Monday, 9 November 2015

வகுப்பறை வன்முறைகள்

     என் மகள் அமெரிக்காவின் புகழ்பெற்ற டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி  பட்டப் பேற்றுக்காக ஆய்வு செய்கிறாள். அங்கு இளம் அறிவியல் பட்ட வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு உயிரி தொழில்நுட்பப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியப் பணியும் அவளுக்கு வாய்த்துள்ளது. அவளுக்கு  இக் கல்வி ஆண்டின் இறுதியில் முனைவர் பட்டப் பேறு கிடைக்கும். பிறகு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவோ ஆராய்ச்சி ஆய்வகங்களில் விஞ்ஞானியாகவோ பணியேற்கலாம்.


   என் மகளைப் பற்றி நானே புகழ்ந்து சொல்லக் கூடாது. கற்பித்தலில் மிகுந்த ஆர்வமும் ஆற்றலும் உடையவள். சில சமயம்  நடு நிசி வரையில் கூட  விழித்திருந்து பாடக்குறிப்புகளைத் தயார் செய்வாள். பாடம் தொடர்பான நூல்களைத் தேடிப்பிடித்துப் படிப்பாள்.  கடந்த மூன்றாண்டுகளாக பாராட்டும்படியாகப் பாடம் நடத்துகிறாள். நான் ஒருமுறை அப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது அவளுடைய துறைத் தலைவரே என்னிடம் பாராட்டிப் பேசினார். இதைக் கேட்ட  என் மனைவி ஈன்ற பொழுதின் பெரிது உவந்தாள்.

   இந்தப் பின்னணியில் சென்றவாரம் என் மகள் தன் முக நூல் பக்கத்தில் போட்டிருந்த பதிவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உணர்வுகளைக் கொட்டி உருக்கத்துடன் எழுதியிருந்தாள்.

    “முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக  ஆசிரியப் பணி ஒன்றை மட்டும் அளவற்ற ஈடுபாட்டுடன் செய்ததோடு அதையே வாழ்வாதாரமாகக் கொண்ட  என் தந்தைக்கு மகளாகப் பிறந்தவள் நான். கற்பித்தல் திறன் என்பது எனக்குக் கிடைத்த மரபு வழிச் சொத்தாகும்.. பாடம் நடத்தும்போது பாடக் கருத்துகளைச் சிந்தாமல் சிதறாமல் மாணவர்களிடம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கும் எனக்கு இப்போது ஒரு சோதனை வந்து விட்டது. எதிர்காலத்தில் ஆசிரியப் பணியை ஏற்க வேண்டுமா என்பது பற்றி யோசிக்கிறேன்..” என்று குறிப்பிட்டிருந்தாள்.

   ஒரு தேர்ந்த போர் வீரனைப்போல் வகுப்பறைக்குள் சென்று பாட வேளை நிறைவில் வெற்றிவாகை சூடி மிடுக்காக வெளியில் வரும் அவளுக்கு தற்போது என்ன நேர்ந்தது? பல ஆண்டுகளுக்குமுன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் அவள் விரிவுரையாளராக இருந்தபோது அவளுடைய மாணவர்கள் கொடுத்த பின்னூட்டங்கள் அவள் ஒரு சிறந்த ஆசிரியை என்று பறை சாற்றின என்பது இன்றும் என் நினைவுக்கு வருகிறது.

 முகநூலில் இருந்த என் மகளின் பதிவைத் தொடர்ந்து படித்தேன்.     “நான் பாடம் நடத்தும் போது மாணவர் சிலர் தம் அலைப் பேசியில் குறுஞ்செய்தியை அனுப்பிக்கொண்டு பாடத்தைக்  கவனிக்காமல் இருப்பது மன வேதனை அளிக்கிறது. எப்படியோ பட்டம் பெற்றால் போதும் என நினைக்கிறார்கள்  போலும்.” என்று பதிவை முடித்திருந்தாள்.

   நம் நாட்டில் இப்போது தவறு செய்யும் மாணவர்களைத் திட்டவோ கண்டிக்கவோ முடியாத நிலை உள்ளது.. வெளி நாடுகளில் வகுப்பறைக்கு மாணவர்கள் துப்பாக்கியும் கையுமாக  வருகிறார்கள். இந்தச் சூழலில் எந்த ஆசிரியருக்குதான் தப்பு செய்யும் மாணவர்களைத் தட்டிக்கேட்கும் துணிவு வரும்?

    வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது மாணவர்களின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர் அருமையாகச் சொல்வார்.  இருப்பவர் முன் பணிவாக நின்று இல்லாதவர் எப்படி யாசிப்பார்களோ அப்படிப் பணிவுடன் வகுப்பறையில் இருந்து ஆசிரியரிடம் மாணவர்கள் கற்க வேண்டும் என்பது குறள் கருத்தாகும். அப்படிக் கற்றாரே கற்றவர் மற்றவரெல்லாம் கடையர் என்று கூறுகிறார் வள்ளுவர்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்

என்பது குறள்பா. பாடப் பொருளை உணரும் ஆர்வத்தோடு கேட்க விரும்பும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது என்பது வளரும் நிலையில் உள்ள செடிகள் நிரம்பிய பாத்தியில் நீர் பாய்ச்சுவதற்குச் சமம் என்று மேலும் கூறுவார்.

   இன்றைக்கு மேடைகளில் பேசவும் சில நூல்களை எழுதவும் என்னால் முடிந்தது என்றால் அதற்குக் காரணம் பேராசிரியர் தமிழண்ணல் போன்றோரின் வகுப்பறைகளில் அடங்கி ஒடுங்கிப் பாடம் கேட்டதே ஆகும்.

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பவணந்தி முனிவர்  தான் இயற்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலில் ஒரு மாணவன் வகுப்பில் எப்படி பாடம் கேட்க வேண்டும் என்பதை ஒரு நூற்பாவில் விளக்கியுள்ளார்.

   உரிய நேரத்தில் வகுப்பறையில் இருத்தல் வேண்டும். ஆசிரியர் வரும்போது எழுந்து பணிந்து நின்று வழிபட வேண்டும். அவர் அமரச் சொன்னதும் ஓவியர் வரைந்த பாவையைப் போல வகுப்பில் அமர வேண்டும். செவி இரண்டும் வாய்களாக மாறி ஆசிரியர் கூறுவதைத் தாகம் ஏற்படும்போது பருகும் ஆர்வத்தினர் ஆகிப் பருக வேண்டும். அவற்றைத் தவறாமல் தம் உள்ளத்தில் பதிய வேண்டும்.

 இப்படிப் பாடம் கேட்பவனுக்கு இலக்கணம் வகுத்த நாடு நம் நாடு. ஆச்சார்ய தேவோ பவ அதாவது ஆசிரியர் தெய்வமாக வணங்கத் தக்கவர் என்று சொன்ன நாடு நம் நாடு. திருவருளை விட குருவருள் சிறந்தது என உரைத்தது நம் நாடு. குருவின் பெயரைச் சொல்லி, குருவைக் கண்டு, குருவின் சொல் கேட்டலே பாடப் பொருளில் தெளிவு பெறுவதற்குரிய வழியாகும் என்று உரைத்த  திருமூலர் வாழ்ந்த நாடு நம் நாடு.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

 என்பது திருமூலரின் திருமந்திரம் ஆகும்.

   
திருமூலர்
ஆனால் நமது நாட்டில், பள்ளி, கல்லூரிகளில்  மாணவர்களால் அரங்கேற்றப்படும் வகுப்பறை வன்முறைகளுக்கு அளவே இல்லை.     2012 ஆம் ஆண்டு சென்னை செய்ன்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை வகுப்பறையில் ஓர் ஒன்பதாம் வகுப்பு மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட  நிகழ்வு நம் மனத்தில் நீங்காத வடுவாக உள்ளது.. அதற்கு அடுத்த ஆண்டில் ஒரு கல்லூரிப் பேராசிரியர் வகுப்பறையில் மாணவனின் அமில வீச்சுக்கு ஆளானார். அண்மையில் ஓர் அரசுப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் மது அருந்தி வகுப்பறைக்கு வந்து வம்பு வளர்த்த செய்தி நாளேட்டில் வந்ததும் நாம் அறிந்ததே.

     வகுப்பறை வன்முறை என்பது அம்பு விடுவதில் தொடங்கி ஆளைக் கொல்வதில்  முடிகிறது. ஆசிரியர்களுக்குச் சகிப்புத் தன்மை வேண்டும் என்று ஒரு தரப்பினர் உரக்கப் பேசுகிறார்கள். சகிப்புத் தன்மைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா?

   கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாத சிலரால் மற்ற மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.  பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் பணக்கார மாணவர்கள் என்பதால் கல்லூரி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.  இந்த நிலை நீடித்தால் அறிவாற்றல் மிகுந்த எவரும் ஆசிரியப் பணிக்கு வரமாட்டார்கள்., பிற பணிகளுக்குச் சென்றுவிடுவார்கள்.

   ஓர் ஆசிரியருக்கு தான் பெறும் ஊதியத்தைவிட தன்மானம்  மிக முக்கியமானதாகும். மாணவர்களிடமிருந்து ஆசிரியப் பெருமக்கள் மரியாதையைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை.

   மாணவர்கள் இதை உணர வேண்டும்; உணர்த்த வேண்டிய பொறுப்பில் இருப்போர் உணர்த்த வேண்டும்.

-முனைவர் அ.கோவிந்தராஜூ

பின் குறிப்பு: இக் கட்டுரை 10.11.15 தேதியிட்ட தினமணி இதழின்                      நடுப்பக்கத்தில் வெளியானது.


4 comments:

 1. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 2. தங்களின் மனநிலை நன்றாக புரிகிறது ஐயா...

  இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 3. Proud to know that the Tamil people have framed such wonderful rubrics of teaching ! Great article

  ReplyDelete
 4. தங்கள் தளம் கண்டேன். தொடர்வேன். நன்றி.

  ReplyDelete