Wednesday, 26 July 2017

சிறுகதைமூன்றாம் பரிசு
முனைவர் அ.கோவிந்தராஜூ

    “கடலக்கா சட்னியும் தோசையும் இருக்குடா. சாப்டுட்டு போ”
“சரிங்கம்மா” என்று சொல்லிவிட்டு தெருக்குழாயில் குளிக்கப் போனான் குமரன்.

 “எப்பவும் மாதிரி இந்தவாட்டியும் குமரன்தான் முந்தி வரணு முருகா! மொதப்பரிச வாங்குணு முருகா” என்று வாய்விட்டு வேண்டிக் கொண்டாள் வடிவு.

  வடிவு பத்தாம் வகுப்பை எட்டிப்பிடித்தவள்.

  முத்து ஐந்தாம் வகுப்போடு சரி. வகுப்பறையில் தன்னை அடித்த ஆசிரியரின் பைக்கில் இருந்த  பெட்ரோல் டேங்கில் உப்பைப் போட, அதை எங்கிருந்தோ பார்த்த ஒருவன் ஆசிரியரிடம் வத்தி வைக்க, அந்த ஆசிரியர் அவனுடைய எலும்புகளை எண்ணிவிட்டார். அத்தோடு முடிந்தது அவன் படிப்பு.

   இருபது வயது ஆகியும் சாமி மாடாய்த் திரிந்தான். அரசுப்பள்ளி இரவுக் காவலராய் இருந்த அவனுடைய அப்பா ஒரு சாலை விபத்தில் இறந்து போக  கருணை அடிப்படையில் அதே வேலையில் சேர்ந்தான் முத்து.

   வேலை கிடைத்ததும் முத்துவுக்குக் கல்யாண ஆசை வந்தது. தன் மாமன் மகள் வடிவைக் கட்டிக்கொண்டான். அடுத்த ஆண்டே மகன் பிறந்தான். வடிவு ஆசைப்பட்ட மாதிரியே திருப்பூர் குமரன் நினைவாக குமரன் என்று பெயர் வைத்தார்கள்.

 “குமரா போயி அந்த முருகன் படத்தையும் ஒங்க அப்பா படத்தையும் தொட்டுக் கும்புடு. இது ஈரோடு மாவட்ட அளவுல நடக்கிற ஓட்டப்பந்தயம் நீதான் மொதல்ல ஓடியாரணு ஆமாம் பாத்துக்க” கறாராகச் சொன்னாள் வடிவு. இருவரும் அந்த ஒற்றை அறை வாடகை வீட்டைப் பூட்டிக்கொண்டு பள்ளியை நோக்கி நடந்தார்கள்.

   ஓடத்துறை ஓ.கு.தி.நினைவு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிப்பவன் குமரன். அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருப்பவள் வடிவு. குமரன் ஆறாம் வகுப்பு படித்தபோது ஒரு நாள் இரவில்  இடி விழுந்து மாண்டு போனான் முத்து. தலைமையாசிரியரின் பரிந்துரையால் கருணை அடிப்படையில் கிடைத்ததுதான் இந்த வேலை.

      அப்பா இல்லாத பிள்ளையாக இருந்தாலும் அம்மாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்னும் உறுதியோடு, ஒழுக்கத்துடனும் கட்டுப்பாடுடனும் படித்தான் குமரன். படிப்பில் சுமாராக இருந்தாலும் விளையாட்டில் முதலிடம் பிடிப்பதில் சுட்டியாக இருந்தான்.

   உடற்கல்வி ஆசிரியர் சங்கரப்பன் கொடுத்த தீவிரப்  பயிற்சியில் விளையாட்டில் திறமை மிக்க ஒரு பட்டாளமே உருவாகியிருந்தது. ஓட்டப் பந்தயம் என்றால் ஓ.கு.தி. பள்ளிக்குதான் வெற்றிக் கோப்பை என்பது எழுதாச் சட்டமாக இருந்தது. நகரப் பேருந்தில் கவுந்தப்பாடி சென்று அங்கிருந்து ஓர் இடைநில்லாப் பேருந்தில் ஈரோடு வ.உ.சி திடலை அடைந்தனர்.

    பெயர்களைப் பதிவு செய்துவிட்டு, திடலின் ஒருபக்கம் குமரன் உள்ளிட்ட ஐந்து விளையாட்டு வீரர்களையும் அழைத்துச் சென்று, போட்டிக்கு முன்னர் செய்யப்படும் உடல் தயார்நிலைப் பயிற்சி அளித்தார் சங்கரப்பன். சற்று நேரத்தில் கால் இறுதிப் போட்டிக்கான முதலாம் அழைப்பை அறிவித்தார்கள். அரங்கம் நிறைந்த கூட்டம்; ஆரவாரம் பொங்கி வழிந்தது.
   1500 மீட்டர் ஓட்டப்பந்தயம். தட களத்தில் மூன்றே முக்கால் சுற்று ஓடிவர வேண்டும். காலிறுதி, அரையிறுதி தகுதிச்  சுற்றுகளில் வென்று இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவர்களில் ஓ.கு.தி. பள்ளி மாணவர் இருவர்- குமரனும் அவனுடைய உயிர்த் தோழன் வெற்றிச் செல்வனும்; மற்றப் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் ஆறு பேர்.

   எல்லோரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட  ஓடு பாதையில் உரிய இடத்தில் ஓடுவதற்குத் தயாராக குத்துக் காலிட்டு பாயும் புலிக்கணக்காக நின்றனர். காற்றுத் துப்பாக்கியின் வெடிச் சத்தம் கேட்டதும் சீறிப் பாய்ந்து ஓடினார்கள். பார்வையாளர்களின் கைதட்டல் விண்ணைப் பிளந்தது. குதிரையைப் போல ஓர் ஒழுங்கு முறையில் தலையை ஆட்டிக் கொண்டே குமரன்  ஓடிக் கொண்டிருந்த அழகை எல்லோரும் ரசித்தனர்.

   நான்காவது சுற்றிலும் முதல் ஆளாக  ஓடிக் கொண்டிருந்த குமரன் தன்     நண்பனை  ஓரக்கண்ணால் தேடிப் பார்த்தான். தன்னைத் தொடர்ந்து இரண்டாவதாக வருவது தெரிந்தது.. இன்னும் ஒட வேண்டிய தூரம் சுமார் நூறு மீட்டர்  இருந்தபோது குமரன் ஓடிய ஓட்டத்தில் ஒரு தொய்வு தெரிந்தது. சங்கரப்பன் ஆசிரியர் கவனித்துவிட்டார். கண் மூடி திறப்பதற்குள் வெற்றிச் செல்வன் வெண் கோட்டை முதலில் தொட்டான்; குமரன் மூன்றாவதாக வந்து வெண் கோட்டைத் தாண்டி சுருண்டு விழுந்தான்.

    குமரன் மாலையில் வீடு திரும்பியபோது அவனுடைய அம்மா முகம் கொடுத்துப் பேசவில்லை. எப்போதும் முதல் பரிசு பெற்றவன் மூன்றாம் பரிசுடன் வந்ததும் அவள் இடிந்து போனாள். தன் கணவன் இறந்தபோது அழுது புலம்பியவள் அதற்குப்பிறகு இப்பொழுது அழுதாள்.

   வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தான் குமரன்.
“அம்மா அம்மா ஹெட்மாஸ்டர் வந்திருக்கார்”

  அவசரம் அவசரமாக தன் புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

 “வணக்கம் சார்” என்று சொன்னபடியே நாற்காலியை இழுத்துப் போட்டான் குமரன்.

  “வணக்கம் ஐயா வாங்கயா இப்புடி ஒக்காருங்கயா” என்று கை கூப்பினாள் வடிவு.

  இலேசாக விரிசல் விட்டிருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் கவனமாக அமர்ந்தார் தலைமையாசிரியர் அப்பாவு.

  “தெரியும். நீங்க சோகமாத்தாத்தான் இருப்பீங்கன்னு”

 “ஆமாங்கயா. நீங்களே சொல்லுங்க எப்பயாச்சும் குமரன் மொதப்பரிசை கோட்டவுட்டுப்புட்டு வந்திருக்கானா சொல்லுங்க ஐயா” –வெடித்தாள் வடிவு.

 குமுறிக் குமுறி அழுதாள்.  குமரன் மவுனமாக நின்றான்.

  “இங்க பாருங்கம்மா... இப்ப என்ன ஆச்சின்னு இப்படி அழுகுறீங்க. முதல் பரிசுன்னா ஒசத்தி, மூணாம் பரிசுன்னா கேவலமா?  எப்பவும் ஒருத்தன் முதல் பரிசாவே வாங்க முடியுமா? நாட்டுல வல்லவனுக்கு வல்லவன் இருப்பான்ல.  விளையாட்டுல ஒரு நேரம் ஜெயிக்கிறதும் ஒரு நேரம் தோக்கறதும் இயல்புதாம்மா.

  ஒங்களுக்கு ஒண்ணு தெரியுமா? பாரதியாரு சின்னப் பையனா இருந்தப்ப ஒரு போட்டியில கலந்துகிட்டு பாட்டெழுதி படிச்சாரு. மூணாம் பரிசுதான் கெடச்சிது. மொதப் பரிசு வாங்கின பாட்டு என்னாச்சின்னே யாருக்கும் தெரியல. மூணாம் பரிசு வாங்குன செந்தமிழ் நாடென்னும் போதினிலேங்கிற பாட்டுதான் இப்பவும் நெலச்சி நிக்குது.

 அந்த  மொதப்பரிசு வாங்குன ஆசாமியோட பேரு ஊரு யாருக்காவது தெரியுமா? மூணாம் பரிசு வாங்குன பாரதியாரைத்  தெரியாதவங்க யாராவது இருக்காங்களா சொல்லுங்க.”

  வடிவுக்கு ஞானோதயம் வந்ததற்கான பொறி தட்டியது.  மகனைக் கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டாள்.

  வந்த வேலை  முடிந்தது என்னும் நிம்மதியுடன் விடைபெற்றார் தலைமையாசிரியர் அப்பாவு.

   


11 comments:

 1. ஐயா, கற்பனைக் கதைகளைக் கொண்டு தன்னம்பிக்கை எனும் போலிப்புத்தகம் எழுதும் இவ்வுளகில், உண்மையை எடுத்துரைக்கும் உங்கள் பாங்கு எப்பவுமே தனிதான். சுயவிளம்பரம் தேடி பல ஆயிரம் செலவு செய்யும் மனிதர்களுக்கு சாட்டையடியாய் அடுத்த தலைமையாசிரியர் பற்றிக் குறிப்பிடுவது உங்கள் தனிச்சிறப்பு. நன்றி ஐயா.அந்த இளைஞர் இப்போது என்னவாக உள்ளார் என்று குறிப்பிட்டால் இன்னும் ஏற்றமாக இருக்கும்.

  ReplyDelete
 2. தோல்வியிலிருந்து மீள செந்தமிழ் நாடெனும் போயினிலே" பாடல் வரலாற்றை சொல்லிய விதம் அருமை ஐயா.

  ReplyDelete
 3. Your conclusion of the story hasn't explained why Kumaran wantedly behind his co-runners.

  ReplyDelete
 4. அருமை! பாரதியை உதாரணமாகக் காட்டிச் சொன்னது அருமை அப்படியே புல்லரித்துவிட்டது ஐயா! உண்மையிலேயே மெய் சிலிர்த்தது!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 5. இனியன் சார்....நீங்கள் எப்பொழுதும் யாரையும் எந்த சூழ்நிலையிலும் ஊக்கப்படுத்துபவர் என்பதை உங்கள் தலைமையில் நான் பள்ளியில் படிக்கும்போதே உணர்ந்துள்ளேன்...அதை இன்றுவரை நீங்கள் தொடர்ந்து வருகிறீர்கள்..தொட்டில் பழக்கம்தான் இறுதிவரை என்று கூறுவார்கள்..அந்த வகையில் ஆரம்பத்திலிருந்தே உங்களுடைய நல்லெண்ணமும் சேவையும் தொடர்கிறது..இது வெற்றுப் புகழ்ச்சியல்ல ...உங்களுடைய தலைமையின் கீழ் வைரவிழா மேனிலைப்பள்ளியில் படித்த அந்த ஆறு ஆண்டுகளும் என் பள்ளி நினைவில் பசுமையான ஆண்டுகளாக உள்ளத்தில் நிழலாடுகிறது...நன்றி ..நன்றி...

  ReplyDelete
 6. பாரதியின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே...." பற்றிய செய்தி புதியது எனக்கு. 'கல்லாத உலகளவில்' இதுவும் ஒன்று போலும்....!

  ReplyDelete
 7. அருமையான தன்னம்பிக்கைக் கதை. ஓ.கு.தியாகராஜன் அவர்கள் நினைவாக உங்கள் கதையில் ஓ.கு.தி நினைவுப் பள்ளியை உருவாக்கி விட்டீர்கள். கதை மாந்தர்களின் கதைக்களம் அருமை. ஏழைக்குடும்பப் பின்னனியைப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். மாணவர்கள் மத்தியில் போட்டி மனப்பான்மையோ அல்லது தோல்வியினால் துவண்டு போவதோ கூடாது என்ற நம்பிக்கையினை ஊட்டகூடியவராக பள்ளித்தலைமை ஆசிரியர் வருகிறார். இது மூன்றாம் பரிசுக் கதையல்ல முதல் பரிசுக்கான கதை.
  முனைவர் ரா.லட்சுமணசிங்
  பேர்ராசிரியர்
  அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
  கரூர் - 5

  ReplyDelete
 8. Today I have seen ur wonderful story. A teacher is a light for the society. U havd proved. Excellent.Judge M.Pughazhendi

  ReplyDelete