Tuesday 22 November 2016

வண்ணத்துப் பூச்சிகள் வாழ்க

 
 உறவினர் வீட்டுக் குழந்தையின் காது குத்து விழாவிற்குச்சென்றிருந்த நாங்கள் அருகிலிருந்த வண்ணத்துப் பூச்சிப் பூங்காவிற்கும் சென்றோம். ஒரு வேலையாகச் செல்லும்போது இன்னொரு வேலையையும் சேர்த்து முடித்து விடுவது என்பதில் நான் குறியாக இருப்பேன். இந்த நுணுக்கத்தை எனக்குச் சொல்லித் தந்தவர்  திருவள்ளுவர்.

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று 
என்பது எனக்கு மிகவும் பிடித்தக் குறளாகும்.



   ஸ்ரீரங்கத்திலிருந்து காவிரிக் கரையோரமாகவே பயணித்தால், எட்டாவது கிலோமீட்டரில் மேல் அணைக்கட்டு காப்புக்காடு என்னும் சிற்றூர் கண்ணில் தென்படும். அங்குதான் வண்ணத்துப் பூச்சிப் பூங்கா அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து காரில் சென்றோம். நான் மெதுவாகவே காரைச் செலுத்தினேன். சாலையின் இருபுறமும் கிடுகிடு பள்ளம்! சாகசப் பயணம்தான் போங்கள். அரை மணி நேரம் ஆயிற்று; திரும்பும்போது பதினைந்து நிமிடமே ஆனது.

   
விரைந்து அழிந்து வரும் பூச்சியினங்களில் வண்ணத்துப் பூச்சியும் அடங்கும். அதனுடைய கண்களில் 600 லென்சுகள் உள்ளன! 165000 வகை வண்ணத்துப் பூச்சிகள் இருந்ததாக அறிவியலார் கணக்கிட்டுள்ளனர்! இப்போது எஞ்சியிருப்பவை சில வகை வண்ணத்துப் பூச்சிகளே. அவற்றைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லாவிட்டால் நமக்குப் பூவா கிடைக்காது; புரியவில்லையா? மகரந்தச் சேர்க்கை எதுவும் நடக்காது; அதனால் உண்ண உணவு கிடைக்காது. எனவே இப்படி ஒரு பூங்காவை அமைக்க வேண்டும் என யோசனை கூறியவர்களைப் பாராட்டுவோம்.


    13.11.2015 அன்று தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்களால் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. பல்வகைச் செடிகளும் பச்சைப் பசேலென்று காட்சி அளிக்கின்றன. குடி நீர், கழிப்பறை வசதிகள் நன்றாக உள்ளன. பரந்த வாகன நிறுத்துமிடம் வசதியாக இருக்கின்றது. ஆனால் மிதிவண்டிக்குக் கூட கட்டணம் செலுத்தியாக வேண்டும்.

    பூங்காவில் ஆங்காங்கே சிறு  குடில்களை அமைத்துள்ளார்கள். வுருவோர் போவோர்க்கு முதுகைக் காட்டியபடி இளசுகள் கிசுகிசுத்துக் கொண்டிருக்கின்றன. பிள்ளையார் பிடிக்க குரங்காய் வந்த கதைதான்.

    நானும் என் மனைவியும் அரை மணி நேரமாக வண்ணத்துப் பூச்சிகளைத் தேடி அலைந்தோம்; தேன் பூச்சிகள் கூட தென்படவில்லை. ஆங்காங்கே வண்ணத்துப் பூச்சிகளின் ஓவியங்களையும், சிலைகளையும் வைத்திருந்தார்கள்! கடைசியில் சில மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சிகள் பறந்து சென்றதைப் பார்த்தோம்.

   ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் பறக்க, நடுவிலே நாங்கள் நடக்கலாம் என்னும் கற்பனையோடு சென்ற எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆனாலும் நம்பிக்கை உள்ளது. ஓராண்டுதானே ஆகிறது. இன்னும் சில ஆண்டுகளில் வண்ணத்துப் பூச்சிகள் வந்து சிறகடிக்கும் என எதிர்பார்க்கலாம். என்ன நம்மவர்க்குத் தொடக்கத்தில் உள்ள ஆர்வம் தொடர்ந்து இருப்பதில்லை. இப் பூங்கா தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பது எங்களைப் போன்ற சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் ஆசை.

     இப் பூங்காவிற்கு வாகன  வசதி உள்ளோர் மட்டுமே செல்ல முடியும். பேருந்து வசதி எதுவும் இல்லை. பேருந்துகள் செல்லமுடியாத குறுகிய சாலையாக உள்ளது. அரசு நினைத்தால் ஆவன செய்யலாம்.

    சாலையின் எந்த இடத்திலும் பூங்கா குறித்த வழிகாட்டி விவரம் இல்லை. யாரையாவது நிறுத்திக் கேட்கலாம் என்றால் ஆள் அரவமே இல்லை. சூழல் ஆர்வலர்கள் முன்வந்து இப் பணியைச் செய்தால் புண்ணியமாய்ப் போகும்.


     எது எப்படியோ, திருச்சிக்குச் செல்வோர், ஸ்ரீரங்கம் செல்வோர் ஒரு எட்டு வண்ணத்துப் பூச்சிப் பூங்காவிற்கும் சென்றுவரலாம்.

6 comments:

  1. எங்களது அடுத்த பயணத்தில் இந்த பூங்காவிற்கு அவசியம் செல்வோம். பார்க்க ஆசைப்பட்டேன். உங்கள் பதிவு அந்த ஆசையை மேம்படுததிவிட்டது.

    ReplyDelete
  2. ஆகா...!

    வள்ளுவரும் துணைக்கு வந்து விட்டார்...

    ReplyDelete
  3. எங்களது அடுத்த பயணத்தில் இந்த பூங்காவிற்கு அவசியம் செல்வோம்

    ReplyDelete
  4. கானல் நீர் கவின் நீராகட்டும் நீதிபதி மூ. புகழேந்தி

    ReplyDelete
  5. ஐயா, நிலங்களை ஐந்தாகப்பிரித்து அதன் அருமை பெருமைகளைப் பாடி, வரலாற்று சாதனைகளை செய்து, இயற்கையோடு இணைந்து வாழ்ந்த ஒரே இனம் தமிழினம். இன்று அந்நிய மொழி மற்றும் கலாச்சார மோகத்தால் வாஸ்து என்ற பெயரில் இயற்கை வளங்களை பாரபட்சம் இன்றி அழித்துவருகிறோம். மின்மினிப்பூச்சி முதல் பொன்வண்டு வரை பார்த்து பிடித்து விளையாடிய நாட்கள் என் தலைமுறையோடு போய்விட்டதை தினமும் நினைந்து வருந்துகிறேன். கலப்பை, எருது உழவுகலாச்சாரம் காணாமல் போய்விட்டது. உங்கள் பதிவு என்னை இயற்கையை காக்கும் செயலுக்குத் திசை திருப்பியிருக்கிறது.

    ReplyDelete
  6. சுற்றுச்சூழல் குறித்த அருமையான பதிவு. மனிதன் தோன்றுவதற்கு முன்பு எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. காடுகளை அழித்து கழனிகள் ஆக்க்குகிறேன் என ஒவ்வொரு சூழலையும் அழித்து வருகிறான் மனிதன். சங்கிலித்தொடர் முறை சுழற்சி வாழ்கை தான் மனிதனுடையது. ஒன்றை அழித்தால் ஒன்றை இழக்கிறான் என அர்த்தம். சின்னஞ்சிறு பூச்சிகள் முதல் நிலத்தில் வாழும் பெரிய விலங்கான யானை வரை மனிதனுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவும் வகையில் தான் படைக்கப்பட்டுள்ளது. பூச்சி இனங்கள் மகரந்தச்சேர்க்கையின் வாயிலாக உணவுப்பொருட்களை உருவாக்கக் காரணமாகின்றன. விலங்கினங்கள் காய், கனிகளை உண்டு அதன் விதைகளை சாணத்தின் வாயிலாக வெளியேற்றி மிகப்பெரிய விதைப்பரவல் செய்து மீண்டும் தாவரங்கள் உருவாகத் துணை புரிகின்றன். பறவைகள் விலங்குகள் மிகச்சிறந்த விதை நேர்த்தி செய்யக்கூடியவை. ஓரறிவு உயிர் முதல் ஐந்தறிவு பெற்ற விலங்கினங்கள் வரை அனைத்தும் மனிதனுக்கு உதவுபவையே! ஆனால் மனிதன் “நுனிக்கொம்பேறி அடி மரத்தை வெட்டுவதைப் போன்று” சூழலியலை அழித்து வருகிறான். நீர் மாசு, நில மாசு, காற்று மாசு, ஒலி மாசு மற்றும் நெருப்பின் மூலமாக நெகிழிகளை எரித்து “டையாக்ஸின்” என்ற வாயுவை உண்டாக்கி புற்றுநோயை உருவாக்கக் காரணமாகிறான். ’தா’வரம், இது இல்லை என்றால் தாங்கள் கூறியது போல் “புவ்வா” கிடைக்காது. பட்டாம்பூச்சிப் பூங்கா அமைத்தவர்கள் அதற்கு வழி அமைத்தார்களா? பெயர் பலகை வழிகாட்டி அமைத்தார்களா? எல்லாமே காணொளிக் காட்சி தானோ!. ஊர்க்குருவிகள் அழிந்து வரும் நிலையில் உள்ளது போன்று, பட்டாம்பூச்சிகளும் இப்படித்தான் இருக்கும் என எதிர்காலச் சந்ததியினருக்கு “பட்டாம்பூச்சிச்சிலை”களை மனிதன் உருவாக்கி விடுவான்.
    பட்டாம்பூச்சிகள் பூங்கா குறித்த விவரங்களைத் தெரிவித்துள்ளீர்கள். கண்டிப்பாக அவசியம் சென்று பார்க்கக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளீர்கள். நன்றி!
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கரூர்-5

    ReplyDelete