Wednesday 21 June 2017

இந்து கோவில்களும் இனிய நினைவுகளும்

    கரூரில் நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கோவில்களுக்குப் பஞ்சமில்லை. பழமையான பசுபதீஸ்வரர் கோவில், தான்தோன்றிமலை பெருமாள் கோவில் ஆகியவற்றிற்குப் பத்துநிமிட நேரத்தில் சென்றுவிடலாம்.
அப்படியிருந்தும் ஆடிக்கொருமுறை, அமாவாசைக்கு ஒருமுறைதான் போவதுண்டு.

    இங்கு கனடாவில் கோவில் இல்லாத ஊரில் குடியிருந்து கொண்டு கோவிலுக்குச் செல்லும் ஆசை வந்துவிட்டது. இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டோம்.

  ஒரு மாலை நேரத்தில் மகிழ்வுந்தில் புறப்பட்டோம். அதில்  வழிசொல்லும் கருவி இருந்ததால் கால விரயம் இல்லாமல் குறித்த நேரத்தில் கோவிலை அடைந்தோம். ஒட்டாவா நகருடன் ஒட்டாமல் நார்த் கோவர் என்னும் புறநகர்ப் பகுதியில் ஸ்ரீ வைத்தீஸ்வரம் என வழங்கும் ஒரு குக்கிராமத்தில் அந்தச் சிறிய சிவன் கோவில் அமைந்துள்ளது.

     
நம்மூர் கோவில்களை மனத்தில் வைத்துக்கொண்டு பார்த்தால் இந்தக் கோவில் கோவிலாகவே தெரியாது. ஒரு பெரிய வீடுபோலதான் தோன்றும். “இந்த ஊரிலேயே என் வீடுதான் பெரிய வீடு” என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் வசனம் இக் கோவிலுக்குதான் பொருந்தும். கோவிலுக்கு அருகில் ஒன்றிரண்டு வளமனைகள்(Bungalows) தெரிந்தன. மற்றபடி வீடுகள் எதுவும் இல்லை. கோவிலைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளைநிலங்கள் பரவிக்கிடக்கின்றன. மானாவாரிப் பயிராக மக்காச்சோளம் போடப்பட்டுள்ளது; முளைத்து மூன்று இலைகள் வந்துள்ளன.

    
வைத்தீஸ்வரம் சிவன் கோவில்
ஸ்ரீ வைத்தீஸ்வரம் ஒட்டாவா சிவன் கோவில் என்று தமிழில் அழகுற எழுதி வைத்துள்ளனர். எங்களை வரவேற்றவர் கோவில் அர்ச்சகர் சிவாகம சூடாமணி விசுவநாத குருக்கள். படித்துப் பட்டம் பெற்ற இளைஞர். நல்ல தமிழில் நாவினிக்கப் பேசினார். சீர்காழிக்குப் பக்கமுள்ள திருவெண்காடு அவரது சொந்த ஊராம். எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு கோவிலின் உள்ளே சென்றோம். எங்களுக்கு முன்னால் ஊட்டியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வழிபாட்டுக்கு வந்திருந்தார்கள்.

    
அது ஒரு பெரிய கூடம். ஆங்காங்கே தெய்வங்களின் வெண்கலச் சிலைகளை அழகிய மாடங்களில் சிறு பீடங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி சிலைகள் முதன்மையாக விளங்குகின்றன. படம் எடுக்க அர்ச்சகர் அனுமதி தந்தார்.

    மண்ணிலே எல்லோரும் நல்ல வண்ணம் வாழ அருள் புரிவாயப்பா மலையப்பா என்று வேண்டினேன். நெற்றியெலாம் நீறு பூசி கனடா நாடுடைய சிவனே போற்றி என்று எண்சாண்கிடையாக விழுந்து  வணங்கி எழுந்தது மனத்துக்கு நிறைவாக இருந்தது.

  
கார்ல்டன் கோவில்
அடுத்த சில நாள்களில் மற்றொரு இந்து கோவிலைக் காணும் வாய்ப்பு தானாக வந்தது. நண்பர் திரு.முருகானந்தம் அவர்களின் விருந்தினராக அவரது இல்லத்திற்குச் சென்றபோது  தம் மகிழ்வுந்தில்  அழைத்துச் சென்றார். அது வட இந்தியர்களால் நிருவகிக்கப்படும் இந்துக்கள் கோவில். ஒட்டாவா கார்ல்டன் என்னும் நகரில் அமைந்துள்ளது.

    
காலணிகள் வைப்பறை
அக் கோவிலின் ஒரு பகுதியாக இருந்தது காலணிகளைக் கழற்றி வைக்கும் அறை. அது  என்னை மிகவும் கவர்ந்தது. மழைக் கோட்டுகளை அவிழ்த்து வைக்க ஹேங்கர்கள் கூட உள்ளன. உட்கார்ந்து ஷூ போடுவதற்கு வசதியாக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. மிகத் தூய்மையான கழிவறை வசதி கொண்டதாக இருப்பது கூடுதல் சிறப்பாகும். சுருங்கச் சொன்னால்,
Cleanliness is next to Godliness என்ற கூற்றுக்கு இலக்கணமாய்த் திகழ்கிறது கோவிலின் உள்ளும் புறமும்.

    கோவில் படி ஏறியதும் நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு நன்கு பழக்கமுள்ள சில மார்வாடி நிர்வாகிகள் எங்களை வாழ்த்தி வரவேற்றார்கள். அடிமேல் அடிவைத்து மெல்ல நடந்தோம். கடவுள் சிலைகள் எல்லாம் கண்ணைக் கவரும் வகையில் வெண்பளிங்குக் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில  கரும்பளிங்குச் சிலைகளாகவும் அமைந்திருக்கின்றன. அவற்றைப் படம் எடுக்க ஆர்வம் எழுந்தது. நண்பர் முருகானந்தம் காதைக் கடித்தேன். படம் எடுக்க அனுமதியில்லை என்றார். மனக் கேமிராவில் படம்பிடித்துக் கொண்டேன். நண்பர் முருகானந்தம் அவர்களுடன் சென்றதால் அர்ச்சகர் எங்களை சீர்மிகு பெருமக்கள்(VIPs) என எண்ணி தீபாராதனைக் காட்டி, தீர்த்தம் தந்து, அனைவருக்கும் ஆப்பிள் கனிகளையும் அன்புடன் அளித்தார். சிரம் தாழ்த்தி நன்றி சொல்லிப் பெற்றுக் கொண்டோம்.

      வெளியில் வந்து ஆசை தீர படம்பிடித்துக்கொண்டு மன நிறைவுடன் இல்லம் திரும்பினோம்.

      முனைவர் .கோவிந்தராஜூ
       கனடா நாட்டிலிருந்து
  

     

10 comments:

  1. வழக்கம்போல எங்களையும் உங்களுடன் கனடாவுக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள்.மிக்க நன்றி

    ReplyDelete
  2. As usual you have taken us too to Canada.Only people like you can make this type of narration in every aspect perfectly.Thanks for the same.

    ReplyDelete
  3. காலனிகள் வைப்பறை மிகவும் கவர்ந்து விட்டது ஐயா

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா
    "கனடா நாட்டுடைய சிவனே போற்றி" அருமையான டைமிங் சொற்றொடர்.

    ReplyDelete
  5. கனடா நாட்டு கோயில்களுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. யப்பா...! என்னவொரு சுத்தம்...!!!

    ReplyDelete
  7. Variety is the spice of life. This applies to you, sir. God bless you.

    ReplyDelete
  8. காலணி வைப்பறை பற்றியும் கோவிலின் தூய்மை பற்றியும் குறிப்பிட்டிருந்தது மன நிறைவைத் தந்தது.
    இதைப்போலவே, இங்கே நம்ம ஊர் Auroville Matri Mandirஆலயமும் வெகு நேர்த்தியாக பராமரிக்கப் பட்டிருக்கும். ஆலயத்தைப் பார்வையிட முன்பதிவு கட்டாயம். நம் காலணிகளை வைப்பறையில் விட்டுவிட்டு அவர்கள் தரும் வெள்ளைக் காலுறை அணிந்து தான் ஆலயத்துள் செல்ல வேண்டும்.

    ReplyDelete
  9. ஐயா, இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு தகவல் தான் மிகவும் முக்கியமான ஒன்று. பத்து நிமிடத்தில் செல்லும் கோவிலுக்கு ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை போவதைப்பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். அது மிகவும் உண்மை. நீங்கள் எங்களுக்கு வகுப்பெடுக்கும்போது சொன்னது, வெறுப்பை ஏற்படுத்தியது.ஆனால் பள்ளியை விட்டுச்சென்றபின் உங்கள் வகுப்பில் அமர மனம் ஏங்கியது.20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருவாராம் மாணவராக அமர்ந்த நாட்கள் நெஞ்சில் நீங்காதவை.இன்று தினமும் எனது மகிழ்வுந்தை காலையில் நிறுத்தும் போதும், மாலையில் கிளப்பும் போதும் உங்களை சந்திக்க மனம் ஏங்கும். நீங்கள் மீண்டும் கல்லூரியில் மாணவர் மனநலம் மேம்பாட்டு வகுப்பு நடத்தவேண்டும் அதில் நானும் அமரவேண்டும் என்றே ஏங்கி நிற்கிறேன். உங்கள் கனடா நாட்டுப் பயணம் பற்றி இன்னும் பல தகவல்களைத் தர வேண்டும் ஐயா.

    ReplyDelete
  10. தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!
    என சிவனை வணங்குவர். அந்தவகையில் கனடா நாட்டில் அமைந்துள்ள சிவனும் அங்குள்ளவர்களுக்கு அருளை வாரி வழங்கட்டும். இறை வழிபாட்டில் நம்மவர்களைப் போன்று கனடா நாட்டினரும் விரும்புவர் என தங்கள் கட்டுரை வாயிலாகவும், ஒளிப்படங்கள் வாயிலாகவும் அறியமுடிந்தது. நன்றி.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி)
    கரூர் - 5

    ReplyDelete