Sunday, 19 April 2015

காணி நிலம் வேண்டும்


   மகாகவி பாரதியார் தன் வழிபடும் தெய்வமாம் பராசக்தியிடம் கேட்டவற்றை எல்லாம் எடுத்து எழுதினால் ஒரு நீண்ட பட்டியலாக மாறும். ஒரு கவிதையில் காணி நிலம் வேண்டும் என்று கேட்டார்.
ஒரு நண்பர் எத்தனை காணி என்று பாரதியார் குறிப்பிடாதது பற்றி வருத்தப்பட்டார்.

   பாரதியார் குறிப்பிட்ட காணி என்னும் சொல் ஒரு காணி இரண்டு காணி என்று நில அளவையைக் குறிப்பிடுவது அல்ல. காணி என்றால் உரிமை என்று பொருள். இந்தக் காணி நில ஆசை எனக்கும் உண்டு. ஒரு சிறிய கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்து விவசாயத்தில் அனுபவப்பட்டவன் என்பதால் இத்தகைய ஆசை இயல்பாகவே இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் வீடு கட்ட மனையிடம் வங்க நினைத்தபோது கரூர் நகரத்தில் குறைந்தது பத்து சென்ட் வாங்கிவிடவேண்டும் என்ற உறுதியோடு இருந்தேன். அவ்வாறே அமைந்தது. பாதி இடத்தில் வீடு மீதி இடத்தில் தோட்டம் என்பது என் திட்டமாக இருந்தது. இறையருளால் என் திட்டமும் நிறைவேறியது.

    சிமென்ட், மணல், ஜல்லி, ஓடு போன்ற கட்டுமானப்பொருள்கள் வருடக்கணக்கில் கிடந்ததால் தோட்டம் அமைப்பது எனக்குச் சவாலாகவே இருந்தது, தினமும் ஒருமணி நேரம் ஒதுக்கி ஒருமாத காலம் உழைத்தேன். ஓரளவுக்குப் பார்க்கும்படியாக கல்கட்டிகளை அப்புறப்படுத்தி இடத்தை சமன் செய்தேன். கூலியாள்களை வைத்துக்கொள்வதில்லை என்னும் முடிவோடு இருந்தேன்., இருக்கிறேன். முள்கம்பி வேலி அமைக்கும் பணியை மட்டும் வெளியாள்களிடம் விட்டேன்.

     என்ன பயிர் செய்யலாம் என நானும் என் துணவியாரும் யோசித்தோம். என்ன பயிர் செய்தாலும் உரத்தையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதில்லை என முடிவு செய்தோம். இது நம்மாழ்வாரின் நட்பினால் ஏற்பட்ட தாக்கமாகும்.

   முதலில் என் துணவியாருக்குப் பிடித்த மல்லிகை, ரோஜா செடிகளை நட்டேன். பிறகு கீரைப் பாத்திகளை அமைத்தேன். காய் கறி விதைகளையும் ஊன்றினேன். களை மண்டியது. வாரத்தில் அரைநாள் களை எடுக்க ஒதுக்கிவிடுவேன். எங்கிருந்தோ பூச்சிகள் வந்தன. ஒரு லிட்டருக்கு 2 மி.லி. வேப்பெண்ணெயைக் கலந்து தெளித்ததும் தீமை செய்யும் பூச்சிகள் ஒழிந்தன.

    பால் கொண்டு வந்து ஊற்றும் பாட்டியிடம் கேட்டு ஒரு வண்டி சாண எரு வாங்கி வைத்துக்கொண்டோம். ஆழமான குழி வெட்டி காய்கறி கழிவுகளை அதில் போட்டு மக்கச்செய்தோம். அக்குழியில் மண்புழுக்கள் பெருகி விரைவில் மக்கச் செய்கின்றன. குளியலறை, சமையலறை கழிவு நீரைத் தோட்டத்தில் பாய்ச்சுவதில்லை. கழிவு நீரில் அள்ள நச்சு, விளையும் காய்கறிகளில் இருக்கும் எனப் படித்திருக்கிறேன்.

    இருபது அடிக்கு ஒன்று என இரு தென்னம்பிள்ளைகளை நட்டேன். சற்று தூரத்தில் கொய்யா கன்றை நட்டேன். கொஞ்சம் தள்ளி சப்போட்டா ஒன்று. ஒரு பங்கனப்பள்ளி மாங்கன்று.  நண்பர் தங்ககுமார் ஒரு மாதுளம் செடியை அன்பளிப்பாக வழங்கினார். அது இப்போது முதல் அறுவடைக்குத் தயாராக உள்ளது. ஓரக்கால்களில் நட்ட வாழைக் கட்டைகள் மரமாகி தார் போட்டுள்ளன.

    சுண்டைக்காய், முருங்கைக்காய் ஏராளமாய் காய்க்கின்றன. புடலையும் பால்பீர்க்கனும் பறித்து மாளவில்லை. வேலி ஓரத்தில் நடப்பெற்ற அகத்தி, மரங்களாகிவிட்டன. அகத்திப் பூ பொரியல் அட்டகாசம்.

    சோற்றுக்கற்றாழை, தூதுவளை, முடக்கத்தான், புளிச்சை, கொத்துமல்லி, பசளை போன்ற மூலிகைகளுக்கும் பஞ்சமில்லை. ஏழைக்கு ஒரு அவரை என்பார்கள். தெரியாமல் ஐந்து விதைகளை ஊன்ற பந்தல் முறியும் அளவுக்குக் காய்ப்பு.

   சுரையும் பூசணியும் காய்த்துத் தள்ளின. ஒரு அரி நெல்லி மரம், ஒரு பப்பாளி மரம். மிளகாய், கத்தரி, கொத்தவரை, புதினா, பாலக்- இவைகளும் செழித்து நிறைந்த பலன்கொடுக்கிறது
.
  இங்கு விளையும் அனைத்தையும் அக்கம்பக்கத்தார், உறவினர் அனைவருக்கும் கொடுத்து மகிழ்கிறோம். விருந்தினர் வந்தால் என் மனைவி இயற்கை முறையில் விளைந்த இவற்றை விதவிதமாகச் சமைத்துப் பரிமாறி மகிழ்வாள்.

   ஒருமுறை என் இனிய நண்பர் இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு முத்து அவர்கள் எங்களுடன் உணவருந்தி வெகுவாகப் பாராட்டினார்.      
மேலும் வித விதமான பறவைகள் வந்து கொஞ்சிக் குலவுவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. குறிப்பாக அருகிவரும் சிட்டுக்குருவிகள் கூடுகள் கட்டி வாழுகின்றன.

   என் மனைவிக்கும் பூ பறிப்பது, கீரை பறிப்பது என பொழுது பயனுள்ளதாக கழிந்தது. இப்போது அவள் அமெரிக்காவிலுள்ள பெரிய மகள் வீட்டுக்குச் சென்றுள்ளாள். தொலைபேசியில் பேசும்போது தோட்டம் பற்றிதான் அதிகமாக விசாரிப்பாள். நானும் அவ்வப்போது படங்கள் எடுத்து கட்செவி அஞ்சல்(Whatsapp) மூலம் அனுப்புவேன்.

 தினமும் நெற்றி வேர்வை நிலத்தில் விழ வேலை செய்வதால் என் உடலை இளமை நலம் குன்றாமல் காக்க முடிகிறது. இதுதான் தோட்டம் அமைத்ததன் பெரும்பயனாகும்
.

        

4 comments:

 1. வீட்டுத் தோட்டம்
  உண்மையிலேயே பயனுள்ள தோட்டம்தான் ஐயா
  காணி என்றால் உரிமை
  அறிந்து கொண்டேன்
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. பதிவில் ஒரு தடம் பதித்தீர்
   நன்றி

   Delete
 2. Literally this is sweating for our own food :) which also makes the food taste even better
  Gardening is the best exercise!!

  ReplyDelete
 3. அருமையான ஊக்கம் கொடுக்கும் பதிவு. மிக்க நன்றி.

  ReplyDelete