Sunday 5 January 2020

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 15-20


பாடல் எண்:15 
photo courtesy: Google
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
    
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாய் அறிதும்
    
வல்லீர்கள் நீங்களே, நான் தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கு என்ன வேறு உடையை?
    
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்;
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
    
வல்லானை, மாயானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்.
 
அருஞ்சொற்பொருள்: எல்லே- என்னே; சில்லென்று- சளசளவென்று; வல்லை- சாமர்த்தியசாலி; கட்டுரை- கட்டுக்கதை; ஒல்லை- சீக்கிரம்; வேறு என்ன உடையை- வேறு என்ன வேலை; போந்தார்- வந்தார்; வல்லானை>வல் ஆனை>வல் யானை- குவலயபீடம் என்னும் யானை; மாற்றார்- பகைவர்; மாற்று- வலிமை; மாயன்- கண்ணன்.

   உள்ளே விழித்தாலும் எழுவதற்கு மனமில்லாமல் படுக்கையில் கிடக்கும் பெண்ணுக்கும், வெளியே அவளை எழுப்பிக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் இடையே நடக்கும் சுவையான உரையாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

இனி உரையாடலைக் கேட்போம்.

  “இளம் கிளி போன்று கொஞ்சிப்பேசும் அழகிய பெண்ணே!  இன்னுமா நீ உறங்குகிறாய்?”

 “அருமைப் பெண்களே! சளசளவென்று மீண்டும் மீண்டும் என்னை அழைக்காதீர். நானே எழுந்து வருகிறேன்.”

 “நீ சரியான சாமர்த்தியசாலிதான்! வக்கணையாய்ப் பேசுகிறாய்! நீ பேசும் கட்டுக்கதைகள் என்னவென்று எங்களுக்கு முன்னரே தெரியும்.”

 “சரி சரி நீங்களும் வல்லவர்தாம். நீங்கள் சொல்வது போல் நான் சாமர்த்தியசாலியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.”

  “அடி பெண்ணே! சீக்கிரம் எழுந்து வா. எங்களுடன் சேர்ந்து நீராடுவதை விட உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?”

“ அதுவெல்லாம் ஒன்றுமில்லை. எல்லோரும் வந்து விட்டார்களா?”

  “எல்லோரும் வந்து விட்டார்கள். நீ வேண்டுமானால் வந்து எண்ணிச் சரிபார்த்துக்கொள். கம்சன் ஏவிய ‘குவலயா பீடம்’ என்னும் யானையைக் கொன்றவனும், எதிரிகளை அழிக்கவல்லவனும் ஆகிய கண்ணனைப் பாடி மகிழ்வோம். உடனே எழுந்து வா.”  
    
பாடல் எண்: 16 
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
    
கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
    
ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
    
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
    
நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்.

அருஞ்சொற்பொருள்:
நாயகன் - ஆயர்கள் தலைவன்; தோன்றும் - காணப்படும்; அறைபறை - கொட்டும் பறை; நென்னல் - நேற்று; வாய் நேர்ந்தான் - வாக்கு கொடுத்து இருக்கிறான்; முன்னம் முன்னம் மாற்றாதே - முதல் முதலில் மறுக்காதே;
நேய நிலைக் கதவம் நன்மை செய்யும் நிலைக்கதவு

 விளக்கவுரை:
   ஆயர்குலத் தலைவன் நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே! வண்ணக் கொடி பறக்கும்  வாயிலைக் காப்பவனே! முத்து, வைரம் போன்ற மணிகளால் இழைக்கப்பட்ட நெடுங்கதவைத் திறப்பாயாக.

   ஆயர்பாடிச் சிறுமியர் ஆகிய எமக்குக் கொட்டும் பறை ஒன்றைப் பரிசாகக்  கொடுப்பதாய் மணிவண்ணனாகிய கண்ணன் நேற்றே எம்மிடம் சொல்லியிருந்தான். இந்த அதிகாலை வேளையில் அதைப் பெறுவதற்காக உடல்தூய்மையும், உள்ளத் தூய்மையும் உடைய நாங்கள் இம் மாளிகைமுன் வரிசைகட்டி நிற்கின்றோம். அதற்கு முன்னதாகக் கண்ணனைக் கண்டு அவனைத் துயில் எழுப்பும் வகையில் நாவினிக்கத் திருப்பள்ளி எழுச்சி பாடவும் விரும்புகிறோம்.

  வாயிலைக் காக்கும் வல்லமை உடையவனே! முதல் முதலில் உன் வாயால் எதையாவது சொல்லி, எம் வேண்டுகோளை ஏற்க மறுத்துவிடாதே. அருள் கூர்ந்து எங்களுக்கு நன்மை செய்யக் காத்திருக்கும் இந்த நிலைக்கதவின் நீண்ட தாழ்ப்பாளை நீக்கி மணிக்கதவுகளைத் திறந்து எம்மை உள்ளே செல்ல அனுமதிப்பாயாக.

கூடுதல் விளக்கம்:
   வாயிற்காவலனை ‘அம்மா’ என அழைப்பது பால் மயக்கமாகும். அன்பு மிகுதியால் பெண் பிள்ளையை வாடா என அழைப்பதும், ஆண்மகனை வாம்மா என அழைப்பதும் இன்றும் நடைமுறையில் உள்ள பேச்சு வழக்காகும்.
  இப் பாடலில் பறை என்னும் சொல் ஒரு குறியீடாக அமைந்துள்ளது. பறை தருவான் என்றால் வேண்டுதலை நிறைவேற்றுவான் என்று பொருள். இங்கே கன்னிப்பெண்கள் நல்ல கணவனை அடைய வேண்டுகிறார்கள்.
   
பாடல் எண்: 17 
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
    
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
    
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
    
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
    
உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்

அருஞ்சொற்பொருள்:
அம்பரம் - ஆடை, ஆகாயம்;கொம்பனார்க்கு - வஞ்சிக் கொடி போன்ற பெண்களுக்கு; கொழுந்தே - துளிர்போன்ற மிக்க அழகுள்ளவளே; அறிவுறாய் துயில் நீங்கி எழுவாய்;  உம்பர் - தேவர்; கழல் - அணிகலன்; உம்பி - தம்பி; 

விளக்கவுரை:
    எங்களுக்கு ஆடை, தண்ணீர், உணவு  முதலியவற்றைக் கொடையாகத் தந்தருளும் தலைவனாகிய நந்தகோபனே! கண்விழித்து எழுக!
   வஞ்சிக்கொடி போன்ற பெண்களுக்கெல்லாம் தலைவியாய் விளங்கும் துளிர் போன்று அழகுடைய யசோதையே! எங்கள் குலவிளக்கே! கண்விழித்து எழுக!
     அன்று வாமன அவதாரம் எடுத்து அண்ட வெளியைக் குறுக்காகக் கிழித்து ஓர் அடியில் அளந்தவனே! தேவர்களின் தலைவனே! கார்மேகக் கண்ணா! கண்விழித்து எழுக!
   சிறந்த பொன் அணிகலன்களை அணிந்த வலிமையான கால்களைக் கொண்ட பலதேவனே! சீர்மிகு செல்வா! நீயும் உன் தம்பி கார்வண்ணக் கண்ணனும் நாங்கள் இங்கே வந்து திருப்பள்ளியெழுச்சி பாடிக்கொண்டிருப்பதை அறிந்தும் உறங்கலாமா? கண்விழித்து எழுக.
கூடுதல் விளக்கம்:
     பொதுவாக மனிதனின் அடிப்படைத் தேவைகளை உணவு, உடை, இருக்க இடம் என்று குறிப்பிடுவது வழக்கம். ஆனால் ஆண்டாள் நாச்சியார் உணவு, உடை நீர் என்பவற்றை அடிப்படைத் தேவைகள் எனக்  குறிப்பிடுகின்றார். மேலும் மனிதனின் மானத்தைக் காப்பது ஆடை என்பதால் அதை முதலில் சொல்கின்றார். ஒரு மனிதன் உணவு இல்லாமல் கூட சிலநாள் வாழலாம்; நீர் அருந்தாமல் ஒருநாள் கூட இருக்க முடியாது. எனவேதான் ஆடைக்கு அடுத்துத் தண்ணீரை வைக்கின்றார். மனிதன் இறையுணர்வு குறைந்து இரையுணர்வு மிகுந்து வாழ்தல் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் உணவை இறுதியில் குறிப்பிடுகின்றார்.

பாடல் எண்: 18
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
   நந்தகோபன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்.
   வந்து எங்கும் கோழி அழைத்தன; காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்.
   பந்து ஆர் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
   வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

அருஞ்சொற்பொருள்: கந்தம்- நறுமணம்; மாதவி- குருக்கத்திக் கொடி;    கடை- கதவு; பல்கால்- பலமுறைகள்; மைத்துனன்- கணவன்; வளை- வளையல்.

விளக்கவுரை:
   மதம் கொண்ட யானையின் அளவுக்கு வலிமையுடையவனும், போரில் புறமுதுகிட்டு ஓடாத தோள்வலிமை உடையவனும் ஆகிய நந்தகோபனின் மருமகளே! நப்பின்னையே! நறுமணம் கமழும் நலம் மிகுந்த கூந்தலை உடையவளே! கண் விழித்து எழுந்து கதவைத் திறப்பாயாக!

   இது நீ எழுவதற்குரிய அதிகாலை நேரம்தான். சேவல் கூவுகிறது; குருக்கத்திக் கொடி படர்ந்துள்ள பந்தலின் மேலிருந்து குயில்களும் அடிக்கடி கூவி அழைக்கின்றன.

   பந்து விளையாடுவதற்குப் பாங்கான விரல்களை உடையவளே! ஆயர்பாடிச் சிறுமியராகிய நாங்கள் உன் கணவனாகிய கண்ணனைக் கண்டு அவன் புகழ் பாடவே வந்துள்ளோம். அழகிய செந்தாமரை போன்ற வளைக் கைகளால், வளையல்கள் ஒலிக்குமாறு திகழ்மணிக் கதவுகளைத் திறப்பாயாக! 
 
பாடல் எண்: 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்!
மைத் தடங்கண்ணினாய், நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.

   அருஞ்சொற்பொருள்: கோடு+கால்=கோட்டுக்கால்; கோடு- யானைத் தந்தம்; பஞ்சசயனம்- பஞ்சணை. அழகு, மென்மை, வெண்மை, நறுமணம், குளிர்ச்சி ஆகிய ஐந்து சிறப்புகளைக் கொண்டது; அலர் பூ- மலர்ந்த பூ; தடங்கண்- பெரிய கண்; எத்தனை போதும்- கணப்பொழுதும்; தத்துவம்- உண்மை; தகவு- இயல்பு.

விளக்கவுரை:
   கருமை வண்ணக் கண்ணனின் பள்ளியறைக் கதவுகள் திறக்கவே இல்லை. கண்ணபிரானைக் காணும் கருத்துடன் ஆயர்பாடிச் சிறுமியர் கால்கடுக்க நின்று அவனது ஆயிரம் திருநாமங்களை அடுக்கிச் சொல்கிறார்கள். நேரம் செல்லச் செல்ல பொறுமையிழந்த அவர்கள் தம் மனக்கண்ணால் கண்ணனின் பள்ளியறையை நோட்டம் விடுகிறார்கள்.
அவ்வாறு அவர்கள் கண்ட காட்சியே ஆண்டாளின் மனத்தில் அழகிய பாடலாய் அரும்புகிறது.

    யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட அழகிய கட்டிலில், மென்மையான பஞ்சணையின் மேல், குத்து விளக்கின் குளிர் ஒளியில், கொத்துக் கொத்தாய்ப் பூத்த நறுமலர்களைத் தலையில் சூடியுள்ள நப்பின்னைப் பிராட்டியை, உன் மார்பில் விளங்கும் நறுமலர் மணக்க, மார்போடு மார்புடன் தழுவியபடி, நீள்துயில் கொள்ளும் நெடியோனே! உன் திருவாய் திறந்து எங்கள் குறைகள் யாதெனக் கேட்க மாட்டாயா?

   மை தீட்டப்பெற்ற பெரிய கண்களையுடைய நப்பின்னைப் பிராட்டியே! நீ உன் கணவனைத் துயில் எழ விடமாட்டாய் போலும்! அவனுடைய அணைப்பிலே ஆன்ம சுகம் காணும் நீ ஒரு கணமேனும்  பிரிந்திருப்பதைத் தாங்கமாட்டாய் போலும்!. உனக்குக் கிடைக்கும் அந்த ஆன்ம சுகத்தை நாங்களும் பெற வேண்டாமா?  இயல்புக்கு மாறாக நீ செயல்படுவது உண்மை ஆகாது. எனவே சற்று மனமிரங்கிக் கண்ணனை நாங்கள் கண்ணாரக் கண்டு உரையாடும் பேற்றினை உவந்து அளிப்பாயாக.

கூடுதல் விளக்கம்:
 பிராட்டி மூலமாகப் பிரானைக் காணலாம் என்பது வைணவக் கோட்பாடு. அம்மை வழியே அப்பனைக் காணலாம் என்று சைவ சமயமும் கூறும். அதனால்தான் இப்பாடலில் கண்வளரும் பிரான் கண்விழிக்கப் பிராட்டி இரங்கியருள வேண்டும் என்னும் பொருள் சார்ந்த வரிகள் முத்தாய்ப்பாய் அமைந்துள்ளன. மேலும் அவ் வரிகளில் ‘தத்துவம் அன்று தகவு’ என ஒரு நுட்பம் அமைந்துள்ளதை ஆழ்ந்து படிப்போர் அறிய முடியும்.    

பாடல் எண்:20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
  கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
   வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்கும்
   நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
  இப்போதே எம்மைநீ ராட்டேலோர் எம்பாவாய்.

அருஞ்சொற்பொருள்: முப்பத்து மூவர்- முப்பத்து மூன்று தலைவர்களையுடைய முப்பத்து முக்கோடி தேவர்கள்; அமரர்- தேவர்; கப்பம்- துன்பம்; கலி- கலியுகம்; செப்பம்- சிறப்பு; திறல்- வலிமை; செற்றார்- பகைவர்; செப்பு- சிமிழ்; மருங்கு- இடை; உக்கம்- விசிறி; தட்டொளி- கண்ணாடி.

விளக்கவுரை:
   கலியுகக் கண்ணா! நீயாக முந்திச் சென்று தேவர்களின் துன்பம் துடைத்தாயே! “எங்கள் துன்பம் போக்கி அருள்க” என்று நாங்கள் கண்ணீர் மல்க உன்னிடம் கதறி அழுவதைச் செவி சாய்க்காமல் உறங்குகிறாயே! எங்கள் துயர் களைய துயிலெழுந்து வருக.

 நீ  காக்கும் கடவுள் என்னும் சிறப்புடையவன்; காப்பதற்கான பேராற்றலும் உடையவன். உன்னை எதிர்க்கும் பகைவர்க்குச் சுட்டெரிக்கும் சூரியன் போன்றவன். எம்மைப் போன்ற எளியவர்க்கு அப்படி இல்லாமல் குளிர்ச்சி நல்கும் குளிர்நிலா போன்றவன். வினையறுக்கும் விமலா! துயில் நீங்கி எழுந்தருள்க!

    சிறுமியர் வைத்து விளையாடும் சிமிழ் போன்ற அழகிய கொங்கைகளை உடையவளும், சிவந்த வாய், சிறப்பான சிற்றிடை கொண்டவளும் ஆகிய நப்பின்னையே! பெண்களில் சிறந்தவளே! திருமகளே! கண் விழித்து எழுக! எமக்கு விசிறியும் கண்ணாடியும் தருக. உன் மனத்துக்கினிய மணாளன் மாதவனை எம்முடன் பனிநீராட வரச்செய்க.

கூடுதல் விளக்கம்: விசிறி என்பது ஒரு குறியீடாகும். தானே தன் மன மாசை அகற்றும் ஆன்ம சுத்தியாகும். கண்ணாடி என்பதும் குறியீடே யாகும். தன்னைத் தான் நோக்கித் தான் யார் என ஆராயும் உத்தியைக் குறிக்கும்.
   -முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.
                     &&&&&&&&&&&&&&&&&&&&&&


1 comment: