Tuesday 21 October 2014

என்று மடியும் இந்த தீபாவளி மோகம்



      கரூர் கடைத்தெருவுக்கு அருகிலே என் நண்பரின் வீடு உள்ளது. காரை அவர் வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, பேருந்தில் கோவைக்குச் சென்று மாலையில் திரும்பினேன். வந்து என் காரை பார்த்ததும் எனக்குத் தலை சுற்றியது. காரைச் சுற்றி சுமார் இருபது இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன! எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம். பட்டாசுக் கட்டுகளையும் துணிக்கடைப் பைகளையும் தூக்கியபடி நகர்ந்தனர். அக்கூட்டத்தில் எனக்குத் தெரிந்த நூலகர் ஒருவர் ஓடி வந்து வாகனங்களை அப்புறப்படுத்தி உதவியதால் என் காரை எடுக்க முடிந்தது. வீட்டுக்குச் செல்கிற வரைக்கும் நடந்து சென்றவர்கள் கூட என் காரை முந்திச் சென்றார்கள் என்றால் நான் எவ்வளவு வேகத்தில் ஓட்டியிருப்பேன் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
    ஓர் இடத்தில் போக்குவரத்துக் காவலர் பெருங்கூட்டத்தை ஒழுங்கு படுத்த முடியாமல் திணறினார். திரும்பிப் பார்த்தேன். அது ஒரு டாஸ்மார்க் கடை! சென்ற தீபாவளியின்போது மிக அதிக மது விற்பனை நடந்தது எங்கள் கரூரில்தான்! அந்தப் பெருமையை(notoriously famous) இந்த ஆண்டும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர் குடி மக்கள். அமராவதி பாலத்தில் மொடாக்குடியர் சிலர் அலங்கோலமாக போதையில் அதுவும் பாதையில் கிடந்தனர்.
   ஒருவழியாக வீடுவந்து சேர்ந்தேன். சற்று ஓய்வுக்குப் பின் துணைவியார் ஆசை ஆசையாய் செய்து கொடுத்த அருமையான குலோப் ஜாமூனை சுவைத்தபடி இக் கட்டுரையைத் தட்டச்சு செய்யத் தொடங்கினேன்.
    தேம்பித் தேம்பி அழும் குழந்தையைப் போல, விட்டு விட்டுத் தூறிக்கொண்டிருந்தது மழை. எனவே எங்கள் தெருவில் வெடிச்சத்தம் அவ்வளவாக இல்லை. வெடிப்பதால் எழும் புகை, சத்தம் எல்லாம் சுற்றுப்புறச்சூழலைக் கெடுக்கும். அது சிறு குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் பெரும் தொல்லையைத் தரும். என் இளைய மகள் தீபாவளி சமயத்தில் பிறந்தவள். அந்த மருத்துவ மனயைச் சுற்றியிருந்த வீட்டுக்காரர்களை அணுகி பேரொலி எழுப்பும் லட்சுமி வெடிபோன்றவற்றை வெடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதும் அவர்கள் ஒத்துழைத்ததும் இப்போது நினைவுக்கு வருகிறது.
   நாங்கள் தீபாவளிக்கு வெடி வாங்குவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இரு மகள்களும் வெடி வெடிப்பதால் ஏற்படும் கேடுகளை உணரத் தொடங்கியதும் வெடிச்சத்தம் கேட்பதில்லை. சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் குறைந்த அளவில் பட்டாசுகளைப் பயன்படுத்தலாம்.
   பட்டாசு வாங்கும் பணத்தை ஒரு உருப்படியான செலவுக்குப் பயன்படுத்துகிறோம். கரூரில் வள்ளலார் கோட்டம் என்ற அமைப்பு உள்ளது. இவ்வமைப்பினர் தினம்தோறும் சூடாகச் சமைத்த உணவை மதிய நேரத்தில் ஆதரவற்ற நூறு முதியோர்களுக்கு அவர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று அன்புடன் அளிக்கிறார்கள். இதற்கு தினம்தோறும் ஆயிரம் ரூபாய் செலவாகிறதாம். முற்றிலும் நன்கொடையாளர்களை நம்பிதான் இத்திட்டம் செயல்படுகிறது. பட்டாசு வெடித்து மகிழ்வதைவிட, இந்த அன்ன தானத்திற்கு கொடுத்து மகிழ்வது சிறப்பல்லவா? இன்பங்களுள் மிகச்சிறந்தது ஈத்துவக்கும் இன்பம் என்று வள்ளுவர் குறிப்பிடுவார்.
     அரசுப்பள்ளியிலும், அரசுக் கல்லூரியிலும் படித்தவன் நான். குப்பனும் சுப்பனும் கொடுத்த வரிப்பணத்தில் படித்தவன். அப்போது சமுதாயத்திலிருந்து எடுத்ததை இப்போது திருப்பிக் கொடுப்பது என்னும் ஞானோதயம் ஏற்பட்டதால்தான் மேற்படி திட்டத்திற்குத் தோள் கொடுக்கத் தொடங்கினேன். பிறந்தநாள், மணநாள் என ஒவ்வொரு நிகழ்விலும் கொடுத்து மகிழ்கிறோம்.
    இனி, தீபாவளி சமயத்தில் குடிப்போரும் வெடிப்போரும் கொடுப்போராய் மாறுவார்களாக.
    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
   


   

1 comment:

  1. வாழ்த்துக்கு நன்றி.
    ஈத்துவக்கும் தங்கள் நெறி வெகு சிறப்பு.
    தொடரட்டும்....பரவட்டும்

    ReplyDelete