Friday 14 July 2017

இது வாழும் முறைமையடி பாப்பா

   கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சும்மாவா சொன்னார்கள்? ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. கோடி சேர்த்தால் கோடி நன்மை என்னும் நவீன பொருளியல் சிந்தனை மனித மனத்தில் வேரூன்றி விட்டது. பொருளைத் தேடி மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். வாழ்வின் மாலைப்பொழுதில் திரும்பிப் பார்த்து “என்ன வாழ்க்கையடா வாழ்ந்தோம்?” என எண்ணிப் பார்க்கிறான். வாழத் தெரியாமல் வாழ்ந்ததை எண்ணி வருந்துகிறான். கண் கெட்டபின் சூரிய வணக்கம் சாத்தியமில்லையே! இவர்களைப் பார்த்து திருவள்ளுவர் கைகொட்டிச் சிரிக்கிறார். சிரித்து ஓய்ந்ததும் ஒரு சிந்தனைக் குறளை இவர்களுக்காக செதுக்கி அளிக்கிறார்:

     ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப 

     கோடியும் அல்ல பல
    
    எதற்காக இவ்வளவு நீண்ட முன்னுரை என்றுதானே நினைக்கிறீர்கள்?

   ஒருநாள் காலை நடைப்பயிற்சியின்போது கனடியர் ஒருவரோடு அளவளாவியபடி நடந்தேன். நடை முடிந்து விடை பெறும்பொழுது, “இந்தவாரம் சனிக்கிழமை பகலுணவைச் சேர்ந்து உண்போம்; வாருங்கள்” என ஓர் அழைப்பை விடுத்துச் சென்றார்.

    மகளிடம் இதுகுறித்துப் பேசினேன்; சரி என்றாள். அவர் குறிப்பிட்டிருந்த நேரத்திற்குப் பத்து நிமிடம் முன்னதாகவே சென்றேன். சிறு குழந்தையைப் போல ஒரு ஹைஃபைவ் கொடுத்து ஹாய் என்றார் அந்த நண்பர். கேட்டா என்பது அவர் பெயர்.

   பே ஷோர் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தனர்.






 Community Garden   Birth Day என்னும் பதாகையும் Welcome to Community Lunch என்னும் மற்றொரு பதாகையும் கண்ணில் பட்டன. “இன்னும் இருபது நிமிடங்களில் பகலுணவு தயாராக இருக்கும்.  சற்று நேரத்தில் அழைத்தவர் அழைக்காதவர் எனப் பலரும் வருவார்கள்” என்றார். “எப்படி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கிறீர்கள்?” என்று கேட்டேன். “ஒவ்வொரு நான்காம் சனிக்கிழமையிலும் உணவு தயாரிப்புக்கு உரிய பொருள்களை அதாவது மைதா மாவு, வெங்காயம், பச்சைமிளகாய் போன்றவற்றைக் கொண்டுவருவார்கள். இங்கே உள்ள சமுதாய அடுப்பை மூட்டித் தன்னார்வ தொண்டர் சிலர் சமைப்பார்கள். பிறகு அனைவரும் சேர்ந்து உண்போம்” என்று கூறினார். “இது என்ன உண்டியல் மாதிரி?” என்றேன். உண்டு முடித்து விடைபெறும்போது ஒரு டாலரோ இரண்டு டாலரோ இதில் போட்டுச் செல்வார்கள். ஷாமியானா, டைனிங் டேபிள் ஆகியவற்றின் வாடகைச் செலவுக்குப் பயன்படும்” என்றார். நானும் மகிழ்ச்சியாக ஒரு டாலரை உண்டியலில் போட்டேன்.

இந்தச் சேர்ந்துண்ணல் கலாச்சாரத்தைப் பற்றி என் மனம் அசைப்போடத் தொடங்கியது.

   சங்க காலத்தில் போரில் வாகைசூடித் திரும்பும் வீரர்களுக்கு அரசன் மதுவும் கைக்குத்தல் அரிசியில் தயாரான ஊன்சோறும் அளித்துத் தானும் அவர்களுடன் உண்டு மகிழ்வான். இதற்கு உண்டாட்டு என்று பெயர். உண்டாட்டு என்னும் துறையில் அமைந்த சங்கப்பாடல்கள் பல உண்டு. உண்டாட்டு நிகழ்வின்போது  பச்சை இறைச்சியில் மிளகும் உப்பும் சேர்த்து நன்றாக ஊறியபின்(Marinating) தீயில் பக்குவமாக வாட்டிப்(barbecue) பரிமாறுவார்களாம். தொடுகறி எனக் குறிப்பிடப்படுகிறது. தொடுதல் என்றால் உண்ணுதல் என்றுபொருள். இப்போதும் கிராமத்தில் சோற்றுடன்  தொட்டுக்க என்ன இருக்கிறது என்று கேட்பார்கள்.
 

நான் அங்கே சென்றபோது இங்கே பொறியாளராகப் பணியாற்றும் பெங்களூரைச் சேர்ந்த தனலட்சுமி விறகு அடுப்பில் பீசா தயாரித்துக்கொண்டிருந்தார். தன்னார்வ தொண்டராக இதைச் செய்வதாகத் தெரிவித்தார். விறகு அடுப்பில் செய்யப்படும் பீசா படு சுவையாக இருக்கும் என்று கூறி என் வாயில் கூடுதலாக உமிழ்நீர் சுரக்கச் செய்தார்.

   அருகிலிருந்த சமுதாய தோட்டத்திற்குள் நுழைந்தேன். வரிசையாக மரத் தொட்டிகளை வைத்து மண்ணை நிரப்பி வைத்துள்ளார்கள். பூங்காவைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிப்போரில் ஆர்வமுடையோர் ஒரு தொட்டிக்கு 25 டாலர் ஆண்டுக் கட்டணம் செலுத்தி கீரை, காய்கறிகளைப் பயிரிடுகிறார்கள். மாலை நேரத்தில் வந்து களை நீக்கி, நீரூற்றிப் பராமரிக்கிறார்கள். 
  
இத் தோட்டத்தில் விளைந்த முட்டைகோஸ், கீரை, காய்கறிகளைக்கொண்டு சாலட் செய்து கொடுத்தார்கள்; அவ்வளவு சுவையாக இருந்தது. இதைப் பார்க்க பார்க்க எங்கள் கரூர் வீட்டுத் தோட்டம் என் நினைவில் வந்து வருத்தியது. அதே சமயம் நண்பர் பேராசிரியர் இலட்சுமண சிங் பொறுப்பில் விட்டு வந்ததை நினைத்து ஆறுதலும் அடைந்தேன்.

    சமுதாயத் தோட்டத்தின் பிறந்தநாளை கேக் வெட்டியும் கொண்டாடினார்கள். பிறகு உண்ணும் நேரம் வந்தது. எல்லோரும் மெதுவாக மென்று சுவைத்து உண்டார்கள்; பேசிச் சிரித்தபடி நீண்ட நேரம் உண்டார்கள். உண்பது ஒரு கலை. எப்படி உண்ண வேண்டும் என்று ஒரு பழம்பாடல் கூறுகிறது.

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்

பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்

வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின்

   ‘யார் எவர் என்று பார்க்காமல் எல்லோருக்கும் உணவு கொடுங்கள்; விருந்தும் நட்பும் சூழ உண்ணுங்கள். பழைய உணவு எவ்வளவு சுவையாக இருந்தாலும் (பழைய சோற்றைத்தவிர) மறுநாள் உண்ணாதீர்கள். எவ்வளவு பசியாக இருந்தாலும் அவசரமாக அள்ளித் தின்னாதீர்’ என்பது இவ்வரிகளின் பொருளாகும். இதை எனது கனடா நண்பர் கேட்டா அவர்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கிக் கூறினேன். “அருமை! அருமை! சொன்னவர் யார்?” என்று கொழ கொழ ஆங்கிலத்தில் ஆவலுடன் கேட்டார்.

   திருமூலர் என்றேன். “ட்ரிமூலர் ட்ரிமூலர் என்று பலமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டார்.

   நானும் இருபது நிமிடத்தில் கால் பீசாவை சுவைத்தேன். உண்மையில் சுவையாக இருந்தது. அடுமங்கை(Oven Operator) தனலட்சுமியைப் பாராட்டிப் பேசிவிட்டு, என் மகளுக்காக ஒரு பீசாவை கையில் ஏந்தியபடி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வு மேலிட இல்லம் நோக்கி நடந்தேன்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

   

11 comments:

  1. பாடல் விளக்கம் உட்பட அனைத்தும் அருமை ஐயா....

    ReplyDelete
  2. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் பற்றிச் சொன்ன இனம் இன்றைக்கு தன் தனித்தன்மை இழந்து மறந்து இலக்கேதும் இல்லாது பயணிக்கும் வேளையில் ஒன்றாய்ச் சமைத்து ஒன்றாய் உண்ணும் கனடியர் பண்பாடு என்னை நெகிழ வைத்தது.
    நாங்கள் பள்ளிச் சிறுவர்களாயிருந்த காலத்தில் விடுமுறை தினங்களில் ஒன்று சேர்ந்து ஆடு மாடு மேய்ப்போம். அப்போது எல்லோரும் அவரவர் வசதிக்கு ஏற்ப அரிசி, பருப்பு, மிளகாய் என்று ஏதாவது கொண்டு வந்து, ஆடு மாடு மேய்க்கும் முல்லை நிலப்பகுதியில் கூட்டாஞ்சோறு ஆக்கி உண்டு மகிழ்வோம்.
    தங்களது பதிவு என் பள்ளிக்காலத்தை கண்முன் நிறுத்தியது.

    ReplyDelete
  3. The concept of community garden is very interesting !!!

    ReplyDelete
  4. படிக்க, பார்க்க மனநிறைவளிப்பதாக உள்ளது உங்கள் பதிவு.

    ReplyDelete
  5. The concept is nice;we too had in those days;nowadays individual mentality is put in front:collective mentality is slowly disappearing in our Country.Anyway your highlights very much interesting

    ReplyDelete
  6. துளசி: அங்கு நடக்கும் சமுதாயத் தோட்டம், கலந்துண்ணல் எல்லாம் அழகாக நம் பாடல்களுடன் இணைத்து இங்குப் பரிமாறியது சுவையாக இருக்கிறது ஐயா.

    கீதா: மேற்சொல்லப்பட்டக் கருத்துடன், இந்தக் கலந்துண்ணல் கலாச்சாரம் எங்கள் கிராமத்தின் நினைவுகளை மீட்டெடுத்தது. ஊரில் எல்லாருக்கும் பொதுவாகக் கிராமத்து வீடு என்று ஒன்று உண்டு. அங்குதான் ஊரின் கோயில் நிகழ்வுகள் அல்லது ஏதேனும் வீட்டினரது நிகழ்வுகளுக்குச் சாப்பாடு கொடுக்கப்படும். எல்லோரும் தரையில் அமர்ந்து வாழை இலை போட்டு, தன்னார்வலர்கள் பங்கு பெற்று என்று...அருமையான தருணங்களை மீட்டெடுத்தது.

    அங்கு இதெல்லாம் அழகாக நடைபெறுகிறது.அவர்களிடமிருந்து நாம் கற்பதற்கு நிறையவே இருக்கிறது ஐயா..

    ReplyDelete
  7. கூடி உண்டால் கோடி நன்மை
    Commune lunch கட்டுரை நன்றாக இருந்தது
    உங்களது அனுபவங்கள் மற்றவர்களுக்கு பாடங்களாக அமைவது இதன் சிறப்பு
    சாப்பிடுவது என்பது வயிற்றை
    நிரப்பும் செயல் மட்டுமல்ல
    அது மனசுக்கும் சேர்த்தே
    இல்லையென்றால் கண்ணதாசன்
    இப்படி எழுதுவாரா?
    இன்று தேடிவரும்
    நாளை ஓடிவிடும்
    செல்வம் சிரித்தபடி அமுதிடுமா?
    நாம் தனியாக உண்ணும் போது
    வயிறு மட்டும்தான் நிரம்பும்
    தாயோ அல்லது இரண்டாவது
    தாயாகிய மனைவியோ அருகில் நின்று இன்னும் கொஞ்சம் இன்னும்
    கொஞ்சம் என்று நாம் மறுக்க மறுக்க அவர்கள் மணக்க மணக்க பரிமாறி உண்பது என்ன ஒரு அற்புதமான அனுபவமல்லவா?
    இந்த தலைமுறை இழந்து போன
    இன்பங்களுள் இதுவும் ஒன்று
    கணவனும் மனைவியும் கூட சேர்ந்து
    உண்பதில்லை
    குடும்பத்தோடு ஒரு வேளையாவது
    சேர்ந்து உண்ணாமல் என்ன வாழ்க்கை?
    இதிலே விருந்தோம்பல் என்பது
    எப்படி சாத்தியம்
    மறந்து வரும் மாண்புகளை
    நினைக்கவைத்த கட்டுரை
    மதியம் மீந்து போன சாதத்தையும்
    குழம்பையும் ஒன்றாக கலந்து
    குழந்தைகளை சுற்றி அமரவைத்து
    உருண்டைச்சோறு ஊட்டிய
    தாயாரை நினைவூட்டியது





    ReplyDelete
  8. நல்ல கருத்துக்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். காரணம் அனைவரும் ஒன்று கூடி சமைத்து உண்ணுவதே ஒரு மகிழ்ச்சி. தனியே உண்டால் பசிப்பிணி மட்டும் தீரும். ஆனால் உள்ளப்பிணி உருவாகும். ஆகவே தான் நம் நாட்டில் நிலாச்சோறு உண்ணும் வழக்கம் உண்டு. அதனால் மனமகிழ்ச்சி ஏற்படும். அன்னச்சத்திரம் வைத்து வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கியது நம் நாட்டில் தான். அவர்களை பசிப்பிணி மருத்துவன் எனக் குறிப்பிடுகிறோம். விருந்தோம்பல் பண்பில் நம்மவர்கள் சிறந்தவர்கள் எனச்
    சங்க இலக்கியம் சுட்டுகிறது. அன்றைய நாள் உணவைச் சமைத்து வைத்து உண்ணும் நேரத்தில் வீட்டுத்திண்ணையில் யாரேனும் பசியுடன் காத்திருக்கின்றனரா? என வெளியில் வந்து பார்த்துவிட்டு உண்ணச்செல்வார்கள். ஆனால் இன்று உண்ணுமுன் கதவை அடைத்துவிட்டு உண்ணுகின்றனர். கனடியர் கேட்டா தங்களை உண்ண அழைத்தது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு என வணக்கங்கள்.
    பேராசிரியர் லட்சுமணசிங்
    கரூர்

    ReplyDelete
  9. படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது ஐயா

    ReplyDelete