Sunday 2 July 2017

வாழ்க கனடா

   இன்று ஜூலை ஒன்று
     கனடாவின் 150 ஆவது பிறந்த நாள்.
       1867ஆம் ஆண்டு இதே நாளில் தன்னாட்சித் தகுதியைப் பெற்ற நாள். கடந்த ஓராண்டாகத் திட்டமிட்டு எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் விழாக்கள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன.

    விழாவின் முக்கியத்துவம் கருதி கனடா நாட்டின் மகராணியார் இரண்டாம் எலிசெபத் அம்மையார், இளவரசர் வில்லியம் சார்லஸ் ஆகியோரும் இங்கிலாந்திலிருந்து நேற்றே வந்துவிட்டனர்.

      ஒரு வாரமாகவே மழை விட்டு விட்டுக் கொட்டித் தீர்க்கிறது. இன்றும் மழையோடுதான் நாள் தொடங்கியது. என்றாலும் காலை ஆறு மணிக்கெல்லாம் ஒட்டாவா  பார்லிமெண்ட் ஹில் முன்புறம் உள்ள பெரிய திடலில் குடையுடன் மக்கள் குழுமத் தொடங்கிவிட்டனர்.

    கனடா போலீசார் எப்போதும் படு கண்டிப்பானவர்கள். நேற்று மாலை ஒரு தீவிரமாத அமைப்பு விழாத் திடலில் வெடிகுண்டு வீசப்போவதாக ஒரு செய்தியைக் கசியவிட்டிருந்ததால் மும்மடங்கு கெடுபிடி காட்டுகிறார்கள்.

    பின்புலத்தில் எல்சிடி திரையுடன் கூடிய கண்ணைக் கவரும் பிரமாண்ட மேடையில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் களை கட்டுகின்றன. ஆங்கிலம் ஃப்ரென்ச் இரு மொழிகளிலும் தம் நாட்டைப் போற்றி ஆடிப்பாடி அசத்துகிறார்கள்..

  
அப்படியே மெல்ல பார்வையாளர்களை ஒரு நோட்டம் விடுகிறேன். எங்கு பார்த்தாலும் கொடிகள். மக்கள் தங்கள் முகம் நகம் என உடலெங்கும் கொடியை வரைந்திருக்கிறார்கள். தலைமீது கொடித் தொப்பி; தொப்பித் தலைமீதும் கொடிகள். இவர்களுடைய நாட்டுப்பற்றுக்கு அளவே இல்லை.
  

காலை சரியாக பதினோரு மணி. மகராணியாரும் இளவரசரும் நான்கு குதிரைகள் பூட்டப்பெற்ற வண்டியில் ஊர்வலமாக வந்து இறங்குகிறார்கள். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் இரண்டு வயது குழந்தையைத் தூக்கியபடி வருகிறார். கூடவே மனைவியும் மற்ற இரு குழந்தைகளும் புன்னகை தவழ வருகிறார்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள். பிரதமர் என்ற பந்தா ஏதுமின்றி பார்வையாளர் பகுதிக்குச் சென்று மிக இயல்பாக கை குலுக்கி மகிழ்கிறார்.
   அவரைத் தொடர்ந்து அவர் மனைவி, மகாராணியார், இளவரசர், கவர்னர் ஜென்ரல் ஆகியோரும் பொதுமக்களைச் சந்தித்து கைகுலுக்கி வருவது புதுமையாக உள்ளது. பிறகு மகாராணியாரும் இளவரசரும் படைவீரர்களின் அணிவகுப்பை ஆய்வு செய்து மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
   
கனடா என்னும் தேசிய கீதத்தைக் கலைஞர்கள் பாட, ஒட்டு மொத்த பார்வையாளர் கூட்டமும் சேர்ந்து உரக்க உணர்ச்சிப் பெருக்குடன் பாடுகிறது. தொடர்ந்து நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துறை பெண் அமைச்சர் நாட்டின் தலைசிறந்த கலைஞர் குழுவை அறிமுகப்படுத்திப் பேசுகிறார். பாட்டும் நடனமும் களை கட்டுகின்றன. மேடைக்கு முன்புறம் கீழே முன்வரிசையில் மகாராணியார், இளவரசர், பிரதமர் அனைவரும் அமர்ந்து இரசிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அமைச்சர் பெண்மணி  எழுந்து நின்று ஆட்டமும் போடுகிறார். கலைநிகழ்ச்சியின் இடையில் பள்ளிச் சிறுவர்கள் சிலர் வந்து தம் தாய்நாட்டுப் பெருமைகளைப்  பேசுகிறார்கள்.
      எழுபது வயது நிரம்பிய மருத்துவர் ஒருவர் இதுவரை மூவாயிரம் நோயாளிகளுக்கு இரவு நேரத்தில் அவர்களுடைய வீட்டிற்கே சென்று வைத்தியம் பார்த்தாராம். அவரை மேடைக்கு அழைத்து அங்கீகாரம் செய்கிறார்கள். கலைநிகழ்ச்சி நிறைவில் பிரதமர் மேடை ஏறுகிறார். பெண் கலைஞர் இருவர் அவருக்கு கன்னத்தில்முத்தம் கொடுத்து வரவேற்கிறார்கள். இவரும் கலைஞர் ஒவ்வொருவரையும் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். தொடர்ந்து எந்தவித குறிப்பும் இல்லாமல் இயல்பாக இனிக்க இனிக்கப் பேசுகிறார்.. இடையிடையே மக்களின் கரவொலி விண்ணைப் பிளக்கிறது
    திரும்பி மேலே பார்த்தால் பத்து போர் விமானங்கள் விண்ணில் அணிவகுத்துப் பாய்ந்து பல்வேறு சாகசங்களைச் செய்கின்றன. விழா முடிந்து விருந்தினர்கள் சென்றபின்னும் கலைநிகழ்ச்சிகள் இரவு பத்துமணி வரையில் தொடர்கின்றன..
    இரவு சரியாக 10.01 மணி. வாண வேடிக்கையைத் தொடங்குகிறார்கள். வானவெளியில் இவர்கள் நடத்தும் ஒளிக்கூத்து இருபது நிமிடமே நீடித்தாலும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
  இத்துடன் விழா இனிதே நிறைவடைகிறது.
வாழ்க கனடா; வளர்க அதன் புகழ்.
கனடா ஒட்டாவா நகரிலிருந்து

முனைவர் .கோவிந்தராஜூ

10 comments:

  1. A great salute to the 70 years young doctor for his services.

    ReplyDelete
  2. ஒட்டாவா நகரிலிருந்து ஒரு நேரலை. நன்றி அண்ணா.

    ReplyDelete
  3. அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள்!
    ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் எங்களையும் பங்குபெறவைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. கனடாவின் பிறந்த நாள் அன்று புதிய அரிய செய்திகளை அறிந்தே. நன்றி.

    ReplyDelete
  7. கனடா பற்றிய அரிய தகவல்கள் சிறப்பு. 150ஆம் ஆண்டு விழாவின் வர்ணனை அழகு. ஒளிக்கூத்தையும் கண்டு மகிழ்ந்தேன்.. உங்களுடன் இணைந்து நாங்கள் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன இக் கட்டுரைகள்.நன்றி.

    ReplyDelete
  8. வாழ்க கனடா. வாழ்க! வாழ்க!. நாட்டுப்பற்று என்பது மனிதன் பிறந்த மண்ணுக்குச் செலுத்தும் நன்றிக்கடன். நாடு நன்ராக இருந்தால் வீடு நன்றாக இருக்கும் என்பர். மன்னராட்சியும் மக்களாட்சியும் இனைந்த கனடா ஒரு அற்புதமான நாடு என்பதில் ஐயமில்லை.
    பேராசிரியர் ரா.லட்சுமணசிங்
    கரூர் - 5

    ReplyDelete
  9. கனடா அருமையான நாடு என்று தெரிகிறது....கோன் உயர குடி உயரும் என்று சும்மாவா சொன்னார்கள்...அருமை

    ReplyDelete