Thursday 4 April 2019

எனக்கு எட்டியபுரமான எட்டையபுரம்

   பாரதி பிறந்து 137 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் தன் இளைமைப் பருவத்தில் ஓடி விளையாடித் திரிந்த அந்த எட்டயபுரத்து மண்ணைப் பார்க்க வேண்டும் என்பது என் நீண்டகால கனவாக இருந்தது. ஒரு தமிழாசிரியர் என்ற முறையில்  என் பணிக்காலத்தில்  ‘இளசை நாடு’ எனப்படும் எட்டையபுரத்துக்குச் செல்லவில்லையே சென்று பார்த்து மாணவர்க்குச் சொல்லவில்லையே என்ற குற்ற உணர்வும் எனக்கு உண்டு.

    என் பெரிய சம்பந்தி சரவணப்பெருமாள் அவர்களின் அருமையான ஏற்பாட்டில் அண்மையில் எட்டையபுரம் செல்லும் வாய்ப்பு எனக்கும் என் மனைவிக்கும் வாய்த்தது. இத்தனை ஆண்டுகாலம் எனக்கு எட்டாப்புரமாக இருந்த எட்டயபுரம்  கண்ணில் பட்டமாத்திரத்தில் என் மெய் சிலிர்த்தது. இந்தக் கரிசல் காட்டிலிருந்தா தன் பாட்டால் வெள்ளையனை ஒறுத்த ஒரு நெருப்புக் கவிஞன் பிறந்தான் என்று என் மனம் எக்காளமிட்டது!

    இந்தக் கரிசல் மண்ணில் போர்க்குணம் கொண்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை தோன்றினார்; வீரபாண்டிய கட்டபொம்மன் தோன்றினான். வெள்ளையனை ஒரு கை பார்க்கவேண்டும் என்று வெகுண்டெழுந்த பாரதியும் தோன்றினான்.

    வ.உ.சி. தோற்றுவித்த சுதேசி கப்பல் கழகத்தை ஒழித்துக் கட்டியதோடு நில்லாமல் அவரைச் சிறையில் தள்ளிச் செக்கிழுக்க வைத்தவன் அன்றைய நெல்லை மாவட்டத் துணை ஆட்சியராய் இருந்த ஆஷ் துரை என்பவன். அவனைச் சுட்டு வீழ்த்தித் தானும் சுட்டுக்கொண்டு மாய்ந்தான் வாஞ்சிநாதன். இது குறித்து பாரதிக்கு எதுவும் தெரியாது என்று பாரதி ஆய்வாளர் பலரும் எழுத, வாஞ்சியின் திட்டம் பாரதிக்குத் தெரியும் என்னும் உண்மையை முதல் முதலாய்ப் போட்டு உடைத்தவர் தொ.மு.சி.ரகுநாதன்.(பார்க்க: பாரதியின் காலமும் கருத்தும் பக்.372-375)

   பாரதி ஓர் அகிம்சாவாதி என ஆய்வாளர்கள் பலரும் கூறியிருந்ததை மறுத்துப் பேசிய முதல் ஆள் தொ.மு.சி.ரகுநாதன் ஆவார். பாரதி என்ற அக்னி குஞ்சை சுடர் விட்டு எரியும் நெருப்புக் கோளமாக மாற்றியது நிவேதிதா தேவி என்னும் ஆங்கிலப் பெண்மணி என்பதைச் சான்றுகளுடன் நிறுவுகிறார் இவர்.

  இத்தகைய புரட்சிக் கவி பிறந்த வீட்டைக் காண்பதற்குக் கிடைத்த வாய்ப்பை என்னென்பேன்! என்னென்பேன்!

   நாங்கள் பாரதியின் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தபோது ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பாரதியார் பாடலை உணர்ச்சி பொங்க பாடிக்கொண்டிருந்தான். எனக்கு நன்கு அறிமுகமான ஆதித்தியா என்னும் பெயருடைய கரூர் இளைஞன் அவன் என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

    அந்த இளைஞனோடு சேர்ந்து என் சம்பந்தியும் பாரதியார் பாடல்களை கேட்டாரைப் பிணிக்கும் வகையில் பாடினார். அவரோடு அவர் தம்பி துரைராஜ் அவர்களும் சேர்ந்து ஏழு கட்டையில் பாட கச்சேரி களை கட்டியது.
  பின்னர் பாரதி வாழ்ந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தோம். ஐந்து வயது கூட ஆகாத பாரதி தன் அருமைத் தாயை இழந்து ஆற்றாது அழுது நின்றதும் இந்த வீட்டில்தான்.

     எட்டையபுர மன்னரின் உதவியுடன் பஞ்சாலை ஒன்றைத் தொடங்கும் திட்டத்தோடுதான் பாரதியின் தந்தை சின்னசாமி தன் சொந்த ஊரான சீவலப்பேரியிலிருந்து எட்டயபுரத்திற்குக் குடியேறினார். வெள்ளையரின் சதியால் அவர் தொடங்கிய ஆலை பெரும் நட்டத்தைச் சந்திக்க,  தன் பெரும் செல்வத்தை இழந்து வறுமை வாய்ப்பட்டு மன உளைச்சலால் மாண்டு போனது இந்த வீட்டில்தான். அப்போது பாரதிக்கு வயது பதினாறு. அவர் ஏழு வயது செல்லம்மாவைக் கரம்பிடித்து ஓர் ஆண்டே ஆகியிருந்தது.
  தந்தை போயினன்; பாழ்மிடி சூழ்ந்தது
தரணி மீதினில் அஞ்சல்’ என்பார் இலர்;
சிந்தையில் தெளிவிலை; உடலில் திறனும் இலை
எந்த மார்க்கமும் தோன்றிலது; என் செய்வேன்?
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?”

என்று நிலைகுலைந்து பாடிப் புலம்பியதும் இந்த வீட்டில்தான்.

 தன் படிப்பைத் தொடர பண உதவி கேட்டு எட்டையபுரம் மன்னருக்கு விண்ணப்பம் போட்டும் ஒரு செல்லாக் காசு கூட கிடைக்கவில்லை.
“கைப்பொருள் அற்றான் கற்பது எவ்வகை?
அரும்பொருள் உதவிநீ அனைத்தும் அருள்வை
என்னை இச் சிறுவன் இயம்புவது என்னாது
மன்ன! நின் அருளான் அடியனை வாழ்வித்து
எற்கு ஈந்தருளுதிநீ இனிது வாழ்கவே!

என்று அந்த விண்ணப்பம் முடியும். முழுப்பாடைலையும் படிப்போருக்குக் கண்ணீர் ஆறாய்ப் பெருகும். இளமையில் வறுமை எவ்வளவு கொடுமையானது என்பது இளமையில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தோருக்கு மட்டுமே புரியும்.

   நானும் எனது இளமைப் பருவத்தில் வறுமையைச் சந்தித்தவன்தான். “நெருப்பின் மீது படுத்துக்கூட உறங்க முடியும். வறுமையுடன் ஒருவன் படுத்து நிம்மதியாக உறங்க முடியாது’ என்று வள்ளுவன் உணர்ந்துதான் சொல்லியிருக்கிறான்.

   இப்படி அவன் வறுமையில் வாழ்ந்த கதையை மனத்தில் அசைப் போட்டபடி பாரதியின் சிலைமுன் சிலையாக அமர்ந்திருந்தேன். பிறகு எழுந்து நின்று இருகரம் கூப்பி அவனுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்து, வாயிலைத் தாண்டி வெளியில் வரும்போது அவன் கால்பட்ட வாயிற்படியை கரம் தொட்டு வணங்கினேன்.

    அடுத்து, பாரதி மணிமண்டபத்தைப் பார்த்தோம். மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படும் இடமாக இருந்தது. அரிய ஒளிப்படங்கள் நிறையவே இருக்கின்றன.

   அருகில் பாரதி தொடர்பான ஆவணக்காப்பகம் ஒன்று இருந்தது. நாங்கள் சென்ற நேரத்தில் அது பூட்டிக் கிடந்தது. இதை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தினர் உருவாக்கிப் பராமரித்து வருகின்றனர் என்பதை அறிய மகிழ்ச்சியாக இருந்தது.

   அப்படியே உமறுப்புலவர் மணிமண்டபத்தையும், செவ்வியல் இசை உலகின் மும்மூர்த்திகளில் ஒருவராக அறியப்படும் முத்துசாமி தீட்சிதர் நினைவிடத்தையும் பார்த்தேன்.




   இதனால் சகலருக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால் தமிழராகப் பிறந்த அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது எட்டையபுரம் சென்று இந்த இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்பதே.

    

6 comments:

  1. பரவசமூட்டும் அனுபவம் ஐயா... கண்டிப்பாக செல்வேன்... நன்றி...

    ReplyDelete
  2. மறக்க இயலாத அனுபவம் ஐயா
    ஒருமுறை சென்று பார்க்க வேண்டும்

    ReplyDelete
  3. அருமையான அனுபவம் ஐயா! கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம். தங்கள் படங்களும் விவரணமும் அருமை.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  4. நான் சென்றுவந்துள்ளேன் ஐயா. உங்களால் இன்று மறுபடியும் செல்லும் வாய்ப்பு.

    ReplyDelete
  5. உணர்ச்சிபூர்வமான கட்டுரை ... எட்டயபுரத்திற்கே வாசகரை இட்டுச்சென்று காட்டுகின்ற நடை ... இறையருளால் பாரதி வாழ்ந்த அம்மண்ணை நானும் விரைவில காணவேண்டும் என்ற அவா மேலோங்குகிறது ...!

    ReplyDelete
  6. P V Vaithyanathan19 June 2022 at 15:43

    உணர்ச்சிபூர்வமான கட்டுரை ... எட்டயபுரத்திற்கே வாசகரை இட்டுச்சென்று காட்டுகின்ற நடை ... இறையருளால் பாரதி வாழ்ந்த அம்மண்ணை நானும் விரைவில காணவேண்டும் என்ற அவா மேலோங்குகிறது

    ReplyDelete