Wednesday 18 November 2020

முந்நீரும் பன்னீரும்

    இணையதளக் குழு ஒன்றில் முந்நீர் என்னும் பழந்தமிழ்ச் சொல்லுக்கான சொற்பொருள் விளக்கத்தைப் பலரும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

 முந்நீர் என்ற சொல்லுக்கு . கடல்நீர் என்ற பொருள் உண்டு. ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்னும் மூன்று நீர்கள் சேர்ந்ததே கடல்நீர் என்பதால் நம் முன்னோர் கடல்நீரை முந்நீர் என வழங்கினர். இந்த முந்நீர் என்னும் சொல்லுக்கு வேறு பொருள் உண்டா என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வி.
 அவற்றைப் படித்தபோது எனக்கு ஒரு புறநானூற்றுப் பாடலின் ஒரு வரி மட்டும் என் மனக்கதவைத் திறந்து எட்டிப் பார்த்தது.

  முந்நீர் உண்டு முந்நீர் பாயும் என்பதே அந்த வரி. பாடலின் தொடக்கவரி நினைவுக்கு வராமல் முரண்டு பிடித்தது. முழுப்பாடலையும் படித்துப் பார்க்க எனக்கு ஆசை எழுந்தது. ஆனால் கனடாவில் இளைய மகள் வீட்டில் இருக்கும் நான் புத்தகத்திற்கு எங்கே போவது? இக்காலத்துத் தமிழாசிரியர் வீட்டில் கூட காணக் கிடைக்காத புறநானூறு அகநானூறு புத்தகங்கள் பொறியியல் படித்த அவளது வீட்டில் கிடைக்குமா என்ன? ஏதோ ஓர் ஆசையில் புத்தக அலமாரியைத் திறந்து பார்த்தேன். ஆங்கில நூல்களே அணிவகுத்து நின்றன. தன் கைப்பேசியைச் சொடுக்கிப் பார்த்துவிட்டு, கனடா நாட்டுப் புத்தகக் கடைகளில் புறநானூறு புத்தகம் கிடைக்காது எனக் கைவிரித்தாள். ஆனால் நான் என் முயற்சியைக் கைவிடவில்லை.

     மடிக்கணினி என்னும் மாயவிளக்கை ஏற்றினேன். கூகுள் தேடுபொறியில் என் நினைவில் நின்ற அந்த ஒருவரியைத் தமிழில் தட்டச்சு செய்து தேடுமாறு பணித்தேன்.

   அடுத்த நொடியில் மாங்குடி மருதனார் தாத்தா எழுதிய அந்தச் சங்கப் பாடல் முழுதும் திரையில் தோன்றி என் கண் வழியே புகுந்தது. அதை உணர்ந்த என் மூளைக் கணினி அதன் தரவுக் களஞ்சியத்தைத் திறந்து தொடர்புடைய பல்வேறு தரவுகளைத் தட்டிக்கொட்டிப் பார்த்தது. பின்னர், “இது நீ 1976 ஆம் ஆண்டு எம்.. தமிழ் முதலாமாண்டில் படித்தபோது பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் நடத்திய 24ஆம் புறப்பாடல்என்னும் செய்தியை முதலில் தந்தது.

   அத்துடன், அவர் அந்தப் பாடலில் வரும் முந்நீர்  பற்றி விளக்கியது, நான் பன்னீர் சோடா பற்றி ஓர் ஐயத்தைக் கேட்டது, அதைக் கேட்டு வகுப்பில் இருந்த மாணவ மாணவியர் கொல்லெனச் சிரித்தது, குழாய் நீர் குட்டை நீர் கிணற்று நீர் எனப் பல நீர்களால் ஆவதால் பன்னீர் சோடா ஆகியிருக்கலாம் என்று பேராசிரியர் நகைச்சுவையாகச் சொன்னது, அன்று மதிய இடைவேளையின் போது அகிலா என்ற அழகிய வகுப்புத் தோழி என் அருகே வந்து,என்ன மிஸ்டர் பன்னீர்என அழைத்துக் கேலி செய்தது, மறுநாள் வகுப்பில் அந்த முப்பத்து ஆறு வரிகள் கொண்ட முந்நீர் பாடலை நான் ஒரே மூச்சில் மனப்பாடமாகச் சொல்லிக்காட்ட ஒட்டு மொத்த வகுப்பும் எழுந்து நின்று கைதட்டியது, அதைப் பாராட்டும் வகையில் நான் மறுத்தபோதும் அதே அகிலா என்ற அகிலாண்டேஸ்வரி என் கையைப்பிடித்து கேன்ட்டீனுக்கு அழைத்துச் சென்று காளிமார்க் பன்னீர் சோடா வாங்கித் தந்தது என எல்லாத் தகவல்களையும் கொட்டிக் கொடுத்தது என் மூளைக் கணினி. என் இருபதுகளில் நிகழ்ந்ததை இப்போது எனது அறுபதுகளில் அசைப்போட்டுப் பார்ப்பதும் சுகமாகத்தான் உள்ளது!

    என்ன, பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து இருக்கீங்கஎன்று என் மனைவி கேட்டபோதுதான், சரி சரியென்று சுதாரித்துக்கொண்டு, மடிக்கணினியில் புகுந்து பாடலுக்கான முழு விளக்கத்தையும் படித்துப் பார்த்தேன்.

     முந்நீர் பற்றிப் புறப்பாடல் என்ன சொல்கிறது?

"இரும்பனையின் குரும்பை நீரும்

பூங்கரும்பின் தீஞ்சாரும்

ஓங்கு மணற் குலவுத் தாழைத்

தீ நீரோடு உடன்விராஅய்

முந்நீர் உண்டு..." 

என்பவை பாடலின் இடையில் வரும் வரிகள். 

 அதாவது பனை மரத்தில் கிடைக்கும் பதநீர், கரும்பைப் பிழிந்து எடுக்கப்பட்ட கரும்புச் சாறு, தென்னை இளநீர் மூன்றையும் கலந்து சங்ககாலத் தமிழர்கள் பருகுவார்களாம். மூன்று + நீர் = முந்நீர். சங்க காலத்தில் தென்னையைத் தாழை என்றும் குறிப்பிடுவார்கள் என்பதையும் இப்பாடலால் அறிகிறோம். 

     ஆக நான் இங்கே நிறைவாகக் குறிப்பிட விரும்பும் செய்தி யாதெனின், புறநானூற்றுப் பாடலைச் சுவைக்க மனமில்லாதவர் கூட, புறப்பாடல் குறிப்பிடும் முந்நீரை அருந்தக் கொடுத்தால் சுவைத்து மகிழ்வார்கள் என்பதே. 

  யாராவது முன்வந்து முயற்சி செய்து இந்த முந்நீரை உணவகங்களில் அறிமுகப்படுத்தினால் நன்கு விற்பனையாகும். ஒரு பாரம்பரிய பானகத்தை மீட்டெடுத்த பெருமையும் கிடைக்கும்.


  முந்நீர் என்னும் பெயர் பிடிக்கவில்லை என்றால் இகசா பநீ என்று ஒரு புதிய பெயரைச் சூட்டிவிடலாம்! இளநீர், கருப்பஞ்சாறு, பதநீர் என்பவற்றின் சுருக்கம்தான் இகசாபநீ! இகசா பாணி அச்சா ஹை என்று வடநாட்டுக்காரர்களும் வாங்கிக் குடிப்பார்கள்! 

முனைவர் .கோவிந்தராஜூகனடாவிலிருந்து.

 


17 comments:

  1. ஹா ஹா ஹா அருமை

    ReplyDelete
  2. அருமை ஐயா. பாடலுடன் அதற்கான பொருள் விளக்கத்துடன் பானத்தின் குறிப்பும் கிடைக்கப்பெற்றோம்.

    உங்கள் இள வயது நினைவுகள் சுவை பானத்தைப் போலவே!

    கடைசியில் சிரித்துவிட்டேன் நல்ல நகைச்"சுவை!" சுவையான பதிவு. செவிக்கு உணவுடன் கூடவே நாவிற்கும் இனிய பானம்!

    ஒவ்வொன்றும் எவ்வளவு சதவிகிதம் கலக்க வேண்டும் என்று சோதித்துப் பார்த்து அறிமுகப்படுத்தினால் "சக்கை" போடு போடும்!

    ரசித்தேன் ஐயா

    கீதா

    ReplyDelete
  3. படைத்தல், காத்தல், அளித்தல் என்ற முத்தொழியையும் நீர் செய்வதால் கடலுக்கு முந்நீர் என்று பெயர் வந்து இருக்கலாம் என்று எங்கள் பேராசிரியர் சொன்ன நினைவு. முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை. என்ற வரிகள் இங்கு நினைவு கூறத் தக்கன. தங்கள் விளக்கம் மிகவும் அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அழித்தல் என பிழை திருங்க!

      Delete
  4. சங்க காலத்தில் குடும்பப் பெண்களை கடல் பயணத்திற்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள் என்றுஉரை ஆசிரியர்கள் சொல்வதுண்டு

    ReplyDelete
  5. அய்யா தங்களுடைய கட்டுரை தொடர்ந்து படிக்க ஆசைபடுகிறேன்.

    ReplyDelete
  6. படிக்கும் போதே அருந்த வேண்டும் போல் உள்ளது. சங்கத் தமிழன் கொடுத்து வைத்தவன் தான்!


    ReplyDelete
  7. படிக்கும் போதே அருந்த வேண்டும் போல் உள்ளது. சங்கத் தமிழன் கொடுத்து வைத்தவன் தான்!


    ReplyDelete
  8. படிக்கும் போதே அருந்த வேண்டும் போல் உள்ளது! சங்கத் தமிழன் கொடுத்து வைத்தவன் தான்!

    ReplyDelete
  9. தேடிக் கண்டுபிடித்து, பகிர்ந்தமைக்கு நன்றி. நம் இலக்கியத்தின் பெருமைக்கு ஈடேது?

    ReplyDelete
  10. முந்நீர் அறிந்தேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  11. சிறப்பு...

    மூளைக் கணினியின் ஞாபக சக்தி வியப்பைத் தருகிறது.... இதுவும் சிறப்பு ஐயா... நன்றி...

    ReplyDelete
  12. தமிழ்ப் பெருந்தகையீர்,
    பணிவான அன்பு வணக்கம்.தங்களது பதிவு எம்மையுமல்லவா பழையநினைவுகளில் இட்டுச் சென்றது!
    மகிழ்ச்சிங்க அய்யா...

    ReplyDelete
  13. நல்ல விளக்கம் ஐயா. முந்நீர் என்ன என்பதை இப்போது அறிகிறேன்.

    துளசிதரன்

    ReplyDelete
  14. முருகையன்.தி20 November 2020 at 11:29

    முந்நீரும் பன்னீரும் நகையொடு சுவையாக இருந்தது
    நன்றி ஐயா.

    ReplyDelete
  15. நன்றி ஐயா .முந்நீருக்கான விளக்கத்தை தெளிவாகத் தெரிந்து கொண்டேன். தாங்களின் நினைவாற்றலை பாராட்டாமல் இருக்க முடியாது .வியப்பிற்குரியதே.இப்பாடலை உடனடியாக மனப்பாடம் செய்யத் தோன்றுகிறது.நன்றி ஐயா.

    ReplyDelete