Thursday 16 October 2014

ஆகூழும் விசாவும்

  

     திருவள்ளூவர் ஆகூழ்(good luck) போகூழ்(bad luck) என்ற சொற்களைக் கையாள்கிறார்.(குறள் 371) ஒருவருக்கு ஆகூழ் இருந்தால் மட்டுமே விசா கிடைக்கும் போலும். அமெரிக்கத் தூதரக அலுவலர் கடவுளைப்போன்றவர். அவரும் கடவுளும் நினைத்ததைச் செய்பவர்கள். கொடுப்பதற்கும் மறுப்பதற்கும் இவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு. நாம் மேல்முறையீடு எதுவும் செய்ய முடியாது.

   அமெரிக்காவில் வசிக்கும் மகளையும் மாப்பிள்ளையையும் பார்த்து வரலாம் என்று முடிவு செய்தோம். முதலில் என்னுடைய கடவுச்சீட்டைப் புதுப்பித்தேன். என் துனைவியாருக்குக் கடவுச்சீட்டைப் பெற்றேன். எனக்கிருக்கும் கொஞ்சம் கணினி அறிவைப்பயயன்படுத்தி, எனது இணைய வசதியுடன் கூடிய  மடிக்கணினி உதவியோடு வெற்றிகரமாக இப்பணிகளைச் செய்து முடித்தேன். அதே ஆர்வத்தோடு விசா விண்ணப்பத்தை அனுப்ப எண்ணி விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விவரங்களைப் பதியத் தொடங்கியபோது பல ஐயங்கள் எழுந்தன. பலமுறை அமெரிக்கா சென்றுவந்த சம்பந்தியைத் தொலைபேசியில் அழைத்து surname என்றால் என்ன என்று கேட்டேன். ஒரு முகவர் மூலமாக விசா பெறுவதே நல்லது என்று அறிவுரை வழங்கினார். நானும் சென்னையில் உள்ள ஒரு முகவரைத் தொலைப் பேசியில் அழைத்துப் பேசினேன். ஒரு கல்லூரிப் பேராசிரியரைப் போல விரிவாகப் பேசினார். அவருடைய பெயர் சுதாகர் கல்லூரி. ஆந்திராக்காரர். அதற்கு அடுத்த வாரமே சென்னைக்குச் சென்று அவரைச் சந்த்திதோம்.
   ஏகப்பட்ட ஆவணங்களைக்கேட்டார். எனது கல்விச் சான்றுகள், வருமானவரித் தாக்கல் படிவம், பணிச்சான்றுகள், வங்கிக் கணக்கு, சொத்துப்பத்திரம், மாப்பிள்ளையின் வருமானம், வருமானவரி கட்டிய விவரம், கடவுச்சீட்டு, பணி விவரம், மகளின் கடவுச்சீட்டு, திருமணச்சான்று என்று பட்டியல் நீண்டது. அனைத்தையும் எழுபது டாலர் செலவு செய்து அஞ்சலில் அனுப்பினார். வந்து சேர பதினெட்டுநாள் பிடித்தது.

    ஒருவழியாக கைவிரல் ரேகை பதிய ஒரு தேதியும், விசா நேர்காணலுக்கு ஒரு தேதியும் நேரமும் பெற்றுத் தந்தார். இதற்காக இருவருக்குமான விசா கட்டணம் ரூபாய் 21600, அவரது சேவைக்கட்டணம் என மொத்தம் 25000 ரூபாய் பெற்றுக்கொண்டார். ஒருகால் விசா கிடைக்காவிட்டால் மீண்டும் பணம் கட்டி ஆறு மாதத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என ஒரு  குண்டைத் தூக்கிப் போட்டார்.

  குறிப்பிட்ட நாளில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிரில் உள்ள விசா விண்ணப்ப மைத்திற்குச் சென்றோம். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே சென்று திறந்த வெளியில் வரிசையில் நின்று பல சோதனைகளுக்குப் பிறகு உள்ளே நுழைந்தோம். ஓர் அமெரிக்க மாது புன்னகையுடன் வரவேற்றார். அவர் பேசியது அவ்வளவாக புரியவில்லை. ஒருவாரு கைவிரல் பதிவும் போட்டோ எடுத்தலும் நிறைவடைந்தது.
    மறுநாள்(16.10.2014) நேர்காணல். காலை 8.30 மணிக்கு. இரண்டு கிலோ எடையளவு ஆவணங்களோடு முன்னதாகவே சென்றோம்., நின்றோம். முதல் நாள் மாலையில் சுதாகர் கல்லூரி அவர்கள் ஒரு மாதிரி நேர்காணலை நடத்தி கொஞ்சம் வயிற்றில் புளியைக் கரைத்தார். அவர் சொன்னதை எல்லாம் அசைப் போட்டபடி வரிசையில் நகர்ந்தோம். எனக்கு முன்னால் இளைஞர் சிலர் கனவும் கவலையுமாய் நின்றனர். பல்வேறு சோதனைகளுக்குப்பிறகு உள்ளே சென்று குறிப்பிட்ட இருக்கையில் காத்திருந்தோம். 
      எங்களுடைய முறை வந்ததும் அமெரிக்க அதிகாரி முன் நின்றோம். நிற்கத்தான் வேண்டும். எங்களுக்கு முன்னால் சென்ற மூவரில் இருவருக்கு விசா மறுக்கப்பட்டது. நாங்கள் அருகில் சென்று குட் மார்னிங் சொல்லி இரு கடவுச்சீட்டுகளையும் தந்தோம். நல்லவேளையாக அவர் பேசிய ஆங்கிலம் புரிந்தது. உங்கள் மகள், மருமகன் என்ன வேலை செய்கிறார்கள், எத்தனை மாதங்கள் அமெரிக்காவில் இருப்பீர்கள், இங்கு உங்களுக்குச் சொந்த வீடு உள்ளதா என்று கேட்டார். தமிழ்தான் தெரியும் என விண்ணப்பத்தில் குறித்திருந்தால் தமிழில் கேள்வி கேட்பார். எனக்கு முன்னால் நின்ற பெரியவரிடம் அழகு தமிழில் கேள்வி கேட்டார். அமெரிக்கர் பேசிய தமிழ் அந்த பதட்டமான சூழலிலும் எனது செவிகளில் தேனாய்ப் பாய்ந்தது. என் துணைவியாரிடமும் ஒரு கேள்வி கேட்டார். தயங்காமல் தெரிந்ததைக் கூறினோம். சரியோ தவறோ தயங்காமல் பேசுங்கள் என்று  முகவர் சொல்லியிருந்தார் நேர்காணல் மூன்று நிமிடங்களில் முடிந்தது.
  கடவுச் சீட்டை அவரே வைத்துக்கொண்டு Your visa is approved  என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினார். விசா முத்திரை பதியப்பெற்று அனுப்பப்படும் என்று கூறினார். நாங்களும் நன்றி சொல்லிவிட்டு நிம்மதியாய் வெளியில் வந்தோம். இனி நாங்கள் பத்தாண்டுகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் அமெரிக்கா சென்று வரலாம்.
 கொண்டு சென்ற ஆவணங்கள் எதையும் பார்க்கவில்லை.       சிலருடைய ஆவணங்களைச் சல்லடைப் போட்டுச் சலித்தார்..

இதனால் பெறப்படும் நீதி யாதெனின், ஆகூழ் இருப்பின் விசா கிடைக்கும்.
  










        .


 A

3 comments: