Monday 31 July 2017

எங்கும் திரியும் எந்திர விலங்குகள்

   ஒரு வாரமாக ஒட்டாவா நகரம் முழுவதும் இதே பேச்சுதான். இரண்டு எந்திர விலங்குகள் செய்யும் அட்டகாசம் உண்மையில் கொஞ்சம் அதிகம்தான். இவை தெருக்களில் நடமாடும்போது கார்கள் செல்ல முடியாது. பேருந்துகள் கூட சற்றுத் தடுமாறி தடம் மாறிச் செல்கின்றன.

   இந்த இரண்டு விலங்குகளையும் காண்பதற்குக் கூட்டம் அலைமோதுகிறது. அம்மா பின் தொடர, அப்பா தன் குழந்தையை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு தூரத்தில் நின்று காண்பிக்கிறார். அவர்களுடன் வந்த நாய் குழப்பத்தில் அண்ணாந்து பார்க்கிறது; திடீரென குரைக்கிறது. ஒரு சிறுவன் மரத்தின் மீது ஏறி நின்று பார்க்கிறான். சிறுவர்களுக்கே உரித்தான ஆர்வம் எல்லா நாடுகளிலும் ஒன்றுதானே?  இந்த விலங்குகள் தம் வாய் வழியாக தீயைக் கக்குவதையும், மூக்கின் வழியாக புகை விடுவதையும் மொத்த மக்கள் கூட்டமும் வாய் பிளந்து கண் கொட்டாமல் பார்க்கிறது.

   “இந்த எந்திர விலங்குகளை(Robotic animals) குழந்தைகள் தம் சொந்தக் கண்களால் பார்க்கட்டும்; பெரியவர்கள் எல்லோரும் குழந்தைகளின் கண்களால் பார்க்கட்டும்’ என்று உள்ளூர் நாளேடுகள் உசுப்பேற்றி விடுகின்றன.

   இந்த இரு விலங்குகளும் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் மிகுபுனைவு (Fantasy) கதைகளில் வருவன. கற்பனையில் பார்த்த வித்தியாசமான விலங்குகள் வீதிகளில்  வந்தால் அவர்களுக்கு எப்படியிருக்கும்?

  இதற்கு மேலும் உங்கள் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை.


    
A selfie with Horse-Dragon
ஒன்று குதிரைத் தலையைக் கொண்டது; ஆனால் நீண்ட கிளைகள் கொண்ட கொம்புகள் இருக்கின்றன. கட்டடத்தின் நான்காம் மாடிவரை எட்டிப்பார்க்க வசதியாக நீண்ட கழுத்தும். டையனசரை நினைவூட்டும் கால்களும் உடையது. கூடுதலாக இரண்டு மிகப்பெரிய சிறகுகள் உள்ளன. அவற்றை அவ்வப்போது விரிக்கின்றன. பார்ப்பதற்கு வியப்பூட்டும் உடல் அமைப்பினைக் கொண்ட இவ் விலங்கின்   வாயிலிருந்து இரண்டு நிமிடத்துக்கு ஒருமுறை  தீ வருவதும், மூக்கிலிருந்து புகை வருவதும் அழகோ அழகு. பெரிய கண்கள்; நடுவில் வட்டவடிவில் செவ்விழிகள். இமைகள் மூடுவதும் திறப்பதும் மிகவும் இயல்பாக உள்ளது. இதுதான் ஹார்ட்ஸ் ட்ரேகன்
(Horse Dragon) எனப்படும் விலங்கு. ஒரு பொறியாளர் குழு நகரும் கிரேனிலிருந்து இதற்கு உயிர் கொடுக்கிறது.

   மற்றொன்று, குமோ என்னும் செல்லப் பெயர் கொண்ட எட்டுக்கால் பூச்சி. அதாவது ஆங்கிலத்தில் ஸ்பைடர் எனப்படும் சிலந்தி. எட்டு நீண்ட கணுக்கால்களையும் இரண்டு உணர்கொம்புகளையும்(antenna) கொண்டது. ஒவ்வொரு காலும் இருபது அடி நீளத்திற்குக் குறையாமல் இருக்கும். நம்முடைய காலில் மடக்க வசதியாக ஒரு கணுதான் உள்ளது. ஆனால் இதற்கு மூன்றுக்கும் மேற்பட்ட  கணுக்கள் உள்ளன. இப் பூச்சியின் முதுகில் நான்கு பேர், அடி வயிற்றில் தொங்கியபடி எட்டுப் பேர் என பன்னிரண்டு பொறியாளர்கள் அதை இயக்குகிறார்கள்.

    ஒரு கட்டத்தில் இந்த இரண்டு ‘ஜீவன்’களும் சந்தித்துக் கொண்ட காட்சியை மக்கள் வெகுவாக இரசித்தார்கள். முதலில் பத்து மீட்டர் தூர இடைவெளியில் நின்று ஒன்றை ஒன்று முறைத்துப் பார்த்தன. ட்ராகன் தீயைக் கக்க, சிலந்தி தண்ணீரைப் பீய்ச்சி அடித்தது. பிறகு இரண்டும் வெண்புகையை வெளியிட்டன. இடையிடையே ட்ரேகனின் கர்ஜனை வேறு. அதன் பிறகு இரண்டும் என்ன நினைத்ததோ தெரியவில்லை நெருங்கி வந்து கை குலுக்கிக் கொண்டன இல்லை இல்லை கால் குலுக்கிக் கொண்டன.

      இந்தக் கூத்து நடக்கும்போது ஆறு கலைஞர்கள் ஒரு முப்பதடி உயரத்தில் கிரேனில் உட்கார்ந்துகொண்டு சூழலுக்குப் பொருத்தமாகவும் செவிகளுக்கு இதமாகவும் மேற்கத்திய இசையைத் தந்தது கூடுதல் சிறப்பு. பிறகு சிலந்தியார் முன்னே செல்ல, குதிரைத் தலையார் பின்னே செல்ல, இலட்சக் கணக்கான மக்கள் தெருவின் இருமருங்கும் நின்று ஆராவாரம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும். அக் கூட்டத்தில் ஒருவனாக நின்று பார்த்ததால் இதைச் சொல்கிறேன்.

    நள்ளிரவு வரை இவ் விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. ட்ரேகன் மட்டும் சாலையின் நட்ட நடுவில் அப்படியே ‘தூங்கி’ விடுகிறது. சிலந்தியார் சாலையோரம் உள்ள ஒரு பெரிய வீட்டுக் கூரையின்மேல் தூங்குவார். மறுநாள் காலை பத்து மணிக்குதான் விழித்தெழுகின்றன.






நீங்கள் இங்கே  காணொளி யாகவும் பார்க்கலாம்.
    
வட அமெரிக்க நாடுகளில் முதல் முறையாக இத்தகைய எந்திர விலங்குகளை இங்கே ஒட்டாவா நகரில்  காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த மூன்று நாள் கூத்துக்கு அரசு மக்கள் வரிப் பணத்திலிருந்து நான்கு மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளது. இந்திய பண மதிப்பில் சொன்னால் இருபது கோடி ரூபாய்!

  இவர்களிடத்தில் சந்தனம் நிறைய இருக்கிறது; எங்கு வேண்டுமானாலும் பூசிக் கொள்கிறார்கள்.

ஆனால் நாம்..............
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

   

6 comments:

  1. தங்களது கடைசி குறும்பான வசனத்தை மிகவும் இரசித்தேன் ஐயா
    பகிர்வுக்கு நன்றி
    காணொளி காணச் செல்கிறேன்.
    - கில்லர்ஜி

    ReplyDelete
  2. இவர்களிடத்தில் சந்தனம் நிறைய இருக்கிறது; எங்கு வேண்டுமானாலும் பூசிக் கொள்கிறார்கள்.
    ஆனால் நாம்// உண்மைதான்....ஆனால் நம் நாட்டிலும் நிறையவே சந்தனம் இருக்கிறது ஐயா. ஆனால் அதை அரசியல்வியாதிகள் நேர்மையாகக் கையாளாமல் சூறையாடுவதாலும், சட்டம் விதிகளின் படி பின்பற்றப்டாததாலும், ஒழுங்குமுறை இல்லாததாலும், மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததாலும் சரியாகப் பூசப்படுவதில்லை.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  3. சந்தனம் நிறைய இருக்கிறது! இருந்தாலும் அதை அனுபவிக்க அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

    காட்சியைக் கண்டு ரசிக்க இதோ காணொளியின் சுட்டியை சொடுக்குகிறேன்..

    ReplyDelete
  4. எவ்வளவு செலவு செய்தாலும் மனிதனுக்கு மகிழ்ச்சிதானே முக்கியம். - நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete