Wednesday 14 June 2017

பெரிதினும் பெரிய பேரங்காடிகள்

      முந்தைய பதிவு ஒன்றில் இலங்கைத் தமிழர் அங்கதன் என்பவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவர் பணியாற்றுவது சௌத் ஆசியன் மார்க்கெட் என்னும் சிற்றங்காடி. இப்போது நான் கூறப்போவது ஒரு பேரங்காடியைப் பற்றி.

    இது ஒரு காலத்தில் என் மகள் பகுதி நேர ஊழியராகப் பணியாற்றிய இடமும் கூட. இது ஒரு பெரிய கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்தது. அதுதான் கடைசித் தளமும் ஆகும். இந்த அங்காடிக்கு முன்னால் இருந்த வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்தினாள் என் மகள்.

   அங்கே எழுநூறு கார்களை நிறுத்தலாம். ஒவ்வொரு தளத்திலும் பேரங்காடி வளாகமும் எழுநூறு கார்கள் நிறுத்த இடவசதியும் கொண்டது இந்த பே ஷோர்(Bay Shore) என்னும் பெருங்கட்டடம்.

    ஒரு குழந்தை கூட காரை ஓட்டிச்செல்லத் தக்கவகையில் அகன்ற சிமெண்ட் சாலை அதிக சாய்மானம் இல்லாமல் அழகாக வளைந்து வளைந்து செல்லும்படி அமைந்துள்ளது. மேலே போகவும் கீழே இறங்கவும் தனிச் சாலைகள் இருக்கின்றன. கார் நிறுத்தத்தில் காலியிடம் உள்ளதா என்னும் விவரம் தரைத் தள முகப்பிலேயே தெரிந்துகொள்ளும் வசதி உள்ளது.

 
நாங்கள் பொருள்கள் வாங்கச் சென்றது ஐந்தாம் தளத்தில் உள்ள வால்மார்ட்(Wal Mart) என்னும் பன்னாட்டுப் பேரங்காடியாகும். அங்காடிக்கு முன் பகுதியில்  வெற்றிலை அடுக்கப்பட்டிருப்பது போல வரிசையாய் நின்ற தள்ளு வண்டிகளில் ஒன்றை எடுத்துத் தள்ளிக்கொண்டு நாங்கள் மெல்ல நகர, பெரிய கண்ணாடிக் கதவுகள் தாமாக விலகி உள்ளே செல்ல வழி விட்டன.

   
உள்ளே உடலுக்கும் மனத்துக்கும் இதமான குளிர் நிலவியது. பன்னாட்டுக் குடிமக்கள் பல்வேறு வண்ண உடைகளில் பவனி வந்து கொண்டிருந்தார்கள். ஆண்கள் சிலராகவும் பெண்கள் பலராகவும் இருந்தனர். அந்தப் பெண்களின் பணச் சிக்கனம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் உடைச் சிக்கனம் உடையவர்கள் என்பது மட்டும் அவர்கள் அணிந்திருந்த உடைகளிலிருந்து அறிய முடிந்தது.

   நாமே தெரிந்து கொள்ளும் வகையில் எந்தெந்தப் பொருள்கள் எப்பகுதியில் உள்ளன என்பதை ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார்கள். பொருள்களும் அழகுற அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. விலை, காலாவதி நாள் முதலியவை தெளிவாக பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளன. உண்ணும் பருகும் உணவுப் பொருள்களில் அடங்கியுள்ள உள்ளீடு சரக்குகள்(ingredients) எவை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

   
தக்காளிப் பழங்களை எடுக்குமுன் ஒருகணம் கைப்பேசியை நோக்கினாள். அவளுடைய கைப்பேசியில் ஃபிலிப் என்னும் ஒரு செயலி(app) உள்ளது. நகரில் எங்காவது வால்மார்ட்டை விட குறைவான விலையில் கிடைக்கிறதா என்பதை அச் செயலி ஒப்பிட்டுச் சொல்லிவிடும். குறைவான விலையில் வெளியில் கிடைப்பதை உறுதி செய்தால், அந்த விலைக்கே பில் போடுவார்கள்! உங்களால் மட்டுமன்று என்னாலும் நம்பமுடியவில்லை!

    வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு குறியீட்டெண் கொடுத்துவிடுகிறார்கள். ஆண்டு முழுவதும் நாம் வாங்கும் பொருள்கள் எவை, விரும்பி அடிக்கடி வாங்கும் பொருள்கள் எவை, எத்தனை முறை பொருள்களைத் திருப்பிக் கொடுத்து வம்பு வழக்குச் செய்துள்ளோம் என அனைத்து விவரங்களையும் வகுத்தும் தொகுத்தும் வைத்துள்ளார்கள். ஆண்டு இறுதியில் சென்று அதுவரை எத்தனை முட்டைகள் வாங்கினோம் என்று கேட்டால் தேதிவாரியாக வாங்கிய மொத்த முட்டைகள் எத்தனை என்பதை கண் சிமிட்டும் நேரத்தில்  நேரத்தில் கணினியைத் தட்டிப் பார்த்துச் சொல்கிறார்கள்!

    வாங்கி வந்த கறிவேப்பிலையைக் கழுவி குழம்பில் போடும் நேரத்தில் ஒரு குறுஞ்செய்தி வருகிறது. “நீங்கள் எங்களிடம் இன்று காலையில் வாங்கிச் சென்ற கறிவேப்பிலை சற்றே தரமற்றது என ஆய்வக அறிக்கை கூறுகிறது. அதைப் பயன்படுத்த வேண்டாம். அடுத்தமுறை வரும்போது பணத்தைத் திருப்பிப் பெறலாம் அல்லது வேறு பொருளைப் பெறலாம். சிரமத்திற்கு மன்னிக்க” என்பதே அச் செய்தி. ஆங்கிலத்தில் Fair practice எனச் சொல்கிறோமே அது இங்கே நடைமுறையில் உள்ளது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.

    நம்மூர் அங்காடிகளில் இடநெருக்கடி இருக்கும். இங்கே அகன்ற பாதைகள் உள்ளதால் யாரும் யாரோடும் உரசிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.  தீ, நிலநடுக்கம் போன்ற அவசர காலங்களில் வாடிக்கையாளர்கள் வெளியே ஓடிச் செல்வதற்கு அவசரகால வழிகள் (Emergency Exits)எப்பக்கம் உள்ளன என்பதைத் தெளிவாகவும் இருட்டில்கூட ஒளிரும் வண்ணத்திலும் ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். நம் நாட்டிலும் இத்தகைய விதிமுறைகள் உள்ளன; ஆனால் விதி மீறல்களே அதிகம். யார் செய்த புண்ணியமோ நம்மூர் சென்னை சில்க் அங்காடியில் யாருமில்லாத இரவு நேரத்தில் தீப் பிடித்தது. பகல் நேரத்தில் அது நிகழ்ந்திருந்தால் எத்தனை உயிர்களைப் பலி வாங்கியிருக்கும்!

   அடுத்து,  பில் போடும் பகுதிக்குச் செல்கிறோம். இங்கே  பில் போடும் இடங்கள்(checkouts) மூன்று வகையாக உள்ளன. வழக்கமான கவுன்ட்டர், விரைவு கவுன்ட்டர்(Express checkouts), நாமே  பில் போட்டுக்கொள்ளும் கவுன்ட்டர்(self checkouts) என்பன அவை. இங்கே முழுக்க முழுக்க பணமில்லா பரிவர்த்தனைதான். அட்டையை உரசிவிட்டு அள்ளிச்செல்ல வேண்டும்.

   இன்னொரு முக்கியமான தகவல். பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் பெரிய பைகளைக் கொண்டுவந்து பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள்! பாலித்தீன் பைகளில் போட்டுக் கொடுக்கச் சொன்னால் அவற்றுக்குத் தனி விலை உண்டு!

    எனக்குப் பிடித்தது இங்கே நிலவும் வரிசைக் கலாச்சாரம்தான்(Queue culture). யாரும் யாரையும் முந்திக்கொள்ள முயற்சி செய்வதில்லை.

  எங்கு நோக்கினும் அழுக்கில்லை; அசுத்தம் இல்லை. கூரையில் ஓட்டை இல்லை; ஒட்டடை இல்லை. கழிவறைகள் படு தூய்மையாக உள்ளன.

   சுருங்கச் சொன்னால், இங்கே அங்காடிகளுக்குச் சென்று வருவது அழகான சுகமான அனுபவமாக உள்ளது; இது உண்மை.

கனடா நாட்டின் ஒட்டாவா பெருநகரிலிருந்து
முனைவர் .கோவிந்தராஜு


   

10 comments:

  1. கனடாவில் காணும் காட்சிகளை சீரியமுறையில் தொகுத்து அனுப்பி எங்களை மகிழ்விக்கிறீர்கள்.நன்றி

    ReplyDelete
  2. படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. அதிலும் சிக்கனத்தைப் பற்றி நீங்கள் கையாண்டவரிகள் அருமை .

    ReplyDelete
  3. படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. அதிலும் சிக்கனத்தைப் பற்றி நீங்கள் கையாண்டவரிகள் அருமை .

    ReplyDelete
  4. எங்கள் ஊரைப்பற்றி எழுதி பெருமைப் படுத்துவத்தற்கு மறுபடியும் நன்றி

    ReplyDelete
  5. You have taken us to Ottawa. Detailed write up is very interesting. Keep writing

    ReplyDelete
  6. I feel as if I were in Canada. You are really lucky to be there. I am reminded of Mr.Jasper who came from Canada as a teacher of English in Jamal Md. College, Tiruchi. I was his student. I was very chummy with him when I was in the hostel. He was with us for two years.

    ReplyDelete
  7. Fair practice
    போற்றுதலுக்கு உரிய நடைமுறை ஐயா
    நம் நாட்டில் காலாவதியான மருந்துகளையே விற்கிறார்களே

    ReplyDelete
  8. As usual I am much excited in reading. I am enjoying the flow of article. Keep on doing it sir.

    ReplyDelete
    Replies
    1. காசுக்குத்தகுந்த தோசை

      தோசையில் கூட எதார்த்தத்தை
      சொல்லும் வித்தை நம் நாட்டில்
      தோசையம்மா தோசையில்
      பங்கிடுதலில் உள்ள family hierarchy அழகாக சொல்லப்பட்டிருக்கும்
      எனக்குமட்டும் ஒண்ணு
      என்று முடியும் பாப்பாவின்
      அங்கலாய்ப்பு கவிதை கவிதை
      குரங்கு அப்பம் பகிர்ந்து கொடுத்த கதையில் எதிரியிடம் ஏமாந்து போன பூனைகளின் சோகம் போதிக்கும் எச்சரிக்கை உணர்வு
      இன்னமும் நிலாவில் தோசை சுடும் பாட்டி ஔவையார் என்று
      பாசத்தோடு தமிழுணர்வை அறிமுகப்படுத்திய செயல் இந்த தலைமுறை வரை தொடரும்
      அதிசயம்
      ஆச தோச அப்பளம் வடை என்று
      நளினமாக பழித்து காட்டுதல்
      நான் சொல்ல வந்தது வால்மார்ட்
      அங்காடிகள் பற்றிய பதிவை படித்தவுடன் காசுக்குத்தகுந்த
      தோசைதான் நினைவுக்கு வந்தது
      பத்து ரூபாய்க்கு சாதா
      இருபது ரூபாய்க்கு ரோஸ்ட்
      முப்பது ரூபாய்க்கு நெய்ரோஸ்ட்
      என்பது போல வசதிக்கு தகுந்த
      பேரங்காடியின் அழகை நேரில்
      கண்டது போன்ற உணர்வு
      நம்ம ஊர் கடைகளில் முழுத்தேங்காய் வாங்கமுடியாத
      ஏழைவாடிக்கையாளருக்கு தேங்காய் பத்தை அல்லது கீத்தை
      தருவதும் காய்கறிகள் வாங்கினால் கொசுறாக கொத்தமல்லி கருவேப்பிலை தருவதும் ஒரு அழகுதான்
      நாள் அங்காடி அல் அங்காடி
      என்று 24x7 வணிகம் செய்த
      தமிழகம் உலகவர்த்தகங்களின்
      மையமாக விளங்கியது
      வார சந்தை உழவர்சந்தை என்ற
      நம்ம ஊர் வணிக இடங்களும்
      தனித்தன்மை வாய்ந்தவை
      வால்மார்ட் போல பன்னாட்டு
      வணிக நிறுவனங்கள் குரங்குகளாய் இங்கு வந்து
      பூனைகளின் அப்பத்தைப் பிடுங்காமல் இருந்தால் சரி
      நமதுப்பசிக்கு சாதா தோசையே
      போதும்

      Delete
  9. Q culture ரசித்தேன். அனுபவப்பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete