Wednesday, 9 January 2019

அயலக இந்தியர் தினம்

   இன்று (ஜனவரி 9) அயலக இந்தியர் தினமாகும். மகாத்மா காந்தி 1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டார். இந்த நாளின் சிறப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி ஒன்பதாம் நாள் அயலக இந்தியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
   வெளி நாடுகளில் சுமார் இருபது மில்லியன் இந்தியர் வாழ்வதாக ஓர் ஆய்வறிக்கை சொல்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்மவர்கள் கடல்கடந்து சென்று வெளிநாடுகளில் வாழ்ந்தார்கள். இதைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் உறுதி செய்கின்றன. அக்காலத்தில் கடல் கடந்து செல்ல மகளிர்க்கு உரிமை இல்லை என்று கூறினார் தொல்காப்பியர். கால மாற்றத்தில் அத் தடை தவிடு பொடியானது.

    நம்மவர்கள் வெளிநாடுகளில் உழைத்து ஈட்டிய பெரும் செல்வத்துடன் கொடிகட்டிப் பறக்கிறார்கள். இந்தியாவில் வாழும்போது அடுத்த வீட்டுக்காரரை அறிந்திராத இவர்கள் வெளிநாட்டில் வாழும்போது தம் இனத்தாரை, தம் மொழியாரைத் தேடிப்பிடித்து அறிமுகமாகி இணைந்து தம் கலாச்சாரத்தைக் காக்க கோவில் கட்டுதல், பள்ளிகள் அமைத்தல், கலாச்சார விழாக்களைக் கொண்டாடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

    முயற்சியால் ஈட்டிய பொருளை இந்தியாவில் பேரிடர் நிகழும் போதெல்லாம் கொட்டிக் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்தியா திரும்பி நாட்டின் வளர்ச்சிக்காக தம் அறிவாற்றலையும் பொருளையும் செலவிடுகிறார்கள்.

     எடுத்துக்காட்டாக, எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் நாடு திரும்பி இளைஞர் சக்தியை ஒன்றிணைத்து வெற்றிகண்டார். பழனி ஜி.பெரியசாமி அவர்கள் நாடு திரும்பி கல்வி நிலையங்கள், சர்க்கரை ஆலைகள் பலவற்றை நிறுவி நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியுள்ளார்.

    என்னுடைய தலைமாணாக்கரில் ஒருவரான டாக்டர் அ.அன்பரசு இலண்டன் சென்று மருத்துவம் படித்து, அங்கேயே பணியாற்றியவர். தன் பெண் மக்கள் தமிழ்க் கலாச்சாரத்தோடு வாழ வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் நாடு திரும்பி, கோவை மாநகரில் வசிக்கிறார். அரன் டயக்னாஸ்டிக் இமேஜிங் என்னும் ஸ்கேன் மையத்தைத் திறம்பட  நடத்துகிறார். அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று ஆய்வுக் கட்டுரைகளை அரங்கேற்றுகின்றார்.

    மற்றும் ஒரு மாணவர் – என் மாணவர் – டாக்டர் க.கண்ணன். இவர் இன்று கரூர் மாநகரில் உச்சத்தைத் தொட்ட நிலையிலும், பெருக்கத்து வேண்டும் பணிவு என்பாரே வள்ளுவர், அந்தப் பணிவையே அணிகலனாய்ப் பூண்டு வாழ்வாங்கு வாழ்கிறார். இவரும் இலண்டனில் படித்தவர்தான். கலாச்சாரப் பற்றின் காரணமாக நாடு திரும்பியவர்.

     என்னுடைய மற்றொரு மாணவர் டாக்டர் பி.எஸ்.சந்திரசேகர். இவர் இலண்டனில் பதினைந்து ஆண்டு காலம் மருத்துவப் பணி புரிந்தவர். பின்னர் நாடு திரும்பி இப்போது கோவை நீலாம்பூரில் புகழ் பெற்று விளங்கும் ராயல் கேர் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றுகிறார். அவர் குழந்தைகளிடம் பேசும் பாங்கு தனித்துவமானது. அவர் பேசும்போதே குழந்தையின் நோயில் பாதி சரியாகிவிடும்.

   நான் சொல்லவரும் செய்தி இதுதான்:

   நம்மவர்கள் எந்த நாட்டில்  வாழ்ந்தாலும் சொந்தக் கலாச்சாரத்தைப் பின்பற்றி அடுத்தத் தலைமுறையினருக்குச் சிந்தாமல் சிதறாமல் கொடுக்க வேண்டும். தம் நேரத்தையும், அறிவாற்றலையும் கொஞ்சமாவது நம் நாட்டுக்குப் பயன்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    ஆயிரம் குறைகள் நம் நாட்டில் இருப்பினும் இந்தியர் என்பதில் என்றும் நமக்குப் பெருமைதானே?


4 comments:

 1. செய்தி மிகவும் சிறப்பு...

  ReplyDelete
 2. அயலக நாளுக்கு அருமையான செய்தி ஐயா..

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 3. நன்றி அண்ணா அயலக இந்தியர் தினம் என்கிற ஒரு கருப்பொருளை அறிமுகம் செய்தமைக்கு. ஏனெனில் 12 ஆண்டு காலம் அயலக இந்தியனாய் வாழ்ந்த எனக்கு இப்படி ஒரு தினம் இருப்பதே தெரியாது. மீண்டும் நன்றி!

  ReplyDelete
 4. அருமையான செய்தி. தாங்கள் நினைப்பதுபோல நம்மவர்கள் நம் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கின்றார்களா என்பது தற்போது கேள்விக்குறியாக உள்ளது. தாய்நாட்டில் உள்ளவர்களே தடம் மாறி போகும்போது அயலக இந்தியர்களின் வாழ்க்கை முறை நாம் எதிர்பார்ப்பது போல அமையுமா என்பது ஐயமே ஐயா.

  ReplyDelete