Friday, 17 July 2026

ஆடிக் கும்மாயம்

   இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை. என் துணைவியார் நேற்றே பூசைக்குரிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். பூசையின் ஒரு பகுதியாக இறைவனுக்கான படையல். இதுவரை செய்யாத ஒன்றைச் செய்து படைக்கப் போவதாய்ச் சொன்னார். அது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் என்று ஒரு புதிர் போட்டார். செட்டி நாட்டு உணவு வகையில் ஒன்று என்னும் குறிப்பையும் தந்தார். வாயில் எச்சில் ஊறியதே தவிர, மூளையில் ஒன்றும் ஊறவில்லை.

     இன்று காலை ஆர்வ மிகுதியால் சமையலறையை எட்டிப் பார்த்தேன். ஓர் இனிப்பு வகை வாணலியில் வெந்து கொண்டிருந்தது. அதன் வாசனை என்னை வரவேற்றது. “ இதுதான் இன்றைக்கு நாம் சாமிக்குப் படைக்கவுள்ள கும்மாயம்” என்றார் துணைவியார்.

   எப்போது பூசை முடியும் என்று காத்திருந்து, கும்மாயத்தைச் சுவைத்ததும் மனம் கும்மாளம் இட்டது. அப்படியொரு இனிப்புப் பொருளை நான் இதுவரை சுவைத்ததில்லை.

உண்டு முடித்ததும் இதைத் தயாரிப்பது எப்படி எனக் கேட்டேன்.

தேவையான பொருள்கள்:

உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, பச்சரிசி, நெய், முந்திரி, ஏலக்காய்த் தூள்.


செய்யும் முறை:
   முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு சேர்த்துப் பொன்னிறமாகி நல்ல மணம் வரும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின் அதே வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு மிதமான தீயில் வைத்துப் பொன்னிறமாக வறுத்து, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  அதன் பின் அதே வாணலியில் பச்சரிசியைப் போட்டு, இரண்டு  நிமிடம் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி,  வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து, வெல்லம் கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

   பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பொடியை எடுத்து நெய்யுடன் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். அதன் பின்னர் நெய்யில் வறுத்த முந்திரியைப் போட்டுக் கிளற வேண்டும்.

  பின்பு அதில் வெல்ல நீரை ஊற்றி, நீர் வற்றும் வரை வதக்க வேண்டும். பின் தீயைக் குறைத்து, அதில் ஏலக்காய்த் தூள் மற்றும் மீதமுள்ள நெய்யை ஊற்றி, குறைவான தீயில் வைத்து, இரண்டு நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.

இப்போது சுவையான ஆடிக் கும்மாயம் தயார்.

சற்றே ஆறியவுடன் உருண்டை பிடித்துப் பரிமாறலாம்.

கும்மாயம்


அடுத்த வெள்ளிக்கிழமை உங்கள் வீட்டிலும் கும்மாயம் மணக்கட்டும்!

 

முனைவர் .கோவிந்தராஜூ,

புக்கில்: கரூர்

No comments:

Post a Comment