Sunday, 22 November 2015

பாரம்பரியச் செல்வங்களைப் பாதுகாப்போம்

         இப் பூவுலகு மிகப்பழமையானது. பல்லாயிரம் ஆண்டுகாலப் பாரம்பரிய பெருமை உடையது. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் பாரம்பரியமும் கலாச்சாரமும் இரு கண்களைப் போன்றவை.
பாரம்பரியப் பெருமைக்கு உரியவை பழங்காலக் கட்டடமட்டுமன்று., பழமைமிக்க எதுவும் பாரம்பரியச் சின்னங்கள்தாம்.

   அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள, பழங்காலத்தில் தீயை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட சிக்கிமுக்கிக் கற்கள் நம் பாரம்பரியச் சின்னங்கள்தாம். நம் பாட்டன் காலத்துப் பாக்குவெட்டி, உரல், உலக்கை, குந்தானி, செக்கு, ஏற்றம், கவலை, அரிக்கன் லாந்தர் எல்லாமே பாரம்பரியச் சின்னங்கள்தாம். இவற்றைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்கு எதுவும் தெரியாது. இவற்றை இப்போது அருங்காட்சியகத்தில் கூட பார்க்க முடியாது. தொன்மைச் சிறப்பு மிக்க கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், குருத்வாரா போன்றவை ஒரு நாட்டின் பெருமைக்குரிய பாரம்பரிய சொத்துகளாகும். ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின் அறிவையும் ஆற்றலையும் புகழையும் அடுத்தடுத்த காலக்கட்டத்தில் வாழும் மக்களுக்குப் புலப்படுத்தி நிற்பவை இவையே.

    பல நாடுகளிலும் உள்ள இத்தகைய பாரம்பரியச் சிறப்புமிக்கவற்றை ஆய்வு செய்த யுனெஸ்கோ நிறுவனம் அவற்றுள் சிலவற்றை மட்டும்  உலகப் பாரம்பரிய சொத்துகள் என அறிவித்து அவற்றைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் நிதி உதவி அளிக்கிறது.

   அண்மையில் ஒரு பாரம்பரியச் சின்னம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி சிதறுண்டபோது அந்த நாடே சோகத்தில் மூழ்கியது. அந்த நாடு சிரியா என்னும் சிறிய  நடாகும். அந் நாட்டின் பாமிரா என்னும் நகரில் உள்ள பாலைவனத்து முத்து என அழைக்கபடும் பழமை வாய்ந்த பெல் கோவில் இடித்துத் தகர்க்கப்பட்டதை நாளேடுகளில் பார்த்தபோது இது ஒரு நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைத் தகர்ப்பதற்கு ஒப்பாகும் என பன்னாட்டு அறிஞர்களும் கண்டனக்குரல் எழுப்பினர்.
 இதைத் தொடர்ந்து இத்தாலி நாடு தெரிவித்த யோசனையை யுனெஸ்கோ ஏற்றுக் கொண்டு நீலத்  தலைக்கவசங்கள் (UN Blue Helmets) என்னும் அமைப்பை உருவாக்கி அறிவித்தது. இனி இவ் வமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் செயல்படும். இதற்கென படை வீரர்கள் இருப்பர்; படைத் தளவாடங்கள் வாகனங்கள் எல்லாம் இருக்கும். பாரம்பரிய சொத்துகளைத் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவது இதன் பணியாகும்.

    நம் நாட்டில் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்கும் பணியை இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம்(ASI) சிறப்பாகச் செய்கிறது. மேலும் இன்டாக் (INTACH) என்னும் அமைப்பும் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. தமிழ் நாட்டில் தன் ஃபவுண்டேஷன் என்னும் அமைப்பு தன் பங்கை நன்றாகச்  செய்கிறது. இது அண்மையில் மதுரையில் உலகப் பாரம்பரிய வாரத்தை ஒட்டி  ஒரு ஒளிப்படக்கண்காட்சியை நடத்தியது.

    தமிழகக் கல்வித் துறையின் வழிகாட்டுதலில் ஒரு சில   பள்ளிகளில் பாரம்பரிய மன்றங்கள்(Heritage Club) செயல்படுகின்றன. அவற்றுள் நான் பணியாற்றும் பள்ளியும் ஒன்று. சென்ற வாரம் கரூருக்கு அருகில் உள்ள ஆறு நாட்டார் மலை என்னும் புகழி மலைக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அங்குள்ள சமணர் படுக்கைகளைக் காட்டி விளக்கினேன்.

     பொதுமக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர், அரசு அதிகாரிகள் இவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் நம் நாட்டின் பாரம்பரியச் சின்னங்கள் சிதைக்கப்படுகின்றன. ஆக்ரா நகரைச்  சுற்றிப் பல தொழிற்சாலைகள் தோன்றி, புகையைக் கக்கி மட்டற்ற அழகுடைய தாஜ்மகாலை மாசுபடுத்தின. பிறகு உச்ச நீதிமன்றம் உரிய நேரத்தில் தலையிட்டுத் தடைவிதித்தது.

    தனி மனித விழிப்புணர்வு என்பது அறவே இல்லை. பாங்குறச் செதுக்கப்ப்பட்ட பழங்காலச் சிலைகள் இன்று கையிழந்து காலிழந்து காணப்படுகின்றன. சில கோவில்களில் இத்தகைய சிலைகளைச் சுற்றி இரும்பு வலைகளை அமைத்திருப்பது நமது பொறுப்பின்மையைக் காட்டுகிறது என்றும் சொல்லலாம்.

   நம் நாட்டின் தொன்மைக்குச் சான்று கூறும் பண்டைக்காலக்  கோட்டைகள் பொலிவிழந்து நிற்கின்றன. அங்கே செல்வோர் சுவர்களில் கண்டதைக் கிறுக்கி வைக்கிறார்கள். புது தில்லி செங்கோட்டைச் சுவர்களில் வரையப்பட்டிருந்த மலர்களின் இடையிடையே பதிக்கப்பட்டிருந்த முத்து, பவழம் போன்றவற்றைத் தோண்டி எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த அழகான ஓவியங்கள் குழிகள் விழுந்து அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன. இது அப்பாவின் சட்டைப் பையிலிருந்து மகனே பணத்தைத் திருடுவது போன்றதாகும்.

   நீலகிரி மலை இரயில் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாகும். அதில் பயணிப்போரில் சிலர் பொறுப்பின்றி ஆபாசமான வார்த்தைகளை அந்த இரயில் பெட்டிகளில் எழுதியுள்ளதைப் பார்க்கும்போது மனம் வேதனை அடைகிறது. அவற்றைப் பார்க்கும்  வெளிநாட்டுப் பயணியர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

  உலகிலேயே அதிகமான யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ள பாரம்பரியச் சொத்துகள் நம் நாட்டில்தான் உள்ளன. அவற்றைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து அடுத்தடுத்தத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்பதை உணரவேண்டும். இளந் தலைமுறைக்கு உணர்த்தும் வகையில் பாடத் திட்டத்தில் இது குறித்தப் பாடங்களைச் சேர்த்துக் கற்பிக்க வேண்டும்.

   பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்களை நாள்தோறும் ஒளிபரப்புமாறு அனைத்து அரசு, தனியார்  தொலைக் காட்சிகளுக்கும் அரசு ஆணையிட வேண்டும். இது தொடர்பாக நடுவண் அரசும் மாநில அரசுகளும் கவனம் செலுத்துமா?
5 comments:

 1. கண்டிப்பாக ஒவ்வொருவரின் கடமை ஐயா...

  ReplyDelete
 2. பாரம்பரியச் சின்னங்களைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா
  நன்றி ஐயா

  ReplyDelete
 3. தெளிவான விழிப்புணர்வே இவை போன்ற கலைச்செல்வங்களைப் பாதுகாக்க உதவும். இவ்வாறான கலைச்செல்வங்களே நாட்டின் பெருமையைப் பேசுவன.

  ReplyDelete
 4. பாரம்பரியச் சின்னங்கள் தேசத்தின் சொத்துக்கள். அவற்றை அழிக்க நினைப்பவர்கள் இம்மண்ணின் அசலாக இருக்கமாட்டார்கள். தன்னை மனிதன் மறந்தாலும், மனிதன் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் பாரம்பரியச் சின்னங்கள் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பிம்பங்கள். பாரம்பரியச் சின்னங்கள் மனிதனின் வரலாறு.

  ReplyDelete
 5. பாரம்பரியச் சின்னங்கள் தேசத்தின் சொத்துக்கள். அவற்றை அழிக்க நினைப்பவர்கள் இம்மண்ணின் அசலாக இருக்கமாட்டார்கள். தன்னை மனிதன் மறந்தாலும், மனிதன் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் பாரம்பரியச் சின்னங்கள் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பிம்பங்கள். பாரம்பரியச் சின்னங்கள் மனிதனின் வரலாறு.

  ReplyDelete