Friday, 14 April 2017

ஹேவிளம்பி

அன்பு மகள் அருணாவுக்கு,
  நலம். நலமே சூழ்க. இன்று பிறந்திருக்கும் தமிழ்ப்புத்தாண்டு ஹேவிளம்பி என்பதாகும். இந்த ஹேவிளம்பி ஆண்டுக்குத் தனிச் சிறப்புண்டு என்பது உனக்குத் தெரியுமா?

    உன் தாத்தா அருணாசலம் அவர்கள் 120 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஹேவிளம்பி ஆண்டு சித்திரை மாதத்தில்தான் அதாவது 1897 ஆம் ஆண்டு ஏப்ரலில் பிறந்தார். அவர் இன்று நம்முடன் வாழ்ந்திருந்தால் அவருக்கு 120 வயது ஆகியிருக்கும்.

     அவர் ஒரே பிள்ளை. இளமையிலேயே தந்தையை இழந்து வறுமையில் வாடினாலும் உழைப்பில் நம்பிக்கை வைத்து அயராது பாடுபட்டு, ஈட்டிய குறைந்த வருவாயிலும் தன் தாயைப் பசிப்பிணி தாக்காமல் பார்த்துக்கொண்டார்.

      அந்தக் காலத்தில் சட்டப்படியான திருமண வயது ஆணுக்குப் பதினெட்டு, பெண்ணுக்குப் பதினாறு என்பதாக இருந்தது. ஆனால் உன் தாத்தாவுக்கு வயது முப்பத்து இரண்டு ஆகியும் திருமணம் ஆகவில்லை. ஆடு மாடு மேய்த்துப் பிழைத்த இளைஞன் என்பதால் யாரும் பெண் தரவில்லை போலும்.

         ஒருவழியாய் தான் சேமித்தப் பணத்தில் கால் காணி நிலமும் ஒரு கலப்பையும் இரண்டு மாடுகளும் வாங்கி ஒரு குறு விவசாயி என்னும் தகுதியைப் பெற்றார். வியர்வை சிந்தி உழைத்ததால் கால் காணி அரை காணி ஆனது. தன் முப்பத்து நான்காம் வயதில் மீனாட்சி என்னும் மங்கை நல்லாளைக் கரம்பிடித்தார். விதி யாரை விட்டது? இரண்டாண்டுகள் கூட அவர்தம் மணவாழ்க்கை நீடிக்கவில்லை. அந்த மாதரசி தீரா நோய்வாய்ப்பட்டு மாண்டுவிட்டார்.

       தொடர்ந்து அம்மாவும் பையனும் அல்லும் பகலும் அயராது உழைத்து ஐந்து காணி நிலத்தை வாங்கும் நிலைக்கு உயர்ந்தார்கள். மீண்டும் திருமணம் செய்துகொள்ள தாயார் வற்புறுத்தினார்.

       சீர்காழிக்கு அருகில் இருப்பது கொட்டாயமேடு கிராமம். அங்கே ஓர் எளிய வேளாண் குடும்பம்; ஓர் ஆண் குழந்தை மூன்று பெண் குழந்தைகளைக்கொண்ட குடும்பம் அது. காலாகாலத்தில் முதல் இரு பெண்குழந்தைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது பெண் பேரழகின் பெட்டகமாக இருந்தும், வயது பதினெட்டு ஆகியும் வரன் அமையவில்லை. வந்து பெண் கேட்டவர்கள் எல்லாம் மணக்கொடை பெறுவதில்தான் குறியாக இருந்துள்ளார்கள். ஒருகட்டத்தில் கிறித்துவ மடாலயத்தில் கொண்டு சென்று விட்டுவிடலாம் என்றுகூட ஏற்பாடு செய்தார்களாம்.

    அந்தச் சமயத்தில்தான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. “பெண் கொடுத்தால் போதும் எந்தச் சீரும் வேண்டாம்” என்னும் முன்னுரையோடு ஒருவர் வந்து பெண் கேட்டார். அவர்தான் உன் தாத்தா அருணாசலம். பெண்ணைக் கொடுப்பது என முடிவாயிற்று. ஆனால் அங்கும் ஒரு சிக்கல் முளைத்தது. பெண்ணின் அண்ணன் வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்க ஆரம்பித்து விட்டார். இரண்டாம் தாரமாகத் தருவதை அவர் எதிர்த்தார். பிறகு ஊர்ப்பெரியவர் சிலர் தலையிட்டுத் திருமணத்தை உறுதி செய்ய, கொட்டாயமேடு பெண்வீட்டில் திருமணம் நடந்தேறியது. அப்போது உன் தாத்தாவுக்கு வயது நாற்பத்தொன்று.. உன் பாட்டி தேசம்மாளுக்கு வயது பதினெட்டு. திருமணம் நடந்த ஆண்டு 1938.  
  
  அடுத்த இரண்டு ஆண்டுகளில் உன் பெருமாள் பெரியப்பா பிறந்தார். (4.11.1940) அடுத்த ஐந்தாண்டுகளில் கிருஷ்ணன் பெரியப்பா பிறந்தார். ஏழாண்டுகள் கழித்து நான் பிறந்தேன்(24.12.1952). நான் பிறந்தபோது உன் தாத்தாவுக்கு வயது 55. உன் பாட்டிக்கு வயது 32. நான் அவர்களுக்குக் கடைக்குட்டி. எங்களுக்கு இடையிலே ஆறு குழந்தைகள் (ஐந்து ஆண் ஒரு பெண்) பிறந்து இறந்தன என்பது சோகத்திலும் சோகம்.

     உன் பாட்டி வந்த யோகத்தில் ஊரில் பெரும் செல்வந்தரானார் உன் தாத்தா. கும்பகோணம் அரசு கல்லூரியில் உன் பெரியப்பாவைப் படிக்க வைக்கும் அளவுக்கு வளமையாக வாழ்ந்தார்.  அவர் தன் அறுபத்து ஐந்தாம் வயதில் நுரையீரல் தொற்று காரணமாக இயற்கை எய்தினார்(12.11.1962). அப்போது நான் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அவருடைய மறைவுக்குப் பிறகு உன் பாட்டியின் வழிகாட்டுதலில், பெரியப்பாவின் நிதி ஆதரவில் கிருஷ்ணன் பெரியப்பாதான் குடும்பத்தை நிர்வகித்தார். 

     அரசு எடுத்த ஒரு தவறான கொள்கை முடிவு காரணமாக நம் விவசாய நிலங்கள் பாழ்பட்டன. விளைச்சல் குறைந்தது. குடும்பத்தில்  வறுமை தலை காட்டியது. பிறகு நாங்கள் எப்படித் தப்பிப் பிழைத்தோம் என்பது தனிக்கதை. அதை அடுத்தடுத்த மடலில் எழுதுவேன்.

   உனக்கும் மாப்பிள்ளைக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

என்றென்றும் பாசத்துடன்,
அன்புமிக்க உன் அப்பா.

     

3 comments:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

  மடல் வழி ஒரு வரலாறு
  தொடரட்டும் ஐயா

  ReplyDelete
 3. இன்றும் நம்மை மேலிருந்து வாழ்த்திக்கொண்டிருக்கும் தாத்தா பாட்டிக்கு அன்பு வணக்கங்கள்

  ReplyDelete