Monday 21 May 2018

அவசியமா ஆடம்பர திருமணங்கள்?


   கடந்த இரு பத்தாண்டுகளில் ஆடம்பர திருமணங்கள் அதிகரித்து வந்துள்ளன. இந்த வகைத் திருமணங்களால், திருமண வீட்டாரின் செல்வச் செழிப்பைப் பறைசாற்றும் பயனைத்தவிர வேறு எந்தப் பயனும் இல்லை என்பதே எனது கருத்தாகும்.

    அண்மையில் என் நண்பரான பெரும் தொழிலதிபர் ஒருவர் நேரில் வந்து அவர் வீட்டுத் திருமணத்திற்கு அன்புடன் அழைத்தார். அவர் தந்த அழைப்பிதழைப் பார்த்து அசந்து போனேன். சுமார் இருநூறு ரூபாய் விலையுடைய பொன்னிற அழைப்பிதழ். அதன் எடை குறைந்தது கால் கிலோ இருக்கும்!
photo courtesy: google

  அழைப்பினை ஏற்று, அத் திருமண விழாவிற்குச் சென்றிருந்தேன். மிகப் பெரிய மண்டபம். அது தேவலோகம்போல் காட்சியளித்தது. நிகரில்லாத மின்விளக்கு அலங்காரம்! விருந்தினர் அமரும் இருக்கைகள்கூட அலங்கார ஆடைகளை அணிந்திருந்தன. என்னுடன் எழுபதுகளில் கல்லூரியில் படித்த நண்பர் வீட்டுத் திருமணம் அது. மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆசையில் சென்றால், அந்தப் பெருங்கூடத்தில், பெருங்கூட்டத்தில் அவரைச் சந்திப்பதே பெரும்பாடாகி விட்டது.

   மணமக்கள் மேடையை நோக்கி வந்தபோது, வழக்கமான நாதசுர இசைக் குழுவினர் முன்னே வரவில்லை. மாறாக எந்திரன் திரைப்படத்தில் வந்த எந்திரன்போல் வேடமணிந்தவர்கள் கைகளில் துப்பாக்கியுடன் அணிவகுத்து வந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் விலகிக்கொள்ள, தேவதைகள் போல் வேடம் தரித்த இளம்பெண்கள் மேற்கத்திய இசைக்கேற்ப நடனமாடி முன்னே சென்றனர்.

     சரிதான் காலமாற்றம் என்று எண்ணியபடி, மணமக்களுக்கு வாழ்த்துக் கூற ஒரு நூலும் கையுமாய் சென்றேன்; நின்றேன் நின்றேன் நின்று கொண்டே இருந்தேன். அப்படியொரு கூட்டம். முன்னே செல்ல முயன்றும் முடியவில்லை. காரணம் மணமேடைக்கு எதிர்ப்பக்கத்திலிருந்து தடாலடியாக வந்த மி.மு.மனிதர்கள் மேடையை அவ்வப்போது ஆண்டு கொண்டிருந்தார்கள். எப்படியோ என் முறையும் வந்தது. வாழ்த்தி மகிழ்ந்தேன். ஜருகண்டி சொல்லாத குறைதான்.

     பெரிய பெரிய பரிசுப் பொருள்களுடன் சென்றவர்கள் ஒரு நூலுடன் சென்ற என்னை  ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்கள். மண விழாவில் நூல்களைப் பரிசளிப்போர் பலராகவும், பயன்படாப் பொருள்களைப் பரிசளிப்போர் சிலராகவும் மாறும் காலம் எப்போது வருமோ?

    ஒருவழியாக மணமக்களை வாழ்த்திவிட்டு வழுக்கு நிலத்தில் பார்த்து நடப்பவனைப் போல மெல்ல இறங்கினேன். தரையில் குறுக்கும் நெடுக்குமாய் ஏதோ வயர்கள் கிடந்தன.  முன்னால் சென்ற ஓர் அம்மையார் அந்த வயரில் கால் தடுக்கி விழ, சிலர் உடுக்கை இழந்தவன் கைபோல ஓடிச்சென்று அவரைத் தூக்கி நிறுத்தினார்கள்.

  சந்தித்த ஓரிரு நண்பர்களிடமும் ஒரு வார்த்தைகூட பேசி மகிழ முடியாதபடி, காதைப் பிளக்கும் திரையிசை நிகழ்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது.

   பிறகு சாப்பிடச் சென்றேன் யாரும் அழைக்காமலேயே. அங்கேயும் ஒரு திருவிழாக் கூட்டம் அலை மோதியது.. ஐம்பது வகையான உண்பொருள்களை அளித்தனர். அவற்றுள் பெயர் தெரியாத, பார்த்தறியாத, சுவைத்தறியாத உண்டி வகைகள் பலவாக இருந்தன. இத்தாலிய உணவு வகைகளும் இருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நம்மிடம் வரிசைக் கலாச்சாரம் என்பது அறவே இல்லாமையால் அங்கும் தள்ளுமுள்ளுகளில் சிக்கி ஒருவழியாக உண்டு முடித்தேன். Eat what you take and take what you eat என்ற கோட்பாட்டை மதிப்பவன் என்பதால் எந்த உணவுப் பொருளையும் நான் வீணாக்கவில்லை.

   வீட்டில் உள்ள உணவுக் கட்டுப்பாட்டை ஒதுக்கிவிட்டு இனிப்புகளை இனம் வாரியாக சுவைத்தவர்கள் பலராக இருந்தனர். பலரும் ஆசையில் கண்டதையெல்லாம் வாங்கி தட்டில் பரப்பிக்கொண்டு, பிறகு உண்ண முடியாமல் தூக்கி எறிந்ததைக் கண்டு மனம் பதைத்தேன். சராசரியாக ஒருவர் உண்ணும் ஒருவேளை உணவின் மதிப்பு ஆயிரம் ரூபாய் என்று பேசிக்கொண்டார்கள்!

    திருமண மண்டபத்திற்கு நான் காரில் சென்றேன். என் காரை இடைமறித்து ஓர் ஓட்டுநர் கடத்திச் சென்றார். பின்னர் நான் மண்டபத்தைவிட்டு வெளி வாயிலுக்கு  வந்ததும் காரை மீண்டும் ஓட்டிவந்து கொடுத்தார். இந்த ஏற்பாட்டிற்கு ஆங்கிலத்தில் வேல பார்க்கிங் (vallet parking) என்று சொல்வதுண்டு. இதற்குத் தமிழில் நல்லதொரு சொற்றொடரை உருவாக்க வேண்டும். எதிர்பாராத மழையால், என்னிடம் கார் வந்து சேர ஒரு மணி நேரம் ஆயிற்று. மூவாயிரம் நாலாயிரம் கார்கள் குவிந்தால் அவர்களால் என்ன செய்யமுடியும்? பொறுமையிழந்த விருந்தினர் சிலர் அந்த ஓட்டுநர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். கார் கைக்குக் கிடைத்தாலும் வாகன நெரிசலால் ஐந்நூறு மீட்டர் தூரத்தில் இருந்த முதன்மைச் சாலையைப் பிடிக்க மேலும் ஒரு மணி நேரம் ஆயிற்று.  

    வீடு வந்து சேர்ந்தபோது ஏதோ ஒரு சாகச செயலில் ஈடுபட்டுச் சாதனை நிகழ்த்தியது போன்ற உணர்வு ஏற்பட்டது.
  


   

8 comments:

  1. Nicely narrated incident. Wish there would be a change in this social stigma.

    ReplyDelete
  2. சிறப்பாகக் கூறியுள்ளீர்கள் ஐயா. அண்மையில் உறவினர் இல்லத் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். மேடையில் மேஜிக் வித்தைகள் தொடங்கி பல கலை நிகழ்ச்சிகள். எங்கு பார்த்தாலும் கூத்து. சத்தம். ஆடம்பரம். ஆனால் அனைத்துமே ரெடிமேடாகத் தோன்றியது எங்களுக்கு.

    ReplyDelete
  3. காலம் மாறிப்போச்சே!

    நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  4. துளசி: எங்கள் கேரளக் குடும்பங்களில் இத்தனை ஆடம்பரம் அத்தனை நுழையவில்லை. அதாவது எங்களைப் போன்ற குடும்பங்களில். ஏன் ஒரு மந்திரி வீட்டுக் கல்யாணம் கூட மிக மிக எளிதாக நடந்தது.

    கீதா: ஐயா அருமையான பதிவு. எனக்கு இப்போதைய திருமணங்களுக்குச் செல்வதை விட அவர்கள் வீட்டிற்கு நிதானமாகச் சென்று வரலாம் என்று தோன்றும். மிக மிக ஆடம்பரத் திருமணங்கள். சாதாரணக் குடும்பங்களே இப்போதெல்லாம் 20 லட்சம் வரை செலவழிக்கிறார்கள். பெண்கள் வீட்டினரும் சரி பையன் வீட்டினரும் சரி. அதே இது படிப்பு என்று வந்தால் ஐயோ இவ்வளவு செலவா என்று யோசிக்கிறார்கள். இது எனக்குப் புரியாத ஒன்று. அது போன்று உணவு மிக மிக வீணடிக்கப்படுகிறது. பாகிஸ்தான் கொண்டு வந்தது போல் ஒன் டிஷ் லா கொண்டுவந்தால் நல்லதோ என்றும் தோன்றுகிறது.

    //சராசரியாக ஒருவர் உண்ணும் ஒருவேளை உணவின் மதிப்பு ஆயிரம் ரூபாய் என்று பேசிக்கொண்டார்கள்!// வேதனை. தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்! நினைவுக்கு வந்தாரா ஐயா!!?

    ஐயா இப்போதெல்லாம் ட்ரெய்லர் என்று கல்யாண தேதி நினைவு படுத்தி வீடியோ செய்து அனுப்புகிறார்கள். அதில் திரைப்படங்களுக்கு வரும் முன்னோட்டக் காட்சிகள் போல மணமகன், மணமகள் நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட கதாநாயகன் கதாநாயகி போன்ற காட்சிகள் எல்லாம் படமாக்கப்படு அந்த முன்னோட்டக் காட்சிகளை அனுப்புகிறார்கள். அதற்கே 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை. அப்புறம் ஆல்பம் மட்டுமே 1.5 லட்சம்.

    சரி இத்தனையும் செய்துவிட்டு கல்யாணம் முடிந்த 6 மாதங்களில் பிரிவும் நடக்கிறது அது இன்னும் வேதனை ஐயா...கேமரா ஹெலிகாப்டர் கேமரா தான் இப்போது...பறந்து பறந்து படம் பிடிக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. "பாகிஸ்தான் கொண்டு வந்தது போல் ஒன் டிஷ் லா கொண்டுவந்தால் நல்லதோ என்றும் தோன்றுகிறது."
      அடடே இது புதிய செய்தியாக உள்ளதே!

      Delete
  5. நண்பர் திருமணத்திற்கு செனறுவந்த நிகழ்வையே ஒரு சாகசம் செய்த அளவிற்கு அனுபவங்கள் அமைந்ததாக் குறிப்பிட்டது நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. ஓர் அறிவார்ந்த வலைப்பதிவர் அவ்வப்போது என் வலைப்பக்கம் வருவதும் அரிய கருத்துகளைத் தருவதும் நான் செய்த பேறு. நன்றி திரு.முத்துசாமி அவர்களே.

      Delete