Friday, 30 December 2016

ஒருத்தி இராணுவமாய் ஒரு தமிழ்ப்பெண்

   அன்பு மகள் அருணாவுக்கு,
       இன்று உன்னுடைய பிறந்தநாள். கணவன் மனைவி என்று இருந்த எங்களைப் பெற்றோர் என்னும் பெரும் பேற்றினை நீ பெறச் செய்த நாளும் இதுதான்! உனக்கு எங்கள் இதயம் நிறைந்த  பிறந்தநாள் வாழ்த்துகள்.

Saturday, 24 December 2016

அங்கே அப்படி! இங்கே இப்படி!

   ராம் மோகன ராவ் ஆந்திராக்காரர் என்பதால் பாரதியின் பாடல் வரியை அறிந்திருக்க வாய்ப்பில்லை,

Tuesday, 20 December 2016

குருவை மிஞ்சிய சீடன்

   பண்டைக் காலத்து குருகுல ஆசிரியர்கள் ஞானக் களஞ்சியமாகத் திகழ்ந்தவர்கள். தம்மிடத்தில் குருகுல வாசம் செய்த சீடர்களையும் ஞானவான்களாக மாற்றினார்கள். இது உ..வே.சாமிநாதய்யர் காலம்வரை தொடர்ந்தது. அன்றைய குரு சீடர் அதாவது ஆசிரியர் மாணவர் உறவு அவர்தம் இறுதி மூச்சுவரை தொடர்ந்தது.

Saturday, 10 December 2016

அணையா விளக்கு அணைந்தது

     குலோத்துங்கன் என்னும் அணையா விளக்கு இன்று அணைந்துவிட்டது. கரூரை மனத்தில் நினைத்தால் உடனிகழ்வாக அறிஞர் வா.செ.கு அவர்களைப் பற்றிய நினைவும் எழும். குலோத்துங்கன் என்னும் புனைபெயர் கொண்ட வா.செ.கு. அவர்கள் கரூரை அடுத்த வாங்கலாம்பாளையத்தைச் சேர்ந்தவர்.

     கரூர் நகர்மன்றப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகரற்ற புலமை பெற்று, பின்னாளில் உலகப் பேரறிஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

     மரபுக் கவிதை உலகில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உலா வந்தவர். சங்கப் புலவர்க்கு இணையாகப் பா புனையும் வல்லமை உடையவர்.
பதச் சோறாக நான்கு வரிகள்:

இயலும் என்பவர்க் கெதுவும் அரிதல
எழுந்து நிற்பவர்க் கிமயம் தடையல
முயலும் மானிடன் முடிவு காணுவன்
முன்னர் தோற்பினும் பின்னர் வெல்லுவன்.

   “குலோத்துங்கனின் கவிதைகள் எளிமை, தெளிவு, செறிவு, இனிமை, ஆழம்,அழகு, நடைப்பொலிவு ஆகியவற்றைக்கொண்டு செவிநுகர் கனிகளாக உள்ளன.” என்று டாக்டர் கா.மீ. கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை குலோத்துங்கன் கவிதைகளைப் படித்தோர் உணர்வர்.

      கவிதைக் கலையில் கரைகண்ட வா.செ.கு அவர்கள் கட்டுரை எழுதுவதில் திருவள்ளுவருக்கு நிகரானவர். அவருடைய கட்டுரையில் ஒரு சொல்லை எடுக்கவும் முடியாது; மாற்றவும் முடியாது. வரும் கட்டுரைகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் பதிப்பிக்கும் தினமணி வா.செ.கு கட்டுரைகளை வாரந்தோறும் நடுப்பக்கத்தில் வெளியிட்டதே அவர்தம் எழுதும் திறனுக்குச் சான்றாகும்.

     தமிழ் செவ்வியல் மொழியாக அறிவிக்கக் காரணமாயிருந்தவர்களில் வா.செ.கு. அவர்கள் முக்கியமானவர் என்பது சிலருக்கே தெரியும். தமிழுக்கு உள்ள செவ்வியல் மொழிக்கான தகுதிப்பாடுகளை சான்றாதாரங்களுடன் நிறுவியவரே அவர்தான்.

    தமிழை இணையத் தமிழ் என்னும் அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுத்தவரும் வா.செ.கு அவர்கள்தான்.

     வள்ளுவத்தில் ஆழங்காற்பட்டவர் வா.செ.கு என்பது அவர் எழுதிய வாழும் வள்ளுவம் என்னும் நூலைப் படித்தோருக்கு மட்டுமே தெரியும். The Immortal Kural என்று அவர் எழுதிய ஆங்கில நூல் குறளின் பெருமையை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த நூலை எழுத்தெண்ணிப் படித்தவன் என்ற முறையில் இதை நான் உறுதியாகக் கூறமுடியும்.

    வா.செ.கு. அவர்களை நான் பதினேழு ஆண்டுகளாக அறிவேன். நான் முன்னர்த் தலைமையாசிரியராகப் பணியாற்றிய கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா 1998இல் நடந்தபோது அவரை முக்கிய விருந்தினராக அழைத்து வந்தேன். அதற்குப் பிறகு சென்னை செல்லும்போதெல்லம் நான் அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். 2004 முதல் கரூரில் நடக்கும் வா.செ.கு அறக்கட்டளை நிகழ்த்தும் மாணவர்களுக்கானப் பாராட்டு விழாவில் பங்கேற்று டி.என்.பி.எல். பள்ளி முதல்வர் என்ற முறையில் அவரிடமிருந்து பரிசும் பாராட்டும் பெற்றதை இன்று கண்ணீர் மல்க நினைத்துப் பார்க்கிறேன்.

    அவர் வாழ்த்தொப்பம் இட்டுத் தந்த அவருடைய நூல்களை என் இல்ல நூலகத்தில் வைத்துப் பொன்னேபோல் போற்றிவருகிறேன்.

     கரூரின் இலக்கிய அடையாளமாகத் திகழும் வா.செ.கு அவர்களுடைய புகழ் திருக்குறள் போல் இந்த உலகில் என்றும் நிலைத்து நிற்கும்.

Saturday, 3 December 2016

பூங்காவில் பூக்கும் குறள் பூக்கள்

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை தியாகராய நகரில் வசித்த என்  சம்பந்தி இல்லத்திற்குச் சென்றிருந்தேன். காலை தேநீர் அருந்தியதும் சம்பந்தி இருவரும் நடைப் பயிற்சிக்குப் புறப்பட்டனர்; நானும் அவர்களோடு நடந்தேன்.

   அந் நகரின் ஒரு பகுதியில் இருந்த நடேசன் பூங்காவிற்குச் சென்றோம். இரண்டு மூன்று சுற்றுகள் நடந்தபின் பூங்காவின் ஓர் இடத்தில் இருந்த சிறு குடிலுக்கு அழைத்துச் சென்றார்கள். ஓடுகள் வேயப்பட்ட அந்த அழகான குடிலில் ஒரு தரைவிரிப்பில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தனர். என் சம்பந்தியரை உற்சாகம் பொங்க ஒருவர் வரவேற்றார்; நானும் அறிமுகமானேன்; அமர்ந்தோம். என்ன நடக்கிறது என்பதை ஆவலோடு கவனித்தேன்.

    ஒருவர் பேட்டரியில் இயங்கும் ஒலிபெருக்கியை அமைத்து ஒலிவாங்கியில் பேசி ஒலியளவைச் சரிபார்த்தார். அங்கே மற்றொருவர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் பெயர் தொலைபேசி விவரத்தை எழுதி வாங்கினார். சற்று நேரத்தில் மேலும் ஏழெட்டுப் பேர் வந்து சேர்ந்தனர். எங்களை வரவேற்ற மனிதர் எழுந்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நொடிக்கு ஒரு குறளை மேற்கோள் காட்டிப் பேசியது வியப்பாக இருந்தது. சுருக்கமாகப் பேசிவிட்டு ஒவ்வொருவராகப் பேச அழைத்தார். அவரவர் சொல்ல விரும்பியதைச் சொன்னார்கள். சிலர் ஆற்றொழுக்காகப் பேச, சிலர் தயங்கித் தயங்கிப் பேசினார்கள். ஒருவர் பேசி அமர்ந்தால், அந்த மனிதர் எழுந்து பேசியவரைப் பாராட்டி, கூடுதல் விளக்கமும் தந்தார். என்னையும் அழைத்தார்; பேசினேன்.  

   இப்படி அங்கே வந்திருந்த அனைவரையும் அவர் பேச வைத்து அழகு பார்த்தார். ஏராளமான பயனுள்ள தகவல்கள் கிடைத்தன. இப்படியாக ஒவ்வொரு ஞாயிறன்றும் இக் கூட்டத்தை நடத்துகிறார். ஒரு மாதமன்று; ஒரு வருடமன்று; கடந்த பதினான்கு ஆண்டுகளாக   நடத்திவருகிறார். இதில் பேசிப் பழகிய பலரும் இன்று பட்டிமன்றங்களில் பேசுகிறார்கள்! இவர் நடத்தும் இந்த அமைப்புக்குப் பெயர் திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம்.

    சென்றவாரம் ஒரு வேலையாக சென்னைக்குச் சென்றிருந்தேன். கீழ்ப்பாக்கத்தில் என் சகலை இல்லத்தில் தங்கினேன். ஞாயிற்றுக் கிழமை காலை தேநீருக்குப் பிறகு நடைப்பயிற்சியைத் தொடங்கினேன். நான் எந்த ஊருக்குச் சென்றாலும் எந்த நாட்டிற்குச் சென்றாலும் காலை நடைப்பயிற்சியைத் தவறாமல் செய்வேன். அந்த வகையில் அன்று ஓட்டேரி மூலிகைப் பூங்காவிற்குச் சென்றேன். அங்கேயும் ஒரு குடில்; ஒரு ஒலிபெருக்கி; ஒரு தரை விரிப்பு. அப்போது மணி காலை 7.25. இருவர் மட்டுமே வந்திருந்தனர். நான் மூன்றாவது ஆள். ஒரு நோட்டுப்புத்தகத்தில் பெயர் எழுதி கையொப்பம் இட்டேன்.

    சரியாக 7.30 மணிக்கு திரு.வேலுசாமி என்பார் எங்களை வரவேற்றுப் படு உற்சாகமாகப் பேசினார். பேச்சின் நடுவே குறட்பாக்கள் வந்து உதிர்ந்தன. சிறிது நேரத்தில் ஐவர், பிறகு எழுவர் என வந்த வண்ணம் இருந்தனர். ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட்ட்னர். ஒருவர் குறள் விளக்கம் தந்தார்; இன்னொருவர் இயற்கை உணவு குறித்துப் பேசினார். மற்றொருவர் உணவு வீணாவது குறித்து விளக்கினார். மகழ்ச்சியாக வாழ்வதற்குச் சில உளவியல் வழிமுறைகள் குறித்து நான் பேசினேன். குறித்த நேரத்தில் கூட்டம் முடிந்தது.

    அங்கே குடிலுக்கு வெளியே தொங்க விடப்பட்டிருந்த பதாகையைப் பார்த்ததும் எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. நடேசன் பூங்காவில் பார்த்த அந்த மாமனிதரின் பெயர் அதில் இருந்தது. அவர் நிறுவிய  திரு.வி.க. பயிலரங்கம் இன்று பதினேழு கிளைகளைப் பரப்பி நிற்கின்றது.
     ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் நாள் திரு.வி.க.வின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். விழாவின்போது தமிழ் ஆர்வலர் ஒருவருக்குத் தமிழ்ப்பெரியார் திரு.வி.க.விருது என அளிக்கிறார்கள். 

 “சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்’ என்னும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப நூற்றுக் கணக்கானவர்களுக்குப் பேச வாய்ப்பளித்து, பயத்தை நீக்கி, பயனுள்ளவற்றைப் பேசவைக்கும் முயற்சியில் பெரிய வெற்றி கண்டுள்ள அவரை மனதார வாழ்த்துகிறேன்.

 அந்த மாமனிதரின் பெயர்  முனைவர் திருக்குறள் பா.தாமோதரன். இவர் ஒரு வழக்கறிஞர். இவருக்கு 1330 குறட்பாக்களும் மனப்பாடம். வள்ளுவர் சொல்லும் உள்ளூரில் உள்ள பயன்தரு மரமாக, ஊர் நடுவே உள்ள ஊருணியாக வாழ்வாங்கு வாழ்கிறார்.

   ஒன்றுமட்டும் உண்மை. விருதுகளை எதிர்பார்க்காமல் விழுதுகளைப் பரப்பிவருகிறார்.