கள் தம்
கைகளால் நெய்து தருகின்றனர். பெரிய அளவில் இல்லந்தோறும் கொடியேற்றம் நடைபெற்றால் ஏழை
நெசவாளர்க்குப் பேருதவியாய் அமையும்.
எங்கள் இல்லத்தில் விடுதலைநாள், குடியரசு நாள் சமயத்தில் கொடியேற்றுவது கடந்த
முப்பது ஆண்டுகளாகத் தொடர்கின்றது. இல்லத்தின் முகப்புச் சுவரில் தேசியக் கொடியை நிலையாகப்
பதித்துள்ளேன்.
எங்கள் இல்லத்தில் பறக்கும் தேசியக்கொடி
விடுதலைநாள் விழாவன்றும் குடியரசுநாள் விழாவன்றும் நம் ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பறந்தால் எவ்வளவு அழகாயிருக்கும்!
இது என் கனவு. கனவு நனவாகுமா?
முனைவர்
அ.கோவிந்தராஜூ, கரூர்.
No comments:
Post a Comment