Thursday, 21 June 2018

நரேந்திர மோடியும் நானும்

   காலை எழுந்தவுடன் தோட்டம் பின்பு வியர்வை தரும் மெல்ல ஓட்டம் என்று இருக்கும் நான் இன்று காலை தொலைக்காட்சிப் பெட்டியின் முன் ஒரு விரிப்பை விரித்து ஒரு மணி நேரம் யோகா செய்தேன் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

    உலக யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி அவர்கள் குடிமக்களுடன் சேர்ந்து யோகா செய்யப் போவதாக கடந்த சில நாள்களாக வானொலியில் அறிவித்தார்கள். சரி அவர் செய்யும் ஓர் உருப்படியான செயல் என்ற எண்ணத்துடன் காலை ஆறு மணிக்குத் தொலைக்காட்சியை உசுப்பினேன்.

    உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் என்னும் ஊரில் கூட்டு யோகா பயிற்சித் திடல் களைகட்டி இல்லை இல்லை தலைகட்டி காணப்பட்டது. ஒரு பத்து ஏக்கர் பரப்பில் பல்லாயிரக் கணக்கான இளைஞரும் இளம்பெண்களும் முழுக் கால்சட்டை, வண்ண தொள தொளா பனியன்களோடு யோகா பாயை  விரித்து வரிசைகட்டி நின்றார்கள்.

   மாநில முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், மோடி ஆகியோர் மேடையில் தோன்றினார்கள். முதல் இருவரும் எழுதி வைத்திருந்த தாளைப் படிக்க மொத்தக் கூட்டமும் நெளிந்தது. அடுத்து வந்த பிரதமர் வழக்கம்போல் எந்தக் குறிப்புத் தாளும் இல்லாமல் இந்தியிலும் ஆங்கிலத்திலும் யோகா செய்வதன் நன்மைகள் குறித்து உற்சாகமான உடல்மொழியுடன் உரையாற்றினார். கூட்டத்தினர் இடையிடையே கைதட்டி ஆராவாரம் செய்தனர்.    உரை முடிந்ததும் நேரே மேடையின் முன்புறம் இறங்கிச் சென்று குடிமக்களோடு தானும் ஒருவராய் நின்று யோகா, தவம், மூச்சுப்பயிற்சி முதலியவற்றை முழுமூச்சாகச் செய்தார். முறையாகவும் செய்தார். நெற்றி வியர்வையை அவ்வப்போது துண்டால் துடைத்துக் கொண்டார்.

     வழக்கமாக நிழல்போல் தொடரும் மெய்க்காப்பாளர் கூட அவர் யோகா செய்யும்போது அருகில் நிற்கவில்லை.

   நான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியிடம் நேரடியாக யோகா கற்று இன்றளவும் செய்து வருகிறேன். அதன் பயனை அனுபவித்து மகிழ்கிறேன். நாளும் அரை மணி நேரம் ஒதுக்கி யோகா செய்வதால் மனவளமும் உடல்நலமும் வாய்க்கப் பெறுவது உறுதி.

   வெற்றுப் பேச்சு, வீண் அரட்டை, வீணாய்ப்போன தொலைக்காட்சி, வெட்டி அலைப்பேசி இவற்றுக்கெல்லாம் நமக்கு நேரம் இருக்கும். ஆனால் யோகா செய்ய நேரம் இருக்காது.

   சரியாகப் படிக்கவில்லை என்றால், அந்தக் காலத்து ஆசிரியர் காதைப் பிடித்துக் கொண்டு முப்பது தோப்புக் கரணம் போடச் சொல்வார். அதுவே ஒரு யோகாசனப் பயிற்சிதான். வெளி நாடுகளில் இப்போது இதற்கு Brain Activating Yoga என்று ஒரு பெயரைச் சூட்டி, பணம் வாங்கிக்கொண்டு சொல்லித் தருகிறார்கள்.


   எது எப்படியோ இன்று பிரதமர் மோடி யோகா செய்யும் ஆர்வத்தைத் தூண்டி விட்டுள்ளார். இதற்காக அவரை நாம் பாராட்டலாம்.
Photo coutesy: DD Pothigai

10 comments:

 1. //அவர் செய்யும் ஓர் உருப்படியான செயல்//

  இதையாவது நாம் பாராட்டத்தான் வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி : இதையே தான் நானும் நினைத்தேன்...

   Delete
 2. படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை

  ReplyDelete
 3. படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை

  ReplyDelete
 4. ஓர் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அண்ணன் இனியன் எழுதியதே என்றாலும் மோடி பற்றிய செய்தியை படிக்க நான் தயாராயில்லை. ஆனாலும் "அவர் செய்யும் ஓர் உருப்படியான செயல்" என்கிற வரி எனக்கு சமாதானம் சொல்லி பரவாயில்லை படி என்றது.
  எதைச் செய்தாலும் செய்வினை திருந்தச் செய்யும் அண்ணனின் பதிவு நன்றாகவே இருந்தது.
  இந்தப் பதிவு, பாடு பொருளில் பழுதிருந்தாலும் பாடும் கவி அதனை சிறப்பாக மாற்றி அமைக்க முடியும் என்பதற்கு ஒரு நற்சான்று.

  ReplyDelete
 5. போகப்போக பிரதமரின் உருப்படியான காரியங்கள் தெரிய வருமோ?

  ReplyDelete
 6. அருமையான கண்ணோட்டம்

  ReplyDelete
 7. பயனுள்ள பழக்கத்தை ஆரம்பிக்க கருத்து கூறியுள்ள விதம் அருமை.

  ReplyDelete
 8. அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் ஸ்கை / உடற்பயிற்சி / காயகல்பம் எல்லாம் முறையான யோகப் பயிற்சிகள் ஆகும். இவற்றில் சிலவற்றை நானும் பயின்று வருகிறேன். உலக யோகா தினம் பற்றிய அருமையான பதிவு.

  ReplyDelete